சென்னை, மே 21- “தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தால் தூய சக்தி ஆட்சி நடைபெறும்; ஒரு பைசா கூட ஊழல் நடக்காது” என்று தேர்தல் பிரசாரங்களில் அக்கட்சியின் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். பொதுமக்கள் பலரும் இதனை நம்பி வாக்களித்த நிலையில், தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே ஊரக உள்ளாட்சித் துறையில் நடந்துள்ள ஒரு ‘மின்னல் வேக’ ஒப்பந்தம் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
6 மணி நேர செயல்பாடு
காஞ்சிபுரம் மாவட்டம், கோனேரிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரப்பேட்டை கிராமத்தில், ரூ.16 லட்சத்து 83 ஆயிரத்து 194 மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக காஞ்சிபுரம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் இணைய வழி ஒப்பந்தம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதில் ஆச்சரியம் என்ன வென்றால், நேற்று முன்தினம் (19.5.2026) காலை 9 மணிக்கு இந்த ஒப்பந்தம் அறிவிப்பு வெளியாகி யுள்ளது. மாலை 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், மாலை 4 மணிக்கே ஒப்பந்தம் திறந்து பணி ஆணை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பத்திரிகைகளில் எந்த ஒரு விளம்பரமும் செய்யப்படாமல், வெறும் 6 மணி நேரத்திற்குள் ஒட்டுமொத்த ஒப்பந்தம் செயல் முறையையும் முடிக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருந்தது அதிகாரி களையே வியக்க வைத்துள்ளது.
தற்போது தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சராகப் புஸ்சி ஆனந்த் பொறுப்பேற்று வெறும் 2 நாட்களே ஆகும் நிலையில், அவரது துறையின்கீழ் இந்த ‘உலக மகா அதிசயம்’ நடந்துள்ளது. உலகிலேயே இவ்வளவு குறுகிய காலத்தில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்படுவது இதுவே முதல்முறை எனத் துறை சார்ந்த அதிகாரிகளே முணுமுணுக்கின்றனர். நேர்மையான ஆட்சி என்று கூறிவிட்டு, ஆரம்பமே இப்படி ஒரு முறைகேடான நகர்வுடன் துவங்குவதா எனச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
ஒப்பந்தம் ரத்து
இந்த வினோத ஒப்பந்தம் குறித்த ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, காட்டுத்தீயாய் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் இதைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதை அடுத்து, நிலைமையைச் சமாளிக்க அந்த சர்ச்சைக்கரிய ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், “ஆரம்பமே அமர்க் களமான ஊழல் புகாரோடுதான் தொடங்க வேண்டுமா?” என்ற காரசாரமான விவாதங்கள் தற்போது தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
