சென்னை, மே 21- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் மே 23-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தக் கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இக்கூட்டத்தில் ஜூன் 3-ஆம் தேதி வரவிருக்கும் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் மற்றும் இளைஞர் அணியின் அடுத்தகட்ட ஆக்கப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த முக்கிய கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கள ஆய்வு
தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய திமுக தலைவரால் அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழு, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தனது ஆய்வைத் தொடங்கியுள்ளது. மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைவரையும் இக்குழுவினர் தனித்தனியாகச் சந்தித்துக் கருத்துகளைக் கேட்டு வருகின்றனர்.
இந்த ஆய்வுக்குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் இட்ட கட்டளை திமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:
“கள ஆய்வு குழுவினரிடம் திமுகவினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை; அதைக் குறித்து வைத்து அறிக்கையில் வழங்குங்கள். நிர்வாகிகளின் உண்மை உணர்வு மட்டுமே எனக்குத் தேவை.”
இந்தக் குழுவினர் தங்களது இறுதி அறிக்கையை வரும் ஜூன் 5-ஆம் தேதி மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர். இதற்கிடையில், “தோல்வி நிரந்தரமல்ல, அடுத்த தேர்தலில் நாம் நிச்சயம் வெல்வோம்” என மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இதற்கிடையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
