கொல்கத்தா, மே 7 மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மேற்குவங்க முதலமைச்சர் பதவியி லிருந்து விலக மறுத்த மம்தா, “அவர்கள் என்னை பதவிநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தட்டும் என்றும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து தேர்தலை பாஜக கொள்ளையடித்துவிட்டதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் கூறியுள்ளார். .
பாஜக மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் இணைந்து தேர்தலில் முறைகேடு (Rigging) செய்ததாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாகவும், தானும் தனது அமைச்சரவை சகா சந்திரிமா பட்டாச்சார்யாவும் வழக்குரைஞர்களாக மீண்டும் பணியாற்றி இந்த வழக்கை நேரில் நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் முறையில் முறைகேடுகள் நடந்ததாகவும், குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றியை “திருடியுள்ளதாகவும்” மம்தா கூறி யுள்ளார். மக்களின் தீர்ப்பால் தான் தோற்கவில்லை என்றும், ஒரு சதித் திட்டத்தாலேயே தனது கட்சி தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறி, முதலமைச்சர் பதவியிலிருந்து விலக அவர் மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி மாநில ஆளுநரிடம் தேர்தல் முடிவுகளுக்கான அரசிதழ் அறிவிப்பைச் சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் பாஜக புதிய அரசை அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, வாக்கு எண்ணும் பணியில் ஒன்றிய அரசு ஊழியர்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு? : உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது திரிணாமுல் காங்கிரஸ்
Leave a Comment
