கான்பெரா, ஏப்.30- ஆஸ்திரேலியாவின் இதழியல் துறையை பயன்படுத்த, பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மெட்டா, கூகுள், டிக்டாக் போன்றவை தங்களின் நியாயமான பங்கை உள்ளூர் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார். மேலும், இதற்குரிய பணத்தை செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதை கட்டாயமாக்கும் வகையில், உள்ளூர் நிறுவனங்களுடன் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையெனில், நிதி அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஆஸ்திரேலியா அரசு எச்சரித்துள்ளது. இதற்கான சட்ட வரைவை அந்நாட்டு அரசு முன்மொழிந்துள்ளது.
இதன்படி, ஆஸ்திரேலிய ஊடகங்களுடன் ஒப்பந்தம் செய்ய தவறினால், மெட்டா, கூகுள், டிக்டாக் போன்ற நிறுவனங்கள் பல கோடி ரூபாயை அபராதமாக கட்ட நேரிடும். ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் கூறியதாவது: தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆஸ்திரேலியாவின் இதழியல் துறை வாயிலாக பலன் பெறுகின்றன. ஆனால், இதற்கான நியாயமான பங்கை அந்நிறுவனங்கள் செலுத்துவதில்லை.
தொழில்நுட்ப தளங்கள், இதழியல் துறை வாயிலாக பெறும் செய்திகளுக்கு தங்களின் பங்களிப்பை உறுதி செய்ய அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறோம். ஏனெனில், ஆஸ்திரேலிய செய்திகளுக்கும், பத்திரிகையாளர்களால் எழுதப்படும் கட்டுரைகளுக்கும் ஈடு இணை வேறெதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சட்ட வரைவு மீதான பொதுமக்களின் கருத்து கேட்பு, மே 18 வரை நடக்கிறது. இதன்பின், ஜூலை 2இல் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

