புதுடில்லி, ஏப்.25 மகாராட்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து, தற்போது பஞ்சாப் மற்றும் டில்லியில் செல்வாக்குடன் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியிலும் பா.ஜ.க தனது ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை அரங்கேற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட ராகவ் சதா, சந்தீப் பதக் உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
பா.ஜ.க-வில் இணைந்த 7 பேர் யார்?
மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு இருந்த 10 உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான (7 பேர்) உறுப்பினர்கள் தற்போது பா.ஜ.க-விற்குத் தங்களை மாற்றிக்கொண்டனர். அவர்கள்: ராகவ் சட்தா ஹர்பஜன் சிங் (முன்னாள் கிரிக்கெட் வீரர்), சுவாதி, மாலிவால், சந்தீப் பதக், அசோக் மிட்டல், விக்ரம் சஹ்னி, ராஜேந்திர குப்தா இவர்களில் ராகவ் சதா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோர் நேற்று (24.4.2026) டில்லி பா.ஜ.க தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து முறைப்படி பா.ஜ.க-வில் இணைந்தனர்.
கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆவேசம்
இந்தத் திடீர் அரசியல் மாற்றத்திற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால், “பா.ஜ.க மீண்டும் பஞ்சாப் மக்களுக்கு அநீதி இழைத்துவிட்டது” எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பகவந்த் மான் (பஞ்சாப் முதலமைச்சர்), “சிவசேனா, காங்கிரசை உடைக்கப் பயன் படுத்திய அதே ‘வாஷிங் மெஷின்’ தற்போது பஞ்சாப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் துரோகிகளைப் பஞ்சாப் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனச் சாடியுள்ளார்.
சஞ்சய் சிங் (எம்.பி): பா.ஜ.க-வில் இணைந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களையும் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மகாராட்டிரா பாணி திட்டம்
ஏற்ெகனவே மகாராட்டிராவில் ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனாவையும், (சமீபத்தில் விமான விபத்தில் காலமான) அஜித்பவார் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் பா.ஜ.க உடைத்திருந்தது. அதே பாணியை இப்போது பஞ்சாப்பிலும் பா.ஜ.க கையில் எடுத்துள்ளது. 2027 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, ஆம் ஆத்மியின் பலத்தைக் குறைக்க பா.ஜ.க எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, அம்மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் ஆம் ஆத்மி தனது பெரும்பான்மை பலத்தை இழந்திருப்பது அக்கட்சிக்கு தேசிய அளவில் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

