பிரதமர் மோடியின் மாய்மால பிரச்சாரத்துக்கு, மன்னார்குடி, ஒரத்தநாடு தொகுதிகளில் கழகத் தலைவர் பதிலடி!

மகளிர் இட ஒதுக்கீட்டைப் பற்றி தமிழ்நாட்டுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை!
தமிழ்நாட்டில் 33% அல்ல; உள்ளாட்சித் துறைகளில்
மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது! 

நீடாமங்கலம், ஏப்.21 ‘‘33% மகளிர் இட ஒதுக்கீடு பற்றி தமிழ்நாட்டுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் இட ஒதுக்கீட்டில் முன்னோடி! 33% அல்ல; பெண்கள் யாரும் போராடாம லேயே, உள்ளாட்சித் துறைகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது’’ என்று, தொகுதி மறு வரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதை திரித்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டதாக பொய்ப் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடிக்கு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலடி கொடுத்து உரையாற்றினார்.

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின்
வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா அவர்களை ஆதரித்து, திராவிடர் கழகத்தின் சார்பில் தேர்தல் பரப்புரை செய்வதற்காக, நேற்று (20.04.2026) மாலை 5.30 மணிக்கு நீடாமங்கலம், பெரியார் சிலை அருகில், பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்வில், மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமை ஏற்க, நீடாமங்கலம் ஒன்றியத் தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு அனைவரையும் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டக் காப்பாளர் சிவஞானம், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ்.அன்பழகன், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் இராஜமாணிக்கம், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் அசோகன், தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்தன், நீடாமங்கலம் மேனாள் ஒன்றியத் தலைவர் சோம.செந்தமிழ்செல்வன், தி.மு.க. பேரூர் செயலாளர் ராமராஜன், கழக பொதுக்குழு உறுப்பினர் கோ.கணேசன், நீடாமங்கலம் நகரச் செயலாளர் இரா.அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கழகத் தலைவர் மாலை 6:30 மணிக்கு, நிகழ்விடத்துக்கு வருகை தந்தார். அப்போது, கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உரையாற்றிக் கொண்டிருந்தார். நிறைவாக, கழகத் தலைவர் உரையாற்றினார்.

கழகத் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தமது உரையை, ‘‘நான் கடந்த 6 ஆம் தேதி முதல், நாள்தோறும் பரப்புரை செய்து வருகிறேன். ஒரு நாள் கூட விடுமுறை எடுத்துக் கொண்டதில்லை’’ என்று, உற்சாகமாகவும், சிரித்தபடியும் தொடங்கினார். அதைக் கேட்டு மக்களும் சிரித்து விட்டனர். தொடர்ந்து அவர், ‘‘நீடாமங்கலம் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் மகளிர் உற்சாகமாக கலந்து கொள்கிறார்கள். நமது வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா மூலம், இந்த மாவட்டத்திற்கு உரிய பெருமை சேர்ந்திருக்கிறது’’ என்று சொல்லி முடிப்பதற்குள், மக்கள் ஆரவாரத்துடன் கைகளைத் தட்டி, தங்கள் உற்சாகத்தையும், ஆதரவையும் வெளிக்காட்டினர். மேலும் அவர், வருகை தந்திருந்த மக்களைச் சுட்டிக்காட்டி, ‘‘மூன்று தலைமுறைகள் இங்கே இருக்கின்றன’’ என்று சொல்லிவிட்டு, அந்த மூன்று தலைமுறைகளை ‘‘பாட்டி, அம்மா, பேத்தி’’ என்று வரிசைப்படுத்தினார். தொடர்ந்து, ‘‘இந்த மூன்று தலைமுறையினரும் இந்த ஆட்சியால் பயன் ெபற்றுக் கொண்டிருக்கின்றனர்’’ என்று சொன்னதும், ஆரவாரமும், கைதட்டலும் பெரிதாக எழுந்து அடங்கின.

கூட்டத்துக்குப் பாதுகாப்பு தருவதற்காக நின்று கொண்டிருந்த காவல்துறையினரில் பெண்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய கழகத் தலைவர், ‘‘1929 இல், செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் காவல்துறை, இராணுவம் போன்ற துறைகளில் வரவேண்டும்’’ என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டதை எடுத்துரைத்தார். மக்கள் அந்தத் தகவல் தந்த வியப்பின் வசத்தில் இருந்து விடுபடுவதற்கு முன்னர், ‘‘அந்த தீர்மானத்தை கலைஞர் ஆட்சிக்கு வந்த போது செயல்படுத்திக் காட்டினார்’’ என்று முடித்ததும், ஆரவாரமும், கைதட்டல்களும் விண்ணை எட்டுமளவிற்கு இருந்தன. அவை அடங்குவதற்கு முன்பாகவே, ‘‘அப்படிப்பட்ட சமுதாயப் புரட்சி இயக்கம் தான், திராவிடர் இயக்கம்! அதனுடைய இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் தான் மு.க.ஸ்டாலின்!’’ என்று, அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும், அந்த ஆரவாரமும், கைதட்டல்களும் இன்னமும் அதிகமாகத் தொடர்ந்தன.

கழகத் தலைவர் பேசிக்கொண்டு இருக்கும் போது, வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். கழகத் தலைவரே அவரை வரவேற்றார். மக்களிடம் மீண்டும் வருவதாகச் சொல்லி வாக னத்துக்குள் சென்று, வேட்பாளருடன் மறுபடியும் மேலே வந்தார். இருவரையும் ஒன்றாக கண்ட மக்கள் உற்சாகத்தில் பெருத்த ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து, கழகத் தலைவர் வேட்பாளர்
டி.ஆர்.பி.ராஜா அவர்களை வாக்குச் சேகரிக்கும் படியாக கேட்டுக்கொள்ள, வேட்பாளர் பேசினார். அவரின் சுருக்கமான உரைக்குப் பிறகு, கழகத் தலைவர் தொடர்ந்தார். அதாவது அண்மையில் நடைபெற்ற, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கேடயமாக வைத்துக்கொண்டு கொண்டுவரப்பட்ட, தொகுதி மறுவரையறை மசோதா பற்றி விளக்கிப் பேசினார்.   ஒன்றிய அரசின் விவசாய விரோத போக்கினை கண்டித்துப் பேசினார். ‘‘தமிழ்நாட்டை ஒருபோதும் காவி மண்ணாக்க முடியாது’’ என்று உறுதி அளித்தார். ‘‘தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஸ்டாலின் அலை வீசுகிறது’’ என்று பெருத்த ஆரவாரங்களுக்கிடையே அறிவிப்புச் செய்தார். மன்னார்குடி தொகுதிக்கு டி.ஆர்.பி.ராஜா அவர்கள் கடந்த ஆட்சியில் செய்த, சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். நிறைவாக, இத்தகைய சாதனைகள் தொடர, மறுபடியும் முத்துவேல் கருணா நிதி ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்காக, டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்க ளிக்கும் படி கேட்டு, தமது உரையை நிறைவு செய்தார்.

ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம்!

அதைத் தொடர்ந்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்துப் பேசுவதற்காக, பயணக் குழுவினருடன், கழகத் தலைவர் புறப்பட்டார். சரியாக 8.30 மணிக்கு நிகழ்விடத்துக்கு வருகை தந்தார். ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழகம் சார்பில், ஒரத்தநாடு அண்ணா சிலை அருகில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், மாவட்டத் தலைவர் அ.அருணகிரி தலைமை ஏற்க, ஒன்றியத் தலைவர் இரா.துரைராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை‌
இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர் அ.சுப்பிரமணியம், நகரத் தலைவர் வேலு ரவிச்சந்திரன், வழக்குரைஞரணித் தலைவர் ஜெகநாதன், ஒன்றியச் செயலாளர் பரமசிவம், நகரச் செயலாளர் செந்தில்குமார், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

முன்னதாக, கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். கழகத் தலைவர் இரவு 8.30 மணிக்கு வருகை தந்தார். முன்னதாகவே வருகை தந்திருந்த ஒரத்தநாடு தொகுதி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம், கழகத் தலைவர் முன்னிலையில் தனக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார். நிறைவாக 8.36 மணிக்கு, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

கழகத் தலைவர் தமது உரையில், ‘‘டில்லியை கலங்க வைக்கக் கூடிய, வெற்றி பெறக்கூடிய அளவுக்கு ஒருவர் இருக்கிறார் என்றால், அவர்தான் நமது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’’ என்று தொடக்கத்திலேயே உரத்த குரலில் பேசி, மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டார். எழுந்த ஆரவாரமும், கைதட்டல்களும் அடங்க சில மணித்துளிகள் ஆகிவிட்டன.

தொடர்ந்து அவர், ‘‘ஒரத்தநாடு பெரியார் நாடு! இங்கு வராமல் நான் போனதில்லை’’ என்று குறிப்பிட்டதும், அதற்கும் மக்கள் உணர்ச்சிவசத்துடன் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அவர், ‘‘ஒன்றிய அரசு கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு செய்த திட்டங்கள் ஏதாவது ஒன்று உண்டா?’’ என்ற கேள்வி கேட்டு, ‘‘ஒன்றே ஒன்று கொண்டு வந்தார்கள். அதுதான், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. அதுவும், கடந்த 11 ஆண்டுகளாக ஒற்றைச் செங்கல்லுடனேயே இருக்கிறது’’ அதுவும் நடைமுறைக்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

சாதனைக்கு மேல் சாதனை படைத்து வரும் ‘திராவிட மாடல்’ அரசு!

மேலும் அவர், ‘‘மாறாக, ‘திராவிட மாடல்’ அரசு மக்களுக்குக் கல்வி, சுகாதார, வேலைவாய்ப்புகளில் என்னென்ன தேவைகள் என்பதை பார்த்துப் பார்த்துச் செய்து, சாதனைக்கு மேல் சாதனை படைத்து வரு கிறது’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தொடர்ந்து, ‘‘ஒரு பக்கம் சாதனைகளை தந்த அணி! மற்றொரு பக்கம் வேதனைகளை மட்டுமே தந்த அணி!’’ என்று, இரண்டு அணிகளின் தன்மைகளைச் சுருங்கச் சொல்லி, விளங்க வைத்தார். ‘‘ஒன்றிய அரசின் பல்வேறு கருப்புச் சட்டங்கள் அமலாவதற்கு அ.தி.மு.க. காரணமாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார். மேலும் ஒன்றிய அரசு கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்டவற்றிலும் பின்னடைவை சந்தித்து இருப்பதைப் போலவே, விவசாயிகள் நலனிலும் துரோகம் இழைத்து விட்டதை, அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்ட ஒன்றிய அரசின் கடிதத்தைச் சுட்டிக்காட்டி விளக்கினார்.

பிரதமர் மோடிக்கு,
கழகத் தலைவர் கண்டனம்

நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்து வத்தைக் குறைக்கச் செய்யும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வந்து தென்னிந்தியாவை இரண்டாம் தர, மூன்றாம் தர மக்கள் வாழும் பகுதியாக மாற்ற இருந்ததைச் சுட்டிக்காட்டி, அதை வீழ்த்துவதற்கு மூல காரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சரை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். அப்போதுதான், அந்த மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில் வந்ததையும், அது தோற்கடிக்கப்பட்ட பிறகு, ‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்து விட்டார்கள்’ என்று, மாய்மாலப் பிரச்சாரம் செய்வதைச் சுட்டிக்காட்டி, ‘‘இட ஒதுக்கீடு என்பதற்கே வழிகாட்டியாக இருப்பது தமிழ்நாடு தான்! மகளிருக்கு 33% அல்ல, 50% பெண்கள் கேட்காமலேயே வழங்கிய மாநிலம் தமிழ்நாடு! வழங்கிய முதலமைச்சர் ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர்! ஆகவே, இட ஒதுக்கீடு பற்றிய பாடத்தை எங்களுக்கு எடுக்க வேண்டாம்’’ என்று, பிரதமர் மோடிக்கு, கழகத் தலைவர் கண்டனம் தெரிவித்தார்.

வேட்பாளராக இருக்கும் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள், ஏற்கெனவே செய்த சாதனைகளை பட்டி யலிட்டு காட்டி விட்டு, ‘‘திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர, ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார். நிறைவாக ஒரத்தநாடு நகரச் செயலாளர் பு.செந்தில்குமார் அனை வருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன்!

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள், மக்கள் என ஏராளமானோர் இரண்டு கூட்டங்களிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்துடன், மன்னார்குடி, ஒரத்தநாடு இரண்டு தொகுதிகளிலும் மும்பையில் இருந்து, மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன் அவர்கள் வருகை தந்து, கழகத் தலை வருடன் பரப்புரையில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *