‘பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா’
(Periyar Ambedkar Thoughts Circle of Australia – PATCA) தொடக்க விழா!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி – Greens கட்சியின் மேனாள் செனட்டர் லீ ரியன்னான் –
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் பங்கேற்று சிறப்புரை
ஆஸ்திரேலியாவில் கடந்த ஓர் ஆண்டாக இயங்கி வரும் ‘பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா’ (Periyar Ambedkar Thoughts Circle of Australia – PATCA) கடந்த ஞாயிறு, 28 ஆம் தேதி ஜூன் அன்று, தன் தொடக்க விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. சில ஆண்டுகளாக வாட்ஸ் ஆப் (WhatsApp) குழுவாக இயங்கி வந்த இயக்கம், மற்ற பாகுபாடுகளாகிய நிறவெறி, ஆஸ்திரேலிய பூர்வ குடிகளுக்கு எதிரான பாகுபாடு போன்றவற்றுடன், ஜாதிய பாகுபாட்டையும் இணைக்க வேண்டும் என்ற முன்னெடுப்பை கொண்டு செல்ல, கடந்த ஆண்டு, ஆஸ்திரேலிய சட்டப் படி தன்னை பதிவு செய்து இயங்கி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக, FECCA (Federation of Ethnic Communities Councils of Australia) என்ற அரசு நிறுவனத்தின் மூலம், ஆஸ்திரேலியாவில் நிகழும் ஜாதிய பாகுபாடுகளை முறைப்படுத்தப்பட்ட வழியில் பதிவு செய்துள்ளது. ஓர் ஆண்டாக சட்டப்படி இயங்கி வந்த பொழுதிலும், தன்னுடைய தொடக்க விழாவை ஓராண்டு கழித்து மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. உலகெங்கிலும் உள்ள பல பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்க, சிட்னியில் உள்ள அஞ்சப்பர் உணவு விடுதி அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, க்ரீன்ஸ் (Greens) கட்சியின் மேனாள் செனட்டர் லீ ரியன்னான் (Lee Rhiannon), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு காணொலி மூலம் சிறப்புரை ஆற்றினார்கள். லீ ரியன்னான், இலங்கை யில், தமிழர்களுக்கு எதிரான நில அபகரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்து கொழும்பில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் வழக்குரைஞர் அ.அருள்மொழி இணைய வாயிலாக இணைந்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தமிழர் தலைவர் ஆசிிரியர் உரை
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் முதலில் தமிழிலும், பின் ஆங்கிலத்திலும் உரையாற்றினார். ஜாதி அமைப்பின் தோற்றமும், அதன் கட்டமைப்பும் இந்தியர்களின் மூளையில் / சிந்தனையில் ஏற்படுத்தியுள்ள இரக்கமற்ற நிலையை எடுத்துக்காட்டினார். தந்தை பெரியாரும், பாபாசாகேப் அம்பேத்கரும் ஜாதி ஒழிப்பிற்காக ஒத்த சிந்தனையோடு செயல்பட்ட தலைவர்கள் என்பதை விளக்கினார். பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான மதவெறி சித்தாந்தத்தைக் கொண்ட விசுவ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் ஆசுதிரேலியாவில் பரவி ஜாதி நோயை அங்கும் பரப்பிக் கொண்டிருப்பதையும், அத்தகைய அமைப்புகள் மத உரிமை என்ற பெயரில் கல்வித்திட்டத்தில் வருணாசிரம நச்சுக் கருத்துகளைப் பரப்புவதற்கு அனுமதி பெறுவதையும் , அதனை எதிர்த்து ‘பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் ஆசுதிரேலியா’ எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டி யும் உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் இருந்து இணைய வழியாக எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, வலைத்தளத்தில் தன் வாழ்த்தினைப் பதிவு செய்து, இணைய வாயிலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்களுடன் சிட்னி நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள் ஞானகுரு தினகரன் செல்லையா, குமரச்செல்வம் ஆறுமுகம் மற்றும் கார்த்திக் வேலு ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டனர்.
ஆஸ்திரேலியாவின் க்ரீன்ஸ் (Greens) கட்சியைச் சேர்ந்த லீ ரியன்னான் அவர்களுடன், ஃபில் ப்ராட்லி (Phil Bradley) சுஜன் செல்வன், பெக்ஸ் டேவிட் (Bex David) மற்றும் கோகுலன் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். சிறப்புரைகள் முடிந்ததும் உலகப் பண்பாடு, அமைதி நிறுவனத்தின் (Heavenly Culture, World Peace, Restoration of Light – HWPL) ட்றேசி, ரூஃபி, ஜேய் ஆகியோர் உலக அமைதி குறித்த ஒரு சிறிய விளக்க உரையை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியை, ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் பொறியாளர் பொன்ராஜ் தங்கமணி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி PATCAவின் தலைவர் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன் அவர்களின் வரவேற்பு உரையுடன் தொடங்கியது. பாட்காவின் துணைத் தலைவர் டாக்டர் ஹாரூன் காசிம் அவர்கள் பாட்காவின் செயல் திட்டங்களை விளக்கினார். நிறைவாக சுமதி விஜயகுமார் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சி இனிதாய் நிறைவடைந்தது.
இயக்கத்தின் பொருளாளர் டாக்டர் பிரதீப்குமார், இணைய வாயிலாக கலந்து கொண்டார். அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களாகிய பார்த்தீபன், முகுந்தராஜ் சுப்பிரமணியம் மற்றும் சுரேஷ் இணைய வாயிலாக இணைந்து கொண்டனர்.
இனி ஆஸ்திரேலியாவும் பெரியார், அம்பேத்கர் பெயர்களை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்கும்.