திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பிரச்சினையில் முந்தைய தி.மு.க. ஆட்சி பின்பற்றிய அதே முறையை இன்றைய அரசும் பின்பற்றியதை வரவேற்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திருப்பரங்குன்றத்தில் வெறும் சர்வே கல்லை தீபத் தூணாக்கி – ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மதவெறி அமைப்பு, தமிழ்நாடு மத நல்லிணக்கத்தோடும், அமைதிப் பூங்கா வாகவும் இருப்பதையும், பா.ஜ.க. அரசியலில் காலூன்ற முடியாத நிலையினையும் மாற்றிட, மதக் கலவரத்தை, அயோத்தி கலவரப் பாணியில் நடத்தி, பா.ஜ.க.வை அரசியலில் கோலோச்சச் செய்யும் யுக்தி மூலமும், திட்டமிட்ட கலவரங்கள் மூலமும் தேர்தல் வெற்றிகளைப் பறிக்கலாம் என்பதற்காக திருப்பரங்குன்றம் பிரச்சினையை உருவாக்கி, இஸ்லாமியர்களின் தொழுகை இடத்தோடு வம்பு, வல்லடி நிகழ்வுகளைக் கடந்த காலத்தில் தொடர்ந்து நடத்தி வந்தனர்; வருகின்றனர் என்பதை விவரம் புரிந்த மக்கள் அறிவர்.
கலவரம் ஏற்படுத்த முயற்சி!
திருப்பரங்குன்றத்தில் உள்ளூரில் மத நல்லி ணக்கத்துடன் எவ்வித பேத – மாச்சரியமின்றி அனைவரும் உள்ள நிலையில், அங்கு இப்படி ஒரு சர்வே கல்லை ‘தீபத்தூணாக்கி’ அதில்தான் விளக்கேற்றுவோம் என்று கலவரம் செய்வது, அதற்கு ஆர்.எஸ்.எஸ். அனுதாபமும் உள்ள சில நீதிப் போக்கினையும் பயன்படுத்தி, அரசிய லமைப்புச் சட்டத்தின் (Article) 25, 26 ஆகியவற்றைப் புறந்தள்ளி, வெளிப்படையாக, மக்கள் நலத்திற்கும், தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கும் வண்ணமும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருவதை நாடறியும்.
கடந்த கால ‘திராவிட மாடல்’ அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இருந்தபோது, மதவெறி சக்திகளின் எண்ணம் நிறைவேறாத வகையில் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்தி, வரலாறு படைத்தது – மக்கள் நலம், பொது அமைதி கருதி!
தி.மு.க. அரசு எடுத்த அதே நிலைப்பாடு!
முந்தைய ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினையே, தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் உள்ள த.வெ.க. அரசும் இப்பிரச்சினையில் எடுத்தது வரவேற்கத்தக்கதாகும்.
இரண்டு அரசுகளும் எடுத்த நிலைப்பாட்டின் நோக்கம், தமிழ்நாடு மதக் கலவர பூமியாகி விடக்கூடாது என்பதுதான்! – தமிழ்நாட்டின் பாரம்பரிய சமூக நல்லி ணக்கம் காத்து வரும் பெரியார் மண் என்பதை நிலை நாட்டவும் மேற்கொள்ளப்பட்ட சரியான முயற்சி இது! சென்னை உயர்நீதிமன்றத்தின் சில தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டை உச்சநீதிமன்றத்தில் செய்தபோது, அதனை விசாரித்த அமர்வில், முக்கிய தீர்வுக் காண முடியவில்லை. அதன் இடைக்கால ஆணை ஒன்றில் ஒரு நாள் மட்டும் பிரச்சினைக்குரிய சர்வே கல்லில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பு முழுமையாகத் தீர்க்கப்படுவதற்கு முன்னமே வழங்கிவிட்டது போன்ற ஒன்றாகும்.
அதிர்ச்சிக்குரிய இந்த உத்தரவு, அரசியலமைப்புச் சட்ட விரோத, நியாய விரோதமானது என்பதை நாம் 21.11.2026 அன்றைய அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தோம். ‘‘இதில் முந்தைய தமிழ்நாடு தி.மு.க. அரசு காட்டிய அதே உறுதிப்பாட்டுடன் இருக்கவேண்டும்” என்றும், இன்றைய அரசுக்கு வற்புறுத்தினோம்!
த.வெ.க. அரசு – முதலமைச்சரின் செயல்பாடுகளில், ஆளுமையில் கருத்து மாறுபாடுகள் நமக்கு இருந்தாலும்கூட, இதுபோன்ற முக்கிய நிலைப்பாட்டில், தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினையே உறுதியாகப் பின்பற்றி, இறுதி வரையில் உறுதியோடு இருந்ததைப் பாராட்டி வவேற்பது நமது கடமையாகும். இது தொடரவேண்டும்.
இது என்றும் நமது கொள்கைப் பார்வையாகும்.
தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. (கூட்டணியில் இருப்பதாலோ என்னவோ) தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆகம விதிப்படி எப்படி வழமை யாக எங்கு அந்த விளக்கு கார்த்திகை தீபத்தின்போது ஏற்றப்பட்டதோ, அதேபோல் இவ்வாண்டும் நடைபெற வேண்டும். ‘ஒரு நாள் ஏற்றலாம்’ என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணை, மேல்முறையீட்டுக்கான பிரச்சினைக்குத் தீர்ப்பு வழங்கிவிட்டது போன்ற ஒன்று என்பது அனைத்து முற்போக்குக் கட்சிகள், இயக்கங்கள் வற்புறுத்திடும் நிலைப்பாடு.
மதுரை மாவட்ட ஆட்சியர் போட்ட
144 தடை சரியானதே!
அந்த நாளில், மதக்கலவரம் ஏற்படாமல் தடுக்க, மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போட்டு, திருப்பரங்குன்றம் கோயில் நிகழ்ச்சி முறைப்படி, வழமை போல நடக்க சரியான ஏற்பாட்டினைச் செய்தார்.
தமிழ்நாடு அரசின் காவல்துறையும் சிறப்பாக இதில் கண்ணுங் கருத்துமாய் இருந்தது; கலவரம் ஏதும் இல்லை. பல வழக்குகளில் ‘‘ஆகம விதிகளை மீறக்கூடாது’’ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியே நடந்து தமிழ்நாடு அரசு கடமையாற்றியுள்ளதால், கலவரம் வெடிக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டினையும், அதனைச் செம்மையாகச் செயல்படுத்திய காவல்துறை, நிர்வாகத் தலைமை, மதுரை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளும் நமது மக்களின் நன்றிக்குறியவர்கள் – பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.
தம்மை பகிரங்கமாகவே, தான் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதில், கூச்சநாச்சமின்றி பொதுவெளியில், தீர்ப்பு களில் காட்டிக் கொள்ளும் மாண்புமிகு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வின்முன், அவசர வழக்கு விசாரணை வந்த நிலையில், அவர் முந்தைய தி.மு.க ஆட்சியின்போது நடந்துகொண்ட அதே வேகத்துடன், ‘‘144 உத்தரவுப் பிறப்பித்த மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆஜராக வேண்டும்’’ அவர் வரும் வரை வழக்கை விசாரிக்க மாட்டேன், தள்ளி வைக்கிறேன்’’ என்று கூறியது மக்கள் நலம் சார்ந்ததா?
அரசியலமைப்புச் சட்டத்தின் 25, 26 பிரிவு என்ற பிரிவுகள் பொது அமைதி, பொது ஒழுக்கம், மக்கள் நலம் போன்றவற்றிற்கு உட்பட்டதே என்று சொல்லும்போது, அதற்கென்று மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் நடந்துகொண்டதற்குப் பாராட்டுவதற்குப் பதிலாக, நீதிமன்ற அதிகாரத்தை இப்படித் தவறாகப் பயன்படுத்தி, ஜஸ்டிஸ் சுவாமிநாதன் அவர்களது அமர்வு நடந்துகொண்டது சட்ட விரோதமாகும்! இது இரண்டாவது தடவையாகும்.
உச்சநீதிமன்றத்தில் அதன் அமர்வு தந்துள்ள தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுவைத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிலையில், விசாரிக்க வேண்டிய அமர்வே அன்று இல்லை. பல அவசர வழக்குகளில் இரவு 2 மணிக்குக் கூட விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. எல்லாம் புரியாத புதிர்கள்!
ஆகம விதிப்படியே தீபம் ஏற்றப்பட்டுள்ளது!
அதனால், பொது அமைதி காக்கவும், ஆகம விதிப்படியே விளக்கு ஏற்றப்படவும், அர்ச்சகர் உள்பட உண்மையான பக்தர்கள் வற்புறுத்திடும் நிலையில் தீபம் வழமை போல் ஏற்றப்பட்டது.
இதை உச்சநீதிமன்ற அவமதிப்பு என்று கூறுவதைவிட, தமிழ்நாடு அரசின் மக்கள் பாதுகாப்புக்குச் சரியான, கலவரம் தவிர்த்த ஒரு நடவடிக்கை என்றே பொது நியாயம் உள்ளவர்கள் எவரும் கூறுவர்.
அரசியல் விளையாட்டுக்கு – மதவெறியை விசிறி விடும் வகையில், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். போன்றவற்றிற்கு ஆதரவுக் குரல் தரும் சிலரின் மதவெறித்தனத்திற்குத் ‘தீனி’ போடும் வகையில், உயர்நிலை நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஏற்கத்தக்கதா?
நீதிபதிகள் தீர்ப்பு – சட்டத்தை வளைக்கலாமா?
நடப்பது Democracy – ஜனநாயகம் – மக்களாட்சி என்பதை மறந்து மாண்பமை நீதிபதிகள் அரசியலமைப்புச் சட்டத்தை வளைக்கும், குலைக்கும் வகையில் தீர்ப்புகள் தந்தால், ஜனநாயகக் குடியரசுகள் அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டியதில்லை என்பதே சரியான நிலைப்பாடாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.11.2026
