ஈரோடு – பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு முனிசிபல் காலனி, மொடக்குறிச்சி என ஒரே மாவட்டத்தில் மூன்று இடங்களில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலைகள் நேற்றிரவு (23.11.2026) சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள கலைஞர் சிலைக்குக் கீழே அமைந்துள்ள நூலகத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. மணல்மேட்டில் உள்ள ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் மற்றும் மொடக்குறிச்சியில் உள்ள ‘அன்பகம் உதயம்’ திமுக இளைஞரணி அலுவலகத்தின் முகப்புக் கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குத் திராவிடர் கழகம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தந்தை பெரியார் சிலைகளைச் சேதப்படுத்துவோரையெல்லாம் ‘மனநோயாளிகள்’ என்று காவல்துறை சொல்லிவந்ததைப் போல இப்போதும் மூன்று இடங்களில் கலைஞர் சிலையைச் சேதப்படுத்தியுள்ள நபரை அடையாளம் கண்டு, கைது செய்துள்ள காவல்துறை, அவரையும் ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்று சொல்லி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கதாகும்!
சிக்கியவர்களைத் தப்ப வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியே தவிர வேறல்ல!
திராவிட இயக்கத் தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்தும் குண்டர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.11.2026
