நடக்கவிருக்கும் சேலம் பொதுக்குழு (ஜூலை 4, 2026) ‘‘சேலம் தரும் எழுச்சியின் கோலமாக’ இருக்கும் – காத்திருக்கிறோம், வாரீர்!

4 Min Read

கடந்த 4 நாள்கள் சுற்றுப்பயணத்தின் எழுச்சி!
* எங்கெங்கும் அறப்போராட்ட வீரர்களின் பட்டியலைத் தந்து உலாவரும் உணர்ச்சிக் கொப்பளிப்பு!
* ‘சேலம் செயலாற்றும் காலம்‘ என்ற அழைப்பு (1944) இல்!

1944 இல் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாடு – ‘சேலம் செயலாற்றும் காலமாகஇருந்தது; இப்பொழுது ஜூலை 4, 2026 அன்று சேலத்தில் கூடும் பொதுக்குழு, ‘சேலம் தரும் எழுச்சிக் கோலமாக இருக்கும்இருக்கட்டும்காத்திருக்கிறோம், வாரீர்! வாரீர்!!  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

கடந்த 4 நாள்கள் எனது பயணத்தில் பல அடர்த்தியான, அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள். கழகப் பொறுப்பாளர்கள், மற்றும் நமது இயக்கத்தில் சேராதவர்கள் ஆனாலும், மிகப்பெரும் ஆதரவானவர்களாலும் நமக்கு விளக்கத்தை வழங்கும் பொதுவான பெருமக்களும் நம்மிடம் நன்றி காட்டி, உற்சாகத்தை ஊட்டினர்.

சென்ற சில வாரங்களில் தலைமை விடுத்த அறிக்கையை உடன் நிறைவேற்ற வேண்டிய அன்புக் கட்டளையாகவே நினைத்து, நம்மையே ஓர் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கும் வண்ணம் ‘ஆயிரம் இளம் போராட்ட செயல் வீரர்களைத் தாருங்கள்’ என்று எழுத்துமூலம் விடுத்த வேண்டுகோள்பற்றி வரும் ஜூலை 4 ஆம் தேதி, சேலம் மாநகரில் மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழுவில்தான் பட்டியல் தருவார்கள் என்று நினைத்தேன்!

முதல் பரிசினைத் தட்டிச் சென்றனர்!

ஆனால், 26.6.2026 அன்று சின்னாளப்பட்டியில் நடைபெற்ற ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழாதிறந்தவெளி மாநாட்டில்’’ (அவ்வூர் ஒரு பேரூராட்சிதான்) திண்டுக்கல், பழனி மாவட்டத் தோழர்கள் முந்திக்கொண்டு, போராட்ட ஆயத்த வீரர், வீராங்கனை, இளைஞர் பட்டியலைத் தந்து, முதல் பரிசினைத் தட்டிச் சென்றனர்.

அடுத்து குற்றாலத்தில் (27.6.2026) நடைபெற்ற கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய அய்ந்து மாவட்டப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடலில், மிகுந்த உற்சாக வெள்ளத்தில் மிதந்து வந்து, போட்டிப் போட்டுக் கொண்டு பட்டியலைத் தந்தனர்! இளைஞர்களின் வயது 35–க்குள்

நம்மை வியக்க வைத்து வருகின்றனர்!

இதற்கிடையில், மற்ற மாவட்டப் பொறுப்பாளர்களும் தங்களது மாவட்ட போராட்ட ஆயத்த வீரர் – வீராங்கனைகள் பட்டியலை தொடர்ந்து நமக்கு அனுப்பி, நம்மை வினையாற்றத் தயாரிக்கிறார்கள்!

இந்த வேகத்தை வைத்துக் கணித்தால், கேட்ட ஆயிரம், இரு மடங்காக ஆனாலும் ஆச்சரியமில்லை!

கழகத்தினர் ஒரு புது முயற்சியைத் தொடங்கிவிட்டனர்!

அத்துணை உற்சாகத்துடன், அத்துணைக் கழகக் காப்பாளர் முதல் ‘இளசு, ‘பெரிசு’ என்ற வேறுபாடின்றி, இயக்கப் பிரச்சார நடவடிக்கைகளை, தகவல்களைத் தருவதில், உலகம் முழுவதும் நமது தகவல் தொழில்நுட்ப அணியினர் வெகு சுறுசுறுப்புடன் பணியாற்றுகின்றனர் மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! நம்மை – நம் இயக்க நடவடிக்கைகளை இருட்டடிக்கும் ஈனத்தைப் புறந்தள்ளி, நாமே தனித்த வேகத்துடன் விரைந்து உண்மைகளைப் பரப்பி, நல்ல திட்டங்களோடு செயல்படத் தொடங்கி, ஒத்திகைகளையும் நடத்தி, நமது பிரச்சாரத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்த – எவர் தயவையும் எதிர்பாராமல், சொந்தக் காலில் நின்று, வென்று காட்டிட சூளுரைத்து, ஒரு சுயநலந் துறந்த இளைஞர் பட்டாளத்தின் கருத்தாடல் என்ற ஒரு புது முயற்சியை கழகத்தினர் தொடங்கிவிட்டனர்.

குற்றாலம் பயிற்சி முகாம் 47 ஆவது ஆண்டில், இதற்குமுன் வந்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கையையும் தாண்டி, அவர்கள் கொள்கையை உள்வாங்கும் திறனறிவுப் பக்குவமும், வகுப்பெடுத்த நம்மை மட்டுமல்ல, பார்வையாளராக வந்தவர்களையும் வியக்கவே வைத்தது!

தந்தை பெரியார் விதைத்த விதைகள் என்றும் முளைக்காமல், சோடையானதில்லை என்பதை நிரூபித்த வண்ணம், நான்கு நாள்கள் நடத்தி, வாகை சூடியது. அதற்காகக் கடுமையாக உழைத்து வாகை சூடினர், வைக்கம் வீரரின் கோட்டத்தினர்!

களைப்போ, அயர்வோ ஏற்படவிடாமல், ஒரு பாதுகாப்புச் சுவராக அமைந்தன!

வினையாற்றுவதில் அவர்களது களம் காண சலியாத கடும் உழைப்பு, முகிலைக் கிழித்த முழு மதியாகி, அய்யாவின் தொண்டரின் தொண்டனான எமக்கு பல மடங்கு பொங்கும் புதிய  ஊக்கத்தையும், என்றும் தங்கும் ‘கொள்கை சேமிப்பினை’ உணர்த்தி, களைப்போ, அயர்வோ ஏற்படவிடாமல், ஒரு பாதுகாப்புச் சுவராக அமைந்தன.

‘‘சேலம் தரும் எழுச்சியின் கோலம்!’’

ஜூலை 4 ஆம் தேதி, சேலத்தில், இது ‘பெருஉரு’ கொள்ளும்!

1944 இல் அறிஞர் அண்ணா தந்த முந்தைய தலைப்பு ‘சேலம் செயலாற்றும் காலம் என்பது. இப்போதைய புதுத் தலைப்போ, ‘‘சேலம் தரும் எழுச்சியின் கோலம்!’’ ‘‘இப்படியா!’’ என்று நமது கொள்கை எதிரிகளையும் குலை நடுங்கச் செய்யும் என்பது உறுதி!

வெள்ளி முளைத்தது

லட்சியக் கதிரொளி திசையெட்டும் பாய்ச்சி

திட்டமிடுவதற்கு, ஊக்க மாத்திரையான பட்டியலோடு திரண்டு வாருங்கள்!

எந்த சூழ்நிலையையும் எம்மால் எதிர்கொண்டு, நமது கொள்கை வயலின் செழிப்புக்குரியதாக ஆக்கிக் கொள்ளும் பாடத்தையும், அறப்போர் முறையையும் நமக்கு, நம் அறிவாசான் கற்றுக் கொடுத்ததோடு, நம்மைக் கண்களைத் திறக்க வைத்து களத்திற்கும் ஆயப்படுத்தினார்.

எந்த ரூபத்தில் எதிரிகள் வந்தாலும், பெரியார் தந்த அறிவால், அவர்களை முறியடிக்கச் சரியான களம் – திட்டம் – செயல் – செய்யும் பருவத்தை – பருவம் பார்க்காமல் எதிர்கொள்ள சேலம் பொதுக்குழு தக்க வழிகாட்டும்!

பெரியாரின் தொண்டன் அழைக்கிறேன்,
வாரீர்! வாரீர்!!

குடும்பம் குடும்பம்மாய் சந்திப்போம்; இது வெறும் பொதுக்குழு அல்ல; ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தவிருக்கும் ஒரு கொள்கைத் திருவிழா, பெருவிழா!

பட்டியலை வாங்கக் காத்திருக்கும் உங்கள் தோழன், என்றும் பெரியாரின் தொண்டன் அழைக்கிறேன், வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி,

       தலைவர்,

திராவிடர் கழகம்  

சென்னை  

29.6.2026       

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *