கல்வித் துறை பற்றிய திட்டவட்ட கொள்கை நிலைப்பாட்டைத் தாமதிக்காமல் அறிவிக்கவேண்டியது அவசர, அவசியமாகும்!

5 Min Read

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் பெறாத ராக்கெட் வேகக் கல்வி வளர்ச்சியைத் பெற்றுள்ள தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக ஆளுநரே இருக்கலாமாம்;
முதலமைச்சர்தான் இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லையாம்!
தமிழ்நாட்டுக் கல்விப் புரட்சி வரலாறு தெரியாமல், உயர்கல்வித் துறை அமைச்சர் இப்படிப் பேசுவது, வன்மையான கண்டனத்திற்குரியது!

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் பெறாத ராக்கெட் வேகக் கல்வி வளர்ச்சியைத் பெற்றுள்ள தமிழ்நாட்டில், பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக ஆளுநரே இருக்கலாமாம்; முதலமைச்சர்தான் இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லையாம்! தமிழ்நாட்டுக் கல்விப் புரட்சி வரலாறு தெரியாமல், உயர்கல்வித் துறை அமைச்சர் இப்படிப் பேசுவது, வன்மையான கண்டனத்திற்குரியது!  உயர்கல்வித் துறை பற்றிய திட்டவட்ட கொள்கை நிலைப்பாட்டை தாமதிக்காமல் அறிவிக்கவேண்டியது அவசர, அவசியமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

புதிதாக அமைந்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின்  கட்சி தனிப்பெரும்பான்மை இல்லா விடினும், அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், ‘‘ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு’’ என்ற பேரவாவுடன், புதிய ஆட்சி அமைவதற்கு முன்பிருந்தே ரகசியத் தொடர்புகளைப் பேணி வந்த காங்கிரஸ் கட்சி, பின்னர், தி.மு.க.வுடன் இருந்த கூட்டணியை வெளிப்படையாக முறித்துக்கொண்டது.

வடநாட்டிலிருந்து வந்த காங்கிரஸின் ஒருங்கி ணைப்பாளர் ஒருவரும், இந்த உள்விவகாரங்களைத் தொடக்கம் முதல் கவனித்து வந்த பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்டோரும் த.வெ.க. கட்சியின் அலுவலகத்திற்கு ஓடோடிச் சென்று கூட்டணியில் இணைந்து, ஆதரவு தந்தது. மேலும், இந்தத் கூட்டணி இப்போது மட்டுமல்லாமல், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், அதற்குப் பிறகும்கூட தொடரும் என்று காங்கிரஸ் கட்சி தானாகவே அறிவித்தது.

தங்களது சுயநலப் போக்கை வெளிப்படுத்தியுள்ளார்!

இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களில் ஒருவர், முன்பு தி.மு.க. கூட்டணி என்பது ‘‘கொள்கைக் கூட்டணி’’ என்று கூறிவந்தார். ஆனால் இப்போது அதற்கு முற்றிலும் மாறாக, ‘‘அது வெறும் தேர்தல் கூட்டணிதான்; தேர்தல் கூட்டணி மட்டும்தான்’’ என்று கூறி தங்களது தன்மையைக் காட்டிக் கொண்டனர்.

தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணியில் போட்டி யிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற அய்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொடுத்து, இரண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளனர்.

இதில், உயர்கல்வி போன்ற முக்கிய துறைகளை முதலமைச்சரிடம் கேட்டுப் பெற்றதாகச் செய்திகள் வந்தன.

பலரது கேள்விகளுக்கு
பதிலளிக்கவேண்டிய நிலை!

அதைப் பெற்றுப் பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த அமைச்சர் திரு.விசுவநாதன் அவர்கள், செய்தியாளர்கள் சந்திப்பில், எடுத்த எடுப்பிலேயே, ‘‘முந்தைய அரசின் கொள்கைகளை  நாங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக ஆளுநரே இருக்கலாம்; முதலமைச்சர்தான் இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆளுநருடன் ஒத்துப் போவதுதான் சரி’’ என்ற கருத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

அதனால், பலரது கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

கல்வித்துறையில் ஓர் அமைதிப் புரட்சியை ஏற்படுத்திய தமிழ்நாடு!

‘உயர்கல்வித் துறை’ என்பது, உயர் கல்விக்கான துறையாக மட்டுமல்லாமல், கல்வி நிலையைத் தமிழ்நாட்டில் உயர்த்திய துறையாகவும் அமைந்தது தான் தமிழ்நாட்டின் சிறப்பு! இந்நாட்டின் பெரும்பா லான மக்கள் ஒடுக்கப்பட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்டு, மனுதர்மம் கோலோச்சிய நாட்டில், குலதர்மக் கல்வி கொண்டு வந்து திணிக்கப்பட்ட வரலாற்றை மாற்றி யமைத்தது, காமராசரின் கல்விப் புரட்சி. அதை மேலும் பெருக்கிய அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சிகளில், இந்தியா விலேயே வேறு எந்த மாநிலமும் பெறாத ராக்கெட் வேகக் கல்வி வளர்ச்சியைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. எல்லா மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள், உயர்படிப்புகள் என கல்வித்துறையில் ஓர் அமைதிப் புரட்சியை இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஓர் ஆளுநரின் ஒத்துழையாமையையும் தாண்டிப் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைத் திணிக்கும் ஆளுநரின் முயற்சிகளுக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கால வரையறை இன்றி நிறுத்தி வைப்பதைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. ‘‘மசோதாக்களை ஆளுநர் காலவரையற்று நிறுத்தி வைத்து, ஊறுகாய் ஜாடியில் ஊற வைக்கக் கூடாது’’ என்று நீதிமன்றமே சுட்டிக்காட்டும் அளவுக்குத் தமிழ்நாடு ஒரு பெரிய வரலாற்றை உருவாக்கியுள்ளது.

திட்டமிட்டுக் காலதாமதத்தை ஏற்படுத்திய
ஒன்றிய பா.ஜ.க. அரசு!

ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுக்க முடியாததால் குறுக்கு வழியைக் கையாண்டது. இதன்படி, குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திடம், ‘கருத்துரை’ என்ற பெயரில் ஒரு திட்டத்தைச் சமர்ப்பித்து, திட்டமிட்டுக் காலதாமதத்தை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் உள்ள 11 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருக்கும் தற்போதைய சூழ்நிலை, உயர்கல்வியில் தமிழ்நாடு அடைந்துள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சியில்  இமாலயச் சாதனைகளை மறைக்கும் வகையில், கல்விக் கண்களைக் குத்தும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. முன்னேற்றத்தைத் தடுக்கும் இத்தகைய சூழலில், மாநில உரிமைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது. அதேநேரத்தில், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் மனுதர்மக் கண்ணோட்டத்துடனான கல்வித் திணிப்பு முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

உயர்கல்வித் துறை அமைச்சரின்
கருத்து யாருடைய முடிவு?

திரு.ஜோசப் விஜய் தலைமையில் அமைந்த கூட்டணி ஆட்சி, இந்தப் பிரச்சினையில், எப்படி? என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது? ஒன்றிய பா.ஜ.க. அரசின் முட்டுக்கட்டை முயற்சிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்ற கேள்விகள் எழுந்துள்ள முக்கிய தருணத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைச்சராக உள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.விசுவநாதன் அவர்கள் இப்படி கூறியிருப்பது,

அவரது கருத்தா?

அவர் சார்ந்த கட்சியின் கருத்தா?

அவருக்கு அமைச்சர் பதவி தந்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களது கொள்கை முடிவா?

என்ற சந்தேகங்களை ஏற்படுத்தும்  கேள்விகளுக்கு இடந்தரும் நிலையில், அவரது பேட்டி அமைவது சரியானதல்ல. ‘‘ஊடகங்களில் தவறுதலாகப் போட்டு விட்டார்கள்’’ என்ற சமாதானம் தொலைக்காட்சி – வீடியோ காலத்தில் எடுபடக் கூடியதல்ல!

ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் உற்பத்திக் கூடாரமான  ‘நீட்’ போன்ற தேர்வுகளில் உயிர்ப் பலி வாங்கும், கார்ப்பரேட், லஞ்ச லாவண்ய போக்குகளும், சி.பி.அய். விசாரணைகளும் நடப்பதால், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முதல் பொதுவானவர்கள் வரை கேட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு உயர்கல்வித் துறையின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற ஒருவர் இப்படித் தெளிவின்றி பேசுவதும், பின்னர் மறுப்பதும் சரியான தொடக்கமா?

வன்மையான கண்டனத்திற்குரியது!

‘கொள்கைக் கூட்டணி இல்லை, பதவிக் கூட்டணி தான்’’ என்றால், எப்படி வேண்டுமானாலும் பேசலாமா? தமிழ்நாட்டுக் கல்விப் புரட்சி வரலாறு தெரியாமல் இப்படி பேசுவது, வன்மையான கண்டனத்திற்குரியதல்லவா?

சமதர்மத்தின் குரல் ஒலிக்கவேண்டிய இடத்தில், மனுதர்மக் குரல் ஒலித்தால், தமிழ்நாடு ஒருபோதும் அதை ஏற்காது!

அவசர, அவசியம்!

முதலமைச்சர், உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட கல்வித் துறை பற்றிய தம் அரசின், திட்டவட்டமான கொள்கை நிலைப்பாட்டைத் தாமதிக்காமல் அறிவிக்கவேண்டியது அவசர, அவசியமாகும்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை    

29.5.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *