கடவுள் நம்பிக்கை, மதம் பற்றி பண்டித நேரு கூறியது என்ன?

4 Min Read
- Advertisement -

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கவனத்திற்கு…

“சாமிக்குப் பயப்படாதவன் தான் பெரும் திருடன்” என்று நேற்று (12.11.2026) பேசியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்.

கடவுள் நம்பிக்கை இருப்பவன் சாமியைக் கும்பிட்டுவிட்டு, உண்டியலைக் களவாடிவிட்டுப் போவதைக் காணொலிச் சாட்சிகளோடு பார்க்கும் காலமிது. ராமன் கோவில் உண்டியலுக்கே பாதுகாப் பில்லை என்பதை அவர்கள் கட்சித் தலைவர்களே குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்களே, அதைக் கொள்ளையடித்தவர்கள் யார்? சாட்சாத் ராமபக்தர்கள் தானே!

திருட்டு விசிடி விற்றுக் கம்பியெண்ணப் போன காங்கிரஸ் பார்ப்பனர் முதல் ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்த காஞ்சி சங்கராச்சாரியார் வரை…

பட்டை, கொட்டையுடன் பெண்களைக் காவு வாங்கும் குட்டிச் சாமியார்கள் முதல் சர்வ வசதிகளுடன் கைலாசா உருவாக்கிய நித்தியானந்தா வரை… இன்னும் சர்வதேசச் சான்றுகள் வரை எடுத்துக்காட்ட முடியும்!

இதுவரை கைதாகியுள்ள திருடர்கள், மத்திய சிறைச்சாலைகளில் கம்பியெண்ணும் கைதிகள் என்று பட்டியலெடுத்துப் பார்க்கட்டும் – எத்தனை சுத்த பக்தர்கள் அங்கிருக்கிறார்கள் என்று தெரியுமே!

தந்தை பெரியார் நேரே திருச்சி சிறையிலேயே போய் சோதித்த வரலாறு தெரியுமா?

இன்னும் நீளமாகக் கூட எழுத முடியும், இப்போதைக்கு அவசியமில்லை. வெளிப்படையாக தன்னை நாத்திகர் என்றே அடையாளப்படுத்திக் கொண்டவரும், இந்தியாவின் முதல் பிரதமரும், காங்கிரஸ் கட்சியைக் காந்திக்குப் பிறகு நிலைநிறுத்தியவருமான ஜவகர்லால் நேரு என்ன சொல்கிறார் என்று, அவரது புகழ்பெற்ற புத்தகங்களான,  Letters from a Father to His Daughter, Glimpses of World History, The Discovery of India ஆகிய புத்தகங்களில் திரு. மாணிக்கம் தாகூர் படிக்கட்டும். பிறகு மற்றவற்றைப் பேசலாம்.

இதோ ஜவஹர்லால் நேரு எழுதுகிறார்:

“பயம் நேர்மை அல்ல. மதம் முதலில் பயத்தில் இருந்து தான் பிறந்தது” என்று மகள் இந்திராவுக்கு விளக்கிய நேரு, “பயத்தால் செய்யப்படும் எதுவும் தீயது” என்று எழுதினார். (Letters from a Father to His Daughter, கடிதம் 13: How Religion Began and Division of Labour, பக்கம் 36)

“மதத்தின் போர்வையில் பிறரைக் கொள்ளையடித்து ஏமாற்றும் அயோக்கியர்களையும் சந்திப்பாய்” என்று இந்திராவுக்கு எழுதினார். (Glimpses of World History, The Sixth Century Before Christ, and Religion, பக்கம் 39)

“கடவுளையும் மதத்தையும் உதவிக்கு அழைத்து, அதிகாரம் பல நேரங்களில் பிறரை ஏமாற்றவும் தன் ஆற்றலைப் பெருக்கவும் முயன்றிருக்கிறது” என்றார். அரசவைச் சடங்குகளையும் கோயில்–தேவாலய வழிபாட்டுச் சடங்குகளையும் ஒப்பிட்டு, அதிகாரத்தை வணங்கக் கற்பிக்கும் இந்த முறையை “அன்பின் சேவை அல்ல, பயத்தின் சேவை” என்றார். மன்னர்களின் உண்மையான நோக்கம் அதிகாரமும் செல்வமும் தான், மதம் பெரும்பாலும் அதற்குப் போர்வை என்றும் எழுதினார் நேரு.

(Glimpses of World History, ‘The Countries of Europe Take Shape’, பக்கம் 164)

“ஆட்சிக்கு மதம் தேவை” என்ற மாக்கியவெல்லியின் கருத்தை நேரு விளக்குகிறார்: அது மக்களை நல்லவர்களாக்க அல்ல; அவர்களை ஆளவும் அடக்கி வைக்கவும்! மக்கள் மூடநம்பிக்கையில் இருந்தால் அடக்கி வைப்பது எளிது என்பது ரோமானியக் கொள்கை என்றும், மதம் பல நேரங்களில் அரசியலுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் பணிப்பெண்ணாகச் சேவை செய்திருக்கிறது என்றும் எழுதினார். (Glimpses of World History, ‘The Renaissance’, ‘Jesus and Christianity’, பக்கம் 87)

கடவுள் பயம் இல்லாதவன் நெறியற்றவன் அல்ல. சீனர்கள் மிகக் குறைந்த மதப்பற்றுடையவர்கள்; ஆனாலும் மதவாதிகளை விடக் கண்டிப்பான நெறிசார்ந்த வாழ்க்கையைப் பின்பற்றினர் என்றார் நேரு. இந்தியா இந்தப் பகுத்தறிவைக் கற்க வேண்டும்; ஏனெனில் நாம் இன்னும் ஜாதி, கண்மூடித்தனமான மதம், புரோகிதத்தின் பிடியில் இருக்கிறோம் என்றும் சொன்னார். (Glimpses of World History, ‘China Becomes a Republic’, பக்கம் 466)

இந்திய அரசியல் மோதல்களில் மதம் என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுச் சுரண்டப்படுகிறது; உண்மையில் அங்கு வேலை செய்வது மதத்தை முன்னிறுத்தும் கும்பல் மனப்பான்மை, அதன் கவலை அரசியல் அதிகாரமும் ஆதாயமும் தான் என்று 1946-ல் எழுதினார். (The Discovery of India, பக்கம் 382)

“இஷ்டதெய்வம்/தனிப்பட்ட கடவுள் என்ற எண்ணமே எனக்கு விசித்திரமாகத் தோன்றுகிறது” என்றும், “நெறிசார்ந்த வாழ்க்கை அணுகுமுறையே என்னை வலுவாக ஈர்க்கிறது” என்றும் எழுதியவர் நேரு. (The Discovery of India, அத்தியாயம் 1, ‘Life’s Philosophy’, பக்கம் 28)

எப்படியும் நாளை பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளுக்காக அவருக்கு மாலை போட வேண்டும் அல்லவா? அப்போது, நீங்கள் ‘உதிர்த்த’ கருத்தையும் திரும்பப் பெறுவது தான் அவருக்குச் சூட்டும்  உண்மையான மாலையாக இருக்கும்.

– இந்திரஜித்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *