– பாணன்
தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காணப்பட்ட ஆசிரியர் அவர்கள் தொடர்ச்சியாக, உலகெங்கும் சென்று இன்றும் அய்யாவின் கொள்கையை வலிமை குன்றாமல் கர்ஜித்து வருகின்றார். மக்களிடையே இது பெரும் வரவேற்பைப் பெற்று மக்களின் மனங்களில் நல்ல மாற்றத்தைக் காணமுடிகிறது.
இதற்கு சிறந்த அண்மைய எடுத்துக்காட்டே, 19.08.2026 அன்று நெல்லைச்சீமையின் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆம் ஆண்டு விழா!’’ திறந்தவெளி மாநாடு!
துணிச்சலுக்கு உரியது எதுவென்றால், இதோ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கூறுகிறார்…
“1929ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களைக் காணவில்லை; கூட்டத்திற்குப் போகவேண்டாம் என்று கி.ஆ.பெ.விசுவநாதம் தடுத்தும் தந்தை பெரியார் ஒரு ஜட்கா வண்டியில் ஏறிக்கொண்டு, கூட்டம் நடக்க இருந்தப் பாதையில் செல்ல வண்டி செலுத்துபவரைப் பணிக்கிறார். அங்கு மக்கள், “இராமசாமி அப்படி என்னதான் பேசப்போகிறார்” என்று காத்திருக்கின்றனர். அவர்களிடம் சென்று பெரியார், ‘‘நான்தான் இராமசாமி’’ என்று அறிமுகம் செய்துவிட்டு, ‘‘புராணங்கள் எல்லாம் பொய் என்று நான் சொல்லவில்லை. சைவர்கள் வைணவப் புராணங்களை பொய் என்கிறார்கள். வைணவர்கள் சைவப் புராணங்கள் பொய் என்கிறார்கள். நான், இரண்டும் பொய் என்கிறேன் அவ்வளவுதான்” என்று ஒரு மணிநேரத்திற்கு மேல் பேசினார். அப்படிப்பட்ட துணிச்சலுக்குச் சொந்தக்காரர்தான் பெரியார்’’ என்றதும் மக்கள் பலமாகக் கைத்தட்டினர். தொடர்ந்து, ‘‘1946 ஆண்டும் பெரியார் இங்கே பேச வந்திருக்கிறார். அப்போதுதான் கற்கள் வீசப்பட்டிருக்கின்றன. அந்த நிகழ்ச்சியில் 13 வயது சிறுவனாக நானும் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். 80 ஆண்டுகளுக்குப் பிறகும் இங்கே பேச வந்திருக்கிறோம்’’ என்று சொல்லி விட்டு, ‘‘நாங்கள் யாருக்காக இப்படிப் பாடுபடுகிறோம்? அனுமதி மறுக்கிறவர்களுக்கும் சேர்த்துதான் பாடுபடுகிறோம். அவர்கள் பிள்ளைகளின் கல்வி, வேலை வாய்ப்புக்காகத்தான் போராடுகிறோம். இதில் காவல்துறைக்கு உதவியாக இருப்போம். தவிர, தொல்லை தராதவர்கள் நாங்கள். எண்ணிப்பாருங்கள்!’’ என்று வேண்டுகோள் விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
அந்தத் துணிச்சலின் வீரியம் 1946ஆம் ஆண்டில் மட்டுமல்ல, அதே வீரியத்துடன் இன்றும் தொடர்கிறது.
குறிப்பாக மனுதர்மம் குறித்தும், அதில் உள்ள மனிதநேயத்திற்கு எதிரான கருத்துக்கள் குறித்தும் பேசினார். மனுதர்மத்தில் எந்த எந்த ஸ்லோகங்களில் என்னென்ன கூறப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். அதுவும் திறந்த வெளிமேடையில் மாநாடு நெல்லைச்சீமையில் நடந்தது. ஆனால், உலகம் முழுவதும் மக்கள் இணையவழியில் கேட்டுக் கொண்டிருந்தனர். இன்றும் பல்லாயிரக்கணக்கானோரைச் சென்றடைந்துகொண்டே இருக்கிறது, மேலும் சென்று சேரும் என்பதில் அய்யமில்லை.
நிகழ்ச்சி மட்டுமல்ல, ஆசிரியர் நெல்லைச்சீமை ரயில் நிலையத்தில் இறங்கியது முதல் அவர் மாநாடு முடித்து அடுத்த ஊருக்குத் திரும்பும் வரை அனைத்தும் செய்தியாக்கி ‘விடுதலை’ நாளிதழில் வந்துள்ளது. செய்தியறிக்கை இதர செய்தித்தாள்களுக்கும் அனுப்பப்பட்டது.
நெல்லைச்சீமைத் தொடர்வண்டி நிலையத்தில் ஆசிரியருக்கு வரவேற்பு, தங்குமிடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு, அதன் பிறகு ஒரு தனியார்த் தொலைக்காட்சிக்கான பேட்டி என்று மாநாடு தொடங்கும் வரை தோழர்களோடு சந்திப்பு, தலைவர்களோடு உரையாடல் என தொடர் நிகழ்ச்சிகள். அத்தனையும் பொதுவெளியில். அதே போல் மாநாட்டு உரையும் பொதுவெளியில்தான்! ஏன் இந்தச் சிறப்பு? அரசே இலவச சிறப்பு விளம்பரங்கள் செய்து கொடுத்துவிட்டது.
சுயமரியாதை இயக்கக் காலத்தில் நெல்லைச்சீமை ரயில் நிலையத்தில் அன்று வந்து இறங்கியபோது, தந்தை பெரியார் கையில் ஒரு துண்டறிக்கை கிடைத்தது.
அது “ராமசாமி நமது புராணங்களை எல்லாம் பொய் என்று சொல்ல வருகிறான்” என்று ஒரு எதிர்ப்புத் துண்டறிக்கை! இதைத்தான் அய்யா கூறினாராம், நமக்கு நாம் விளம்பரம் செய்து நமது உழைப்பை வீணடிக்க வேண்டாம், இதோ இவர்களே செய்து தருகிறார்கள் என்றாராம்.
இன்றோ, திறந்தவெளி மாநாட்டிற்குத் தடைபோட்டது காவல்துறை. அது நெல்லையில் மட்டுமல்ல, தமிழ்நாடு எங்கும் செய்தியாகிவிட்டது. ஏற்கெனவே நீட் இருசக்கர வாகனப் பரப்புரைக்குத் தடை என்றும் பெரியார் திடலில் காவல் துறையினர் 300 பேரை இறக்கி விட்டது பரபரப்பான செய்தியாகி அது ஒரு பெரும் செய்தியாகிவிட்டது. அதே போன்றுதான் நெல்லைச்சீமை மாநாட்டிற்கான தடையும் பெரும் விளம்பரத்தைத் தந்துவிட்டது. பொதுவாக இயக்க நிகழ்ச்சி நிரல் தொடர்பான செய்திகளைச் சிறு பத்திக்கூட எழுதாத வெகுஜன நாளிதழ்கள் முதல் பக்கச் செய்தியாக்கியதால் நல்ல விளம்பரம். பணம் கொடுத்து முதல் பக்கத்தில் விளம்பரம் செய்வதை விட இது நல்ல பலன் கொடுத்தது, காவல்துறைக்கு நன்றி! நன்றி!!
ஓர் அறையில் ஒளிந்து உரையாடி கலந்து கொண்டவர்களின் பெயரைக்கூட வெளியிட மறுக்கும் கோழை ஸநாதனிகள்
மனுதர்மத்தின் ஸ்லோகத்தினை விளக்கி, ஹிந்து தர்மத்திற்கு அது ஏன் முக்கியமானது, அப்படி எந்த முறைப்படி வாழவேண்டும் என்று பரப்புரை செய்ய வந்தவர் யார் தெரியுமா?
நான்கு சங்காராச்சாரிகள் போன்றவர். உலகம் எங்கும் உள்ள இஸ்கான் அமைப்பின் தலைவர், அதை உருவாக்கிய வரான சிறீல பிரபுபாதா என்ற அபய் சரண் தே.
அவர் 1976ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் உரையாற்றினார்.

இன்றும் அத்திருமண மண்டப அலுவலக கேலரியில் பல கருப்பு வெள்ளைப் படங்களுக்கு இடையே இஸ்கான் அமைப்பின் தலைவர் படமும் உள்ளது. மற்ற சிறப்பு விருந்தி னர்கள் நிகழ்ச்சிகளின் பெயர்கள் கூட இல்லை எனலாம்.
அவர் ஓர் உரையாடலின்போது,
“சூத்திரன் சுயமாகச் செயல்பட்டால் வாழ்வியல் முறை சிதைந்துவிடும். அவர்களை ஒருபோதும் சுதந்திரமாக விடக்கூடாது. இதற்கு உதாரணமாக நானே நேரில் கண்ட ஒன்றைச் சொல்கிறேன்.
அமெரிக்காவில் கருப்பினத்தவர் அடிமைகளாக இருந்தனர். அதுவரை அமெரிக்கா நன்கு வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சில கருப்பர்களுக்கு இரக்கப்பட்டு கல்வி அறிவு அளித்தனர். அந்த சிலர் கல்வி கற்ற பிறகு அனைத்து கருப்பினத்தவர்களுக்கும் உரிமை வேண்டும் என்று போராடியதால் அவர்களுக்குச் சில உரிமைகளை வழங்கினார்கள்.
உரிமைகள் அப்படிக் கொடுத்ததிலிருந்து அவர்கள் தொந்தரவு செய்கிறார்கள், குடிகாரர்கள், நாற்றம் பிடித்தவர்கள். பொதுவில் மிகவும் தொந்தரவு செய்கிறார்கள், எப்போதும் பயங்கரமான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள், பண்பாடற்றவர்கள் மற்றும் குடிகாரர்கள்.
அவர்களை அடிமைகளாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, அதுவே சிறந்தது. முன்பு இருந்தது போன்று அவர்களுக்குப் போதுமான உணவு, போதுமான ஆடை கொடுப்பது நல்லது. அதற்கு மேல் தேவையில்லை. இதிலேயே அவர்கள் திருப்தியடைவார்கள். இதைத்தான் சூத்திரர்களுக்கும் செய்யவேண்டும்” என்று பேசினார்.
இது அவர் பேசியது, அன்றைய நாளிதழ்களில் இந்த உரை செய்தியாக வந்திருக்காது. ஏன் அந்தக் காலகட்டத்தில் எங்கு பேசினாலும் அதை பொதுவில் எந்த நாளிதழாவது போடுமா?
அவர் இதைப் பேசப் போகிறேன் என்று துணிச்சலோடு இந்தியாவில் எந்த ஊரிலும் பேசிவிட்டு வேறு நிகழ்ச்சிக்குச் சென்று உரையாற்ற முடியுமா?
இதனால்தான் இவர்கள் கோழைகள். பெருநகரங்களில், தூய்மையான தெருக்களில் ஏதாவது எச்சில், சிதறல்கள் கிடைக்காத என்று சாக்கடைப் பொந்துகளில் உறங்கிக்கிடக்கும் பெருச்சாளிகள் வெளியே வந்து சாலைகளை நாசமாக்கிச் செல்வதைப் போலவே தான் அன்றும் இன்றும் ஸநாநதனிகள் வந்து செல்கின்றனர்.
இதுதான் திராவிடர் இயக்கத்தின் கர்ஜனைக்கும், ஸநாதனப் பெருச்சாளிகளின் கீச்சுகளுக்குமான சரியான எடுத்துக்காட்டு!
