காஞ்சிபுரம், நவ. 12- பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட்டு 75 நாட்களைக் கடந் துள்ள நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான மாற்றுத் திட்டத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்காக காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவித்தார்.
இதையடுத்து, புதிய விமான நிலையம் அமைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் கடிதம் எழுதியது.
ஆனால், மூன்று மாதங்களைக் கடந்தும் இந்த இரு இடங்களிலும் இதுவரை எந்தவிதமான ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த இடங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள முடியும்.
இதற்கிடையே, சிறீஅரிகோட்டா வில் உள்ள ராக்கெட் ஏவுதளம் அருகே அமைந்துள்ளதால் கும்மிடிப் பூண்டியிலும், கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே அமைந்துள்ளதால் செய்யூரிலும் விமான நிலையம் அமைப்பதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் பரிந்துரைக்க வாய்ப்பில்லை எனத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தைப் பராமரிக்கும் பொறுப்பை இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து மாற்ற வேண்டும் எனக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் எழுதிய கடிதம் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான மாற்று இடங்களைத் தேர்வு செய்வதிலும், அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்குவதிலும் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது.
