தேரோடு சென்றநிலை தெருவினிலே விட்டுவிட்டு
ஈரோடு கண்டவனே! எம்மினத்தின் முன்னேற்றம்
பாரோடு போட்டியிடப் பகுத்தறிவு தன்மானம்
கூரோடு கொடுத்தவனே!! கொள்கைவழி நடந்தவனே!!
வேரோடு பழுத்தபலா வீணாகி நிற்பதென்ன?
ஏரோடு வாழ்பவர்க்கே இழிந்தநிலை இன்னுமென்ன??
நீரோடு போகாதே! நிமிர்ந்துநில்!! பகையெதிர்த்துப்
போரோடு வாழ்கவென போர்முரசம் ஒலித்தவனே!!
நால்வர்ணக் கொள்கையினர் நடுநடுங்கிச் சாய்வதற்கும்
மேல்கீழாய் உலகத்தில் மேவுபேதம் தீய்வதற்கும்
நூல்படிக்க… நல்லதமிழ் நூல்படிக்கச் சொன்னவனே!
நாள்முழுதும் படித்தின்று ஞாலத்தை வென்றோமே!
யாரோடும் யாவருமே நிகரென்று சொல்வதற்கே
சீரோடு பாடிநின்ற செழுந்தமிழின் (புரட்சிப்) பாவேந்தே!!
நாரோடு பூவிணைந்த நன்மணத்து மாலையிட்டே
ஊரோடு சேர்ந்துநாங்கள் உன்புகழைப் பாடுவோமே!!
– பாவலர் சுப.முருகானந்தம்
மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு.
