பதவிக்காலம் முடியப் போகிறது எனத் தெரிந்தும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 12– ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் பதவிக்காலம் முடியப் போகிறது எனத் தெரிந்தும், தேர்தல் நடத்த ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமித்த உத்தரவை எதிர்த்து செங்கல்பட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர்.பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறித்த காலத்தில் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகளை முடித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அய்ந்து ஆண்டுகள் பதவிக் காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் சட்டப் பிரிவு மீறப்பட்டது என்றும், சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டித்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், ‘கடந்த ஜனவரி மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 2027-ஆம் ஆண்டு இந்தப் பணிகள் முடிவடைய உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்தப் பிறகுதான் வார்டு மறுவரையறை செய்யப்படும், அதன் பிறகுதான், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்பட்டு, பின்னர் தேர்தல் குறித்து அறிவிக்கப்படும்’ என விளக்கம் அளித்தார்.

மேலும், ‘மக்கள் தொகை கணக் கெடுப்புப் பணிகள் முடிந்த பிறகு, வார்டு மறுவரையறை செய்ய 120 நாட்களும், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய 30 நாள்களும், தேர்தலுக்கு முந்தைய நடவடிக்கைகளுக்கு 90 நாள்களும் என மொத்தம் 240 நாள்கள் தேவைப்படுகிறது’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ‘2021-ஆம் ஆண்டு நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கரோனா பாதிப்பு காரணமாக தற்போது நடைபெறுகிறது. இந்தப் பணிகள் முடியும் வரை எதுவும் செய்ய முடியாது. எங்களது கைகள் கட்டப்பட்டுளளது’ எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் இதுபோன்ற பிரச்சினைகள் வருவது ஏன்? பதவிக் காலம் முடியப் போகிறது எனத் தெரிந்தும் மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்த ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை?’ என கேள்வி எழுப்பினார்.

பின்னர், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதி, தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பதில் மனுவில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *