சென்னை, அக். 30- தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
தவெக அரசின் 3-ஆம் அமைச்ச ரவைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (29.10.2026) நடை பெற்றது. வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் சென்றுள்ள அமைச்சர்கள் அருண்ராஜ், டி.கே.பிரபு ஆகிய இருவர் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் புதிய தொழில் முதலீடுகள், முஸ்லிம் இடஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு, தாழம்பூர் புறம்போக்கு நிலப் பிரச்சனை, வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 8 நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க அனுமதி, சமூகநீதி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைத்தல் போன்ற சில திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம், பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதுதவிர, அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக சில அறிவுறுத்தல்களை முதலமைச்சர் விஜய் வழங்கியதாக கூறப்படுகிறது. ஊழலற்ற ஆட்சி, லஞ்சமற்ற நிர்வாகம் என்பதில் உறுதியுடன் இருப்பதுடன், ஒப்பந்த விவகாரங்களில் கவனமாக, வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.
அமைச்சர்களின் பெயர்களைக் கூறி அவர்கள் உறவினர்கள், உதவியா ளர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய அதிகாரிகள் யாரும் லஞ்சம், ஊழலில் ஈடுபடக் கூடாது. இத்தகைய செயல்கள் நடைபெறாமல் அமைச்சர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், அதிகாரிகளின் பணியிட மாற்றங்களில் அமைச்சர்கள் தலை யிடக்கூடாது.
அமைச்சர்கள் உட்பட அனைவரது செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும். அறிவுறுத்தல்களை மீறிச் செயல்பட்டால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
