உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில், துர்கா பூஜை விழாவின் போது பசுவின் மூத்திரம் மற்றும் பால் கலந்த ‘சரணாமிர்தம்’ பிரசாதமாக வழங்கப்பட்ட நிலையில், அங்குள்ள பசுக்களுக்கு வெறிநாய் கடித்த அடையாளம் இருந்தது தெரியவந்ததையடுத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு அவசரமாக ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோரக்பூரில் நடைபெற்ற துர்கா பூஜை திருவிழாவின் போது, உள்ளூர் கோசாலையில் இருந்து பெறப்பட்ட பசுவின் மூத்திரம் (கோமியம்) மற்றும் பால் கலந்த சரணாமிர்தம் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. இதனிடையே, ‘பிரசாத’த்திற்காகக் கோமியம் சேகரிக்கப்பட்ட அந்த கோசாலையில் இருந்த சில பசுக்களை அண்மையில் வெறிநாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் நாய் கடித்த ஒரு பசுவிற்கு ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு, அது பரிதாபமாக உயிரிழந்தது.
பசு உயிரிழந்த செய்தி பரவியதை அடுத்து, பிரசாதம் அருந்திய பக்தர்கள் மத்தியில் கடும் அச்சமும் பீதியும் ஏற்பட்டது. பசுவிடமிருந்து நேரடியாகக் கோமியம் சேகரிக்கப்பட்டதால், ரேபிஸ் கிருமிகள் சிறுநீரில் கலந்து இருக்கக்கூடும் என்ற அச்சம் உருவானது. மேலும், எந்தெந்த பசுக்களிடம் இருந்து கோமியம் சேகரிக்கப்பட்டது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரசாதம் அருந்திய அனைவருக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக உத்தரவிட்டது.
இதன் காரணமாக, கோரக்பூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். பூஜை விடுமுறை முடிந்து சிலர் மும்பை, சூரத் உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்களின் விவரங்களை உடனடியாகச் சேகரித்த சுகாதாரத்துறை, அவர்கள் இருக்கும் நகரங்களிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அவசரத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதே கோசாலையில் இருந்து பெறப்பட்ட கோமியம் மற்ற சில கோயில்களுக்கும் பிரசாதத்திற்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், ரேபிஸ் அச்சம் மேலும் பரவியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் அனைவரையும் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தவும் சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில் திருவிழாவின் போது மூத்திரம் கலந்த பிரசாதங்களைக் கொடுப்பதும் அதனைப் பக்தர்கள் பயபக்தியாகப் பெற்றுக் கொள்ளும் பக்தி என்னும் மூடநம்பிக்கையால் எத்தகைய அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது என்பதை நினைத்துப் பார்த்தால், சினம் ஏற்படவில்லை; மாறாக பரிதாப உணர்ச்சிதான் ஏற்படுகிறது.
நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட பசுவின் மூத்திரத்தைக் குடித்ததால் பக்தர்கள் பதறுவதையும், அரசு முனைந்து ரேபிஸ் தடுப்பூசியைப் போடுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
ரேபிஸால் பாதிக்கப்பட்ட பசுவின் மூத்திரத்தைக் குடித்தவர்களுக்கு ஒன்று தெரிய வேண்டும்.
பசு மாட்டு மூத்திரத்தில் பொதுவாக என்னென்ன நோய்க் கிருமிகள் குடியிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாட்டுச் சாணம் மற்றும் மாட்டுச் சிறுநீரில் (மாட்டு மூத்திரம்) மனிதர்களுக்கு நோயை உண்டாக்கக்கூடிய பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் (கிருமிகள் பாக்டீரியாக்கள்) இயல்பாகவே வாழ்கின்றன.
ஆராய்ச்சிகளின்படி, சுத்திகரிக்கப்படாத அல்லது காய்ச்சப்படாத மாட்டுச் சிறுநீரில் கண்டறியப்பட்ட முக்கிய கிருமிகள் பின்வருமாறு:
எஸ்செரிச்சியா கோலை (E.coli / Escherichia coli): இது மனிதர்களின் குடலைப் பாதித்து தீவிர வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது.
லெப்டோஸ்பைரா சுருளுயிரி பாக்டீரியா: நாய்கள், மாடுகள் போன்ற விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர், மண் அல்லது உணவு மனிதர்களின் தோல் வெட்டுகள், சளி (கண், மூக்கு, வாய்) வழியாக உடலுக்குள் நுழைகிறது. கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி,
தசை வலி, கண்கள் சிவந்து போதல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நிலை ஏற்படும்.
சால்மோனெல்லா (Salmonella): டைபாய்டு மற்றும் கடுமையான இரைப்பை குடல் அழற்சியை (Gastroenteritis) உண்டாக்கும் பாக்டீரியா.
புரூசெல்லா (Brucella): புரூசெல்லோசிஸ் (Brucellosis) என்ற நோயை ஏற்படுத்துகிறது. இது தொடர் காய்ச்சல், மூட்டு வலி மற்றும் உடல் சோர்வை உண்டாக்கும்.
ஸ்டேஃபிளோகோகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகோகஸ் (Staphylococcus & Streptococcus): தோலில் தொற்று மற்றும் புண்களை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள்.
கிளெப்சியேலா (Klebsiella) & புரோட்டீயஸ் (Proteus): மனிதர்களுக்குச் சிறுநீர் பாதை தொற்று (UTI) மற்றும் சுவாசப் பிரச்சினைகளை உருவாக்கக்கூடியவை.
கிரிப்டோஸ்போரிடியம் (Cryptosporidium): இது ஒரு வகையான ஒட்டுண்ணி (Parasite) ஆகும். இது மனிதர்களுக்குக் கடுமையான நீர்ச்சத்து இழப்புடன் கூடிய வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
பூஞ்சை காளான்கள் (Fungi): ஈரப்பதம் மற்றும் கழிவுப் பொருட்களில் வளரக்கூடிய சில வகையான பூஞ்சை வித்துகளும் இதில் காணப்படலாம்.
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI – Indian Veterinary Research Institute) நடத்திய சில ஆய்வுகளில், பசுவின் சிறுநீரில் குறைந்தபட்சம் 14 வகையான அபாயகரமான பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சுத்திகரிக்கப்படாத அல்லது நேரடியாக மாட்டுச் சிறுநீரைப் அருந்துவது ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்றும், நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இவ்வளவுக் கொடிய கிருமிகள் தாண்டவமாடும் பசுவின் மூத்திரத்தைக் குடிப்பதால் ஏற்படும் நோய்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ‘‘பக்தி வந்தால் புத்தி போகும்’’ என்ற தந்தை பெரியாரின் அறிவு மொழியை இந்த இடத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மாட்டு மூத்திரத்தைக் குடித்தால் சகல நோய்களும் தீரும் என்று சென்னை அய்.அய்.டி. இயக்குநர் சொல்லுகிறாரே என்று யோசிக்கலாம். அப்படி சொல்லுகிறவர்கள் குறைந்தபட்சம் தலைவலிக்குக்கூட ஆஸ்ப்பிரோ மாத்திரையைத் தேடுவார்களேயொழிய மாட்டு மூத்திரத்தைக் குடிக்க மாட்டார்கள்.
அரசமைப்புச் சட்டம் 51A(h)க்கு விரோதமாகப் பேசும் இத்தகையவர்மீது நியாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
