வல்லம், அக்.15- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பெரியார் கபாடி போட்டி 09.10.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இளைஞர்களின் குறிப்பாக மாணவர்களின் உடலும் உள்ளமும் வலிமையானதாக மாற்றம் பெற கபாடி போன்ற வீர விளையாட்டுக்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. வளமான இந்தியாவிற்கு வலிமையான இளைஞர்கள் வேண்டும் என்ற நோக்கத்தில் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் கல்வியோடு சேர்த்து விளையாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மேலும், தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான கபாடிப் போட்டி பற்றிய விழிப்புணர்வை மாணவர்களி டையே உண்டாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இப்பாலி டெக்னிக்கின் விளையாட்டுத் திடலில் “பெரியார் கபாடிப் போட்டி 2026” என்ற மாபெரும் கபாடிப் போட்டி நடைபெற்றது. இந்த கபாடிப் போட்டியில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளைக் காட்டி விளையாடினர். கபாடிப் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 17 பள்ளி களிலிருந்து சுமார் 200ஆம் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி மற்றும் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா ஆகியோர் கபாடிப் போட்டியை தொடங்கி வைத்தனர். கபாடி போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் சார்பாக தேநீர் மற்றும் மதிய உணவுகளும் வழங்கப்பட்டது.
17 பள்ளிகள் பங்கு பெற்ற இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பாப்பாநாடு எம்.எம்.ஏ பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து வெற்றிக் கோப்பையுடன் ரூபாய் 7,500 பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றனர். இரண்டாம் இடம் பிடித்த தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வெற்றி கோப்பையுடன் ரூபாய் 5,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்திதை தக்க வைத்துக் கொண்ட மருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றிக் கோப்பையுடன் ரூபாய் 2,500/-கான பரிசுத்தொகையையும் பெற்றுக் கொண்டனர். நான்காம் இடம் பெற்ற பூதலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றிக் கோப்பையை பெற்றனர்.
சிறப்பாக விளையாடிய
எம்.எம்.ஏ. பள்ளி மாணவர்
எஸ்.பரதன் சிறந்த ரைடர்க்கான கோப்பையை பெற்றார். அதே பள்ளியை சேர்ந்த மாணவர் டி.தீபன் சிறந்த ஆல் ரவுண்டர் கோப்பையை வென்றார்.
மாலை 5.00 மணிக்கு கபாடிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர்
க.பவெள்ளியங்கிரி, துணை முதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் கோ.இராஜாராமன் மற்றும் போட்டி நடைபெற தங்கள் ஒத்துழைப்பையும், பங்கினையும் நல்கிய சிறப்பு விருந்தினர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
மேலும் இக்கபாடிப் போட்டியை நன்கு திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்திய இப்பாலிடெக்னிக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் இரா.கோ.கிரிதரபிரசாத் கூறுகையில் இந்தப் போட்டி சிறப்பாக நடைபெற உதவிய அனைத்துத் துறை தலைவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மைதானத்தை தரமாகத் தயாரித்த கல்லூரி கபாடி வீரர்களுக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் மற்றும் தஞ்சை மாவட்ட கபாடி நடுவர்களுக்கும் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
