அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு இரண்டு மாதத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும்! தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவருக்கு உயர் நீதிமன்றம் கெடு!

- Advertisement -

சென்னை, அக். 14- அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க மனுக்கள் மீது இரு மாதங்களில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக கொறடா உத்தரவை மீறி சட்டப் பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி அதிமுக சட்டமன்ற உறுப் பினர்களாக பதவி வகித்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் மீதும் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தார்.

இது நிலுவையில் இருந்த நிலையில் 6 பேரது பதவி விலகல் கடிதங்களை ஏற்று பேரவைத் தலைவர் உத்தரவிட்டது சட்ட விரோதம் என அறிவிக்கக்கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ண மூர்த்தி, தேசிய மக்கள் சக்திகட்சித் தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (13.10.2026) பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

6 பேரது பதவி விலகல் கடிதங் களையும் பேரவைத் தலைவர் ஏற்று உத்தரவு பிறப்பித்தது சட்ட விரோதமாகாது. பதவி விலகுவது அவர்களின் தனிப்பட்ட உரிமை. மாறாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சுயவிருப்பத்தின் பேரில் பதவி விலகினாரா என்பதைத் தான் பேரவைத் தலைவரால் விசாரிக்க முடியும்.

தகுதிநீக்கம் செய்யக்கோரும் மனு நிலுவையில் உள்ளதால் மட்டுமே, பதவி விலகலை பேரவைத் தலைவர் ஏற்றது சட்டவிரோதம் எனக்கூற முடியாது. பதவி விலகல், தகுதி நீக்கம் தனித்தனி நடவடிக்கைகள். எனவே 6 பேரது பதவி விலகல் கடிதங்களையும் ஏற்றது அரசியல மைப்புச் சட்டரீதியாகச் செல்லும்.

கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை சி.விஜய பாஸ்கரை அதிமுக மன்னித்து விட்டது. அதன்பிறகே அவர்கள் தவெகவில் இணைந்துள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் எதிராக எந்தவொரு தகுதி நீக்க நடவடிக்கையும் நிலுவையில் இல்லாத சூழலில் அவர்களை தகுதி நீக்கம் கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அளிக்கப்பட்டுள்ள மனு நிலுவையில் உள்ளதால் அவர்கள் மீதான நடவடிக்கையை பேரவைத் தலைவர் இருமாதங்களில் முடிக்க வேண்டும். 4 பேரது பதவி விலகலை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதன் மூலம் அவர்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை செல்லாததாகி விடாது.

கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த விசார ணையை சம்பந்தப்பட்ட 4 பேரும் தாமதப்படுத்தும் நோக்கில் செயல்பட்டால் அதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்கக் கூடாது. அதேபோல இரு மாதங்களில் 4 பேர் மீதான தகுதிநீக்க நடவடிக் கையின் மீது பேரவைத் தலைவர் முடிவு எடுக்காதபட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் 6 பேருமே இந்த விவகாரத்தில் தப்ப முடியாது என்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *