வயதாவதைத் தள்ளிப் போட முடியுமா? மகேஸ்வரன் ப

3 Min Read
- Advertisement -

பூமியிலிருந்து பல கோடி கி.மீ வரை நாம் அனுப்பிய விண்கலங்கள் பயணித்த பின்னும், மரணத்தை வெல்வது மானிட சமூகத்தின் ஒரு பெரும் கனவாகவே இருந்து வருகிறது. மரணத்தை வெல்வது சாத்தியம் இல்லைதான், ஆனால் தள்ளிப்போட முடியும். உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் 1900இல் 32 ஆக இருந்தது. ஆனால் அது இன்று 73.5 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ அறிவியலின் வளர்ச்சிதான் இதற்குக் காரணம்.

மரணத்தைக் குறிப்பிடத்தகுந்த அளவுக்குத் தள்ளிப்போட்டாலும், நம்மால் வயதாவதைத் தடுக்க முடியவில்லை. வயதாகும்போது ஏற்படும் உடல் தளர்வுகள் நம் இயக்கத்தைப் பாதிக்கின்றன. வயதாதல் மறதி, தளர்வு, நரம்புகள் பாதிப்பு, முதுமை நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

வயதாதலுக்கும் மூளையின் ஹைப்போதலாமஸுக்கும் தொடர்பு இருக்கிறது. ஹைப்போதலாமஸ் உடல் வெப்பநிலை, பசியுணர்வு, வளர்சிதை மாற்றம், தூக்கம், ஹார்மோன் சுரப்பு போன்ற பணிகளைச் செய்வதால், உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் இதன் தாக்கம் இருக்கும். வயதாகும்போது ஹைப்போதலாமஸின் செயல்பாடு குறைகிறது. இந்தச் செயல்பாடு குறைவதற்கும் வயதாதலுக்கும் தொடர்பு இருப்பதாக மெனின் புரதம் தொடர்பான ஆய்வு காட்டுகிறது. அதேபோல், கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு முக்கியமான மூளைப் பகுதியான ஹிப்போகாம்பஸில் FTL1 என்ற புரதம் வயதாதலை விரைவுபடுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மெனின்

சீனாவைச் சேர்ந்த லிஜ் லெங் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு, ஹைப்போதலாமஸில் உள்ள மெனின் என்ற புரதம் வயதாதலுடன் நெருங்கிய தொடர்புடையது என்று கண்டறிந்துள்ளது. 2023இல் PLOS Biology இதழில் வெளியான இந்த ஆய்வின்படி, எலிகளுக்கு வயதாகும்போது ஹைப்போதலாமஸில் மெனின் அளவு குறைகிறது. இந்தக் குறைவு உடல் முழுவதும் வயதாவதோடும், நினைவாற்றல் குறைவதோடும் தொடர்புடையதாக இருந்தது.

இதை உறுதி செய்ய ஆராய்ச்சியாளர்கள் இரண்டு சோதனைகளைச் செய்தனர். முதலில், வயதான எலிகளின் ஹைப்போதலாமஸில் உள்ள விஎம்எச் (VMH) பகுதியில் மெனின் மரபணுவைச் செலுத்தி, மெனின் அளவை மீண்டும் அதிகரித்தனர். அந்த எலிகளின் ஆயுட்காலம் நீடித்தது, கற்றல் மற்றும் நினைவாற்றல் மேம்பட்டது, வயதாதலைக் காட்டும் உயிரியல் குறியீடுகளும் மேம்பட்டன. இரண்டாவதாக, நடுத்தர வயது எலிகளில் அதே பகுதியில் மெனினைத் தடுத்தபோது, அவை இளம் வயதிலேயே முதுமை அறிகுறிகளைக் காட்டின, நினைவாற்றல் விரைவாகக் குறைந்தது.

மெனின் குறையும் போது டி-செரின் (D-serine) என்ற வேதிப் பொருள் மூளையின் ஹிப்போகாம்பஸுக்குச் செல்வது பாதிக்கப்படுகிறது என்றும், டி-செரினைக் கொடுத்தால் வயதான எலிகளின் நினைவாற்றல் குறைவு சரியானது என்றும் ஆய்வு கூறுகிறது.

FTL1: அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் சான் பிரான்சிஸ்கோ வளாகத்தைச் (UCSF) சேர்ந்த சவுல் வில்லேடா (Saul Villeda) தலைமையிலான  அறிவியலாளர்கள், மூளை வயதாவதில் முக்கியப் பங்கு வகிக்கும் FTL1 என்ற புரதத்தைக் கண்டறிந்துள்ளனர்.

வயதாகும்போது எலிகளின் ஹிப்போகாம்பஸில் மரபணுக்கள் மற்றும் புரதங்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் காலப்போக்கில் கண்காணித்தனர். இளம் மற்றும் வயதான எலிகளுக்கு இடையே தொடர்ச்சியாக வேறுபட்டது FTL1 மட்டுமே. வயதான எலிகளில் FTL1 அளவு அதிகமாக இருந்தது. அவற்றின் ஹிப்போகாம்பஸில் நரம்பு செல்களுக்கு இடையிலான இணைப்புகள் குறைவாக இருந்தன, அறிவாற்றல் சோதனைகளிலும் அவை மோசமாகச் செயல்பட்டன.

இளம் எலிகளில் FTL1 அளவை அதிகரித்தபோது, அவற்றின் மூளையின் அமைப்பும் செயல்பாடும் வயதான எலிகளைப் போல மாறின, நடத்தையிலும் அது வெளிப்பட்டது. ஆய்வகத்தில் அதிக FTL1 உற்பத்தி செய்யுமாறு மாற்றப்பட்ட நரம்பு செல்கள், கிளைகள் நிறைந்த சிக்கலான வலையமைப்பை உருவாக்குவதற்குப் பதிலாக, குட்டையான, ஒற்றை நீட்சிகளையே உருவாக்கின.

மிக ஆச்சரியமான முடிவு, வயதான எலிகளில் FTL1 அளவைக் குறைத்தபோது கிடைத்தது. நரம்பு செல்களுக்கு இடையிலான இணைப்புகள் அதிகரித்தன, நினைவாற்றல் சோதனைகளில் அவற்றின் செயல்பாடும் மேம்பட்டது. “இது உண்மையிலேயே பாதிப்புகளைத் திருப்பியமைப்பதுதான். அறிகுறிகளைத் தள்ளிப்போடுவது அல்லது தடுப்பது மட்டுமல்ல” என்று வில்லேடா கூறினார்.

ஆய்வின் முடிவுகள்: மெனின் வயதாகும்போது குறைகிறது, அதை மீட்டெடுப்பது நன்மை தருகிறது. FTL1 வயதாகும்போது அதிகரிக்கிறது, அதைக் குறைப்பது நன்மை தருகிறது. இந்த இரண்டு ஆய்வுகளும் வயதாதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று மட்டுமல்ல, உயிரியல் ரீதியாகப் புரிந்துகொண்டு மாற்றக்கூடிய ஒரு செயல்முறையாகவும் இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. இந்த ஆராய்ச்சிகள் எலிகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவை நேர்மறையான முடிவுகளைத் தந்தாலும், மனிதர்களில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *