மனிதர்களுக்கான குரல் தனித்துவமாக இருப்பது ஏன்? வியப்பூட்டும் ஆய்வு முடிவுகள்!

3 Min Read

மனிதர்களுக்கு மட்டும் தனித்துவமான குரல் அமைந்தது எப்படி என்பது குறித்து, அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் (National Library of Medicine) வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் வியப்பூட்டும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.

மனிதக் குரல் என்பது நம் அடையாளங்களில் மிக முக்கியமானது. கூட்டம் அதிகமுள்ள ஒரு அறையில் நாம் பேசினாலும், நம்மை நன்கு தெரிந்தவர்களால் ஒருசில வார்த்தைகளைக் கேட்டே நம் குரலை உடனடியாக அடையாளம் கண்டுவிட முடியும். மனிதர்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட தனித்துவமான குரல் அமைந்தது எப்படி என்பது குறித்து, அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் வியப்பூட்டும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. மனிதக் குரலின் தனித்துவத்திற்கு பின்னால் இருக்கும் பரிணாம வளர்ச்சி மற்றும் அறிவியல் காரணங்கள்;

மனிதக் குரல் இவ்வளவு தெளிவாக இருப்பதற்கு நம் உடலில் புதிய அம்சங்கள் சேர்ந்தது மட்டுமே காரணமல்ல; மாறாக, பிற குரங்கினங்களிடம் இருக்கும் சில அம்சங்கள் மனித உடலில் இருந்து பரிணாம வளர்ச்சியின்போது நீக்கப்பட்டதுதான் முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெரும்பாலான குரங்குகள் மற்றும் வாலில்லா குரங்கினங்களின் குரல் நாண்களுக்கு மேலே ‘குரல் சவ்வுகள்’ எனப்படும் சிறிய அமைப்புகளும், அவற்றின் தொண்டையில் காற்றுப் பைகளும் இருக்கும். மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் இந்த சவ்வுகளும் காற்றுப் பைகளும் மறைந்து, மிகவும் நிலையான ‘குரல் பெட்டி’ உருவானது. இது மனிதர்கள் குழப்பமான சத்தங்களை எழுப்பாமல், தெளிவான மற்றும் கட்டுப்பாடான ஒலிகளை உருவாக்க உதவுகிறது.

குரல் நாண்களில் இருந்து புறப்படும் ஒலியானது தொண்டை, வாய் மற்றும் மூக்கு வழியாகப் பயணிக்கிறது. இந்த இடங்கள் நம் உடலுக்குள் ஒரு ‘எதிரொலி அறையாக’ செயல்பட்டு, ஒலியை வெளியேற்றுவதற்கு முன்பு அதை மாற்றி அமைக்கின்றன. இந்த வடிகட்டுதல் செயல்முறையை தாண்டி வெளியேறும் மிக வலிமையான ஒலி அலைவரிசைகளை விஞ்ஞானிகள் ‘ஃபார்மண்ட்ஸ்’ என்றழைக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் குரலும் வித்தியாசமாக ஒலிப்பதற்கு இந்த ஃபார்மண்ட்ஸ் தான் முதன்மைக் காரணம்.

இந்த ஃபார்மண்ட்ஸ் அலைவரிசையானது ஒருவருடைய குரல் பாதையின் நீளம், வாயின் வடிவம், அன்னத்தின் வளைவு, தொண்டையின் ஆழம் மற்றும் மண்டை ஓடு, சைனஸ் ஆகியவற்றின் கட்டமைப்பைச் சார்ந்துள்ளது. இதில் ஏற்படும் மிகச்சிறிய அளவிலான மாற்றம்கூட குரலின் தன்மையை மாற்றிவிடும். ஆண்களுக்கு இடையிலான வேறுபாடு: ஒரே உயரத்தில் இருக்கும் இரண்டு ஆண்களின் மண்டை ஓட்டின் வடிவம், வாய் குழி அல்லது சைனஸ் அமைப்பில் லேசான வேறுபாடு இருந்தால் கூட, அவர்கள் இருவரின் குரலும் முற்றிலும் மாறுபட்டதாகவே ஒலிக்கும். பொதுவாக ஆண்களுக்குக் குரல் பாதை நீளமாகவும் பெரியதாகவும் இருக்கும்; பெண்களுக்குக் குரல் பாதை சிறியதாக இருக்கும். இதனால் தான் இருபாலரின் குரல்களும் வேறுபடுகின்றன.

தாயின் குரலை ஒரு குழந்தை கருவில் இருக்கும்போதே அடையாளம் கண்டு கொள்கிறது என்றும், மற்றவர்களின் குரல்களைக் கேட்கும்போது காட்டும் எதிர்வினையை விட, தாயின் குரலைக் கேட்கும்போது அது வித்தியாசமான எதிர்வினையை வெளிப்படுத்துகிறது என்றும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதக்குரல் அமைப்பை வடிவமைப்பதில் குறிப்பிட்ட சில மரபணுக்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. நவீன மனிதர்கள், நியாண்டர்தால்கள் மற்றும் டெனிசோவான்கள் ஆகிய பழங்கால மனித இனங்களிடமிருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி அடைந்த பிறகே இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஏறத்தாழ 1,00,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் பெரிய குழுக்களாக வாழத் தொடங்கி, தங்களுக்குள் கூட்டணிகளை உருவாக்கிக் கொண்டனர். மிக நெருக்கமான ஒரு சமூகமாக மனித இனம் மாறத் தொடங்கியதால் தான், இந்தத் தனித்துவமான குரல் அமைப்பு உருவானதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தூரத்தில் இருக்கும்போதோ அல்லது கூட்ட நெரிசலில் இருக்கும்போதோ ஒருவரை எளிதில் அடையாளம் காண இந்தத் தனித்துவக் குரல் உதவியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *