தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை நாளும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபயோகக் கருவிகள் வரை பெருகியிருக்கின்றன. இவற்றைக் கணக்கிட்டு மின்னாற்றலையும் பெருக்கிட அரசுகள் திட்டமிட வேண்டும். கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் தான் குறிப்பிடத்தக்க அளவில் திட்டங்கள் தொடங்கப்பட்டு விரைவுபடுத்தப்பட்டன. 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 306 மெகாவாட் மின்சாரத்திற்கான திட்டங்கள் தான் கொண்டு வரப்பட்டன. இதனால், அடுத்த அய்ந்து ஆண்டுகளில் மின்சாரத் தேவையைத் தீர்க்க முடியாமல், 2010-2011 காலத்தில் மின்வெட்டு அரசியல் பிரச்சினையாகவே உருவெடுத்தது. அந்த எதிர்வினையைத் தி.மு.க. எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால், அதே காலத்தில் 2006-2011 முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான ஆட்சிக் காலத்தில், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சுமார் 4,800 மெகாவாட்டுக்கான திட்டங்களைத் தி.மு.க. தொடங்கியது. ஆனால், அவற்றின் உற்பத்தி பெரும்பாலும் தொடங்குவதற்கு 2013 முதல் 2014 வரை ஆனது. (உடன்குடி திட்டம் மட்டும் 2026இல் தான் உற்பத்தியைத் தொடங்கியது.) இந்தத் திட்டங்கள்தான் 2011-இல் அமைந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 2015-க்குப் பிறகு, மின்வெட்டு குறைந்ததற்கான காரணம். 2021 வரை மீண்டும் தமிழ்நாடு மின் பற்றாக்குறையால் முடங்கியது. அடுத்து வந்த திராவிட மாடல் ஆட்சியில், வடசென்னை தொடங்கி தூத்துக்குடி வரை அனல் மின் திட்டங்களும், மரபு சாரா எரிசக்தித் திட்டங்களும் கொண்டுவரப்பட்டன.
மேலும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் மின்சாரத் தேவையை ஈடுகட்ட மின் கொள்முதல் செய்யும் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தன. கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் வரை மின் தட்டுப்பாடுகள் இல்லாத வகையில் தமிழ்நாடு இருந்து வந்தது. ஆனால் புதிய அரசு (த.வெ.க.) அமைந்த ஓரிரு நாட்களிலேயே மின் தட்டுப்பாடு தொடங்கியது மின் தட்டுப்பாடு இருக்கிறது என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவியது. தொடர்ந்து அதுவே பேசு பொருளாகவும் ஆனது.இதற்கிடையில் கடந்த ஆட்சியில் மின் கொள்முதலுக்காக போடப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் தமிழ்நாடு த.வெ.க. அரசால் ரத்து செய்யப்பட்டன.
கடந்த ஆட்சியில் குறுகிய கால மின்சார தேவைக்காக ரூபாய் 11 முதல் ரூபாய் 20 வரை ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போதைய மின்துறை அமைச்சராக இருக்கும் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடந்த ஆட்சியில் இதனை கடுமையாக விமர்சித்தார்.
கோடை காலங்களுக்கு என்றும், விழா காலங்களுக்கு என்றும் முன்கூட்டியே திட்டமிட்டு அதிக தேவையை கருத்தில் கொண்டு மின் கொள்முதல் செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். நீண்டகால தேவைக்கான கொள்முதல் குறுகிய கால தேவைக்கான கொள்முதல் என இரு வகைகள் உள்ளன. தற்போது குறுகிய கால கொள்முதலுக்கே நாளொன்றுக்கு ரூபாய் 5 கோடி செலவாகும் என்றும், 20 நாட்களுக்கு 100 கோடி வரையில் செலவாகும் என்றும் அமைச்சர்
சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அதாவது யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 35 முதல் 37 வரை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுவரையில் செய்யப்பட்டு வந்த அனைத்து ஒப்பந்தங்களிலும் இதுவே மிக அதிக விலைப்புள்ளியை கூறியுள்ள ஒப்பந்தமாகும். முறையாக திட்டமிடாமல் அவசரகதியில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழ்நாடு அரசுக்கு பெருத்த நட்டம் ஏற்கப்பட்டுள்ளது என்றும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மின் தேவைக்காக போடப்படும் ஒப்பந்தங்களை எல்லாம் ஊழல் செய்வதற்கான வழிவகைகள் என்று தேர்தலுக்கு முன்பு மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்த த.வெ.க. தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய் ஆட்சியில் தான் இதுவரையில் இல்லாத அளவில் மிக அதிகமான தொகைக்கு இந்த முறை மின் கொள்முதல் செய்யப்படுகிறது.
அதிக விலைப்புள்ளிகள் கோரப்பட்டால், அது கட்டுப்படியாக விட்டால், அந்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டு மீண்டும் விலைப் புள்ளி கோருவது வழக்க மாக இருக்கும் நடைமுறை. ஆனால் ஆட்சியில் உள்ள த.வெ.க. அரசு இந்த முறை அப்படியும் செய்யவில்லை.
நிர்வாகத் திறமையின்மையால் விளம்பர வெளிச் சத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்துதலால் தற்போது தமிழ்நாடு மக்களின் தலையில் பெரும் சுமை ஏற்றப் பட்டுள்ளது.
மின் தேவையை நிறைவு செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அதனை குறைந்த செலவில் ஈடு கட்டுவதும் மிக முக்கியமாகும். ஆட்சியில் இல்லாத போது ஏதாவது ஒன்றை பேசுவதும், தவறி ஆட்சி கையில் கிடைத்து விட்ட பிறகு அதற்கு முற்றிலும் நேர்மாறாக நடந்து கொள்வதும் அரசியல் நெறிமுறையாகாது.
‘‘சொல்லுதல் யாருக்கும் எளியவாம் அரிய
சொல்லிய வண்ணம் செயல்!’’
