விடுதலை என்பதை ‘சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நாட்டைப் பிடித்த வெளிநாட்டாரிடமிருந்து, பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வந்து மறைமுகமாக ஆட்சி செய்து கொண்டிருந்த ஆரியர்கள் கைக்குப் போவதே’ என்று பலர் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சிந்திக்கவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், விடுதலை என்ற சொல்லுக்கு விரிவான பொருளைக் காட்டியவர் தந்தை பெரியார். சுதந்திரச் சிந்தனை என்பதற்கு எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காத, ஏற்ெகனவே சமூகம் நம் சிந்தனையிலும், நம்பிக்கைகளிலும் திணித்துள்ள அபத்தங்களை நீக்கி சரியான பார்வையில் எதையும் அறிந்து கொள்ளவும், புரிந்துகொள்ளவும் தயாராவது என்ற தத்துவப் பார்வையுடன் அணுகியவர் தந்தை பெரியார்.
அதனால்தான், “சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொருவிதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத்தையும் தன் மதிப்பையும் உண்டாக்கக் கூடியதான ஒரு இயக்கமாகும். இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கையெல்லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுதலையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம்” (‘குடிஅரசு 25.08.1929) என்று தாம் கண்ட இயக்கத்துக்கு அறிவு விடுதலை இயக்கம் என்றே பொருள் காட்டியவர்.
ஆனால், அறிவு கொண்டு சிந்திப்பதை ஏற்கமுடியாத, ஹிந்துத்துவத்தினை ஏற்ற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. அரசின் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் சுதந்திர நாளில் ஆற்றிய உரையில், ஃபாசிசத்திற்கு எதிராகச் சிந்திப்பவர்களையும், செயல்படுவோரையும் “திமாகி நக்சல்” என்று குறிப்பிட்டார். அதாவது ‘அறிவாளி நக்சல்’களாம்!
“ஆயுதம் ஏந்திய நக்சலிசம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில், நாடு “இந்த ‘அறிவுசார் நக்சல்களை’ அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்; அத்துடன், வளர்ந்த நாட்டை உருவாக்கும் நோக்கில் இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டும்” என்று பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் பலவும் உலகம் முழுவதும் உள்ள அரசுகளால், இன்றைய அறிவியலின் வளர்ச்சியைக் கொண்டு அடக்கப்பட்டுவிட்டன. ஏனெனில், புரட்சியாளர்களிடம் இருக்கும் ஆயுத, ஆள்பல வலிமையை விட அதிகாரத்தில் இருப்போருக்கு அவற்றைத் திரட்டுவது எளிது. எனவே, வெறும் ஆயுதப் புரட்சி நிரந்தர வெற்றிக்குரியதல்ல என்பதே உலகம் கற்றுக் கொண்டுள்ள பாடம்!
அதனால்தான், தந்தை பெரியார் வன்முறை ஆயுதம் ஏந்தாத அறிவுப் புரட்சியை மேற்கொண்டார். ‘‘அறிவையே ஆயுதமாக்கிப் போராடுங்கள்’’ என்றார். கேள்விகளை விதைத்து, சிந்தனையை அறுவடை செய்த அறிவேருழவர் தந்தை பெரியார்! அறிவாயுதம்தான் ஆதிக்கவாதிகளை அச்சுறுத்தியது. இன்றும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு!
சில ஆண்டுகளுக்கு முன், வேறு வார்த்தைகளில் இதையே சொன்னார். ‘அர்பன் நக்சல்கள்’ என்றார். கருத்தாயுதம் ஏந்திப் போராடிய, எழுதிய, பேசிய இடதுசாரிகளையும், ஒடுக்கப்பட்டோர் அமைப்பினரயும் நோக்கி வழக்குகள் வந்தன. ஆள்தூக்கிப் பாசிசச் சட்டமான உபா சட்டத்தின் படி (U.A.P.Act) பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். இன்றும் கூட, அவர்களில் பலரை முறைகேடாகச் சிறையில் வைத்திருக்கிறது ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு. ‘பீமா கோரேகான்’ வழக்கில் கைது செய்யப்பட்டவர்களும், அதன் பின்னர், சி.ஏ.ஏ. சட்டத்திற்கெதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் போன்றவர்களும் ஆறு முதல் எட்டு ஆண்டுகளாக இன்னமும் சிறையில் வாடுகிறார்கள். வழக்கு விசாரணைகள் விரைவாக நடக்காது; பிணை வழங்குவதில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்படும்; விசாரணைக் கைதிகளாகவே எவ்வளவு காலமும் வைத்துக் கொள்வதற்கான வகையில் சட்டத்தை வளைத்துக் கொள்ளலாம். இன்றைக்கு அதையே தான் ‘திமாகி நக்சல்’கள் (அறிவுசார் நக்சல்) என்கிறார் பா.ஜ.க. பிரதமர்! அதை மீண்டும், மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வலியுறுத்துகிறார். ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, நாடு முழுக்க நடைபெற்ற மாணவர் போராட்டங்களையும் மனதில் கொண்டுதான், இப்போது திமாகி நக்சல்கள் வெளியில் வருகிறார்கள், பாருங்கள் என்று மிரட்டல் விடுக்கிறார். ‘முட்டாள் நக்சல்களாக இருப்பதற்குப் பதில் அறிவுசார் நக்சலாக இருப்பதில் பெருமைதான்’ என்று மேனாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிந்திக்காதீர்கள், அப்படியே நாங்கள் சொல்வதை நம்புங்கள், சிந்தனை அடிமையாக இருங்கள் என்பது தான் இந்துத்துவம் என்பதை மீண்டும் மீண்டும் கூறுகிறது ஆரியம்.
“சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திப்பவனே முழுப் பகுத்தறிவுவாதி” என்ற தந்தை பெரியார், “சிந்திக்க அஞ்சுபவன் கோழை” என்றும் அழுத்தமாகப் பதிவு செய்தார். எனில், சிந்திப்பவர்களை அச்சுறுத்துபவர்கள்…?
