‘‘மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காசிப்பூர் பகுதியில், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஜோதிநகர் காலனியின் அய்ந்து தெருக்களுக்குக் கடந்த 90 நாட்களுக்கும் மேலாக மாநகராட்சி குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 5,500-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அத்தியாவசியத் தேவையான குடிநீரின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப் பகுதியில் ‘மொல்லா பாறை’ (முஸ்லிம் காலனி) என்று அழைக்கப்படும் பகுதியில், கடந்த ஜூலை 27 முதல் 29 வரை மாநகராட்சி சார்பில் குழாய் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பணிகள் முடிந்த அன்றைய இரவு (ஜூலை 29) முதல், அப்பகுதிக்கான குடிநீர் விநியோகம் முற்றிலுமாக நின்றுவிட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அதன் அருகிலேயே உள்ள இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் சீராகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட இந்த அய்ந்து தெருக்களைச் சேர்ந்த மக்கள் கொல்கத்தா மாநகராட்சியிடமிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மற்ற அன்றாடத் தேவைகளான குளிப்பது மற்றும் துணி துவைப்பதற்காக கூக்ளி (கங்கை) நதிப் படிகளிலிருந்து தண்ணீரைச் சேகரித்து வருகின்றனர். நீச்சல் தெரியாத குழந்தைகளும் பெரியவர்களும் வேறு வழியின்றி ஆற்றுநீரைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தூய்மையற்ற ஆற்றுநீரைப் பயன்படுத்துவதால், அப்பகுதியைச் சேர்ந்த பல குழந்தைகளுக்குக் காய்ச்சல், தலைவலி மற்றும் தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அப்பகுதி குடும்பங்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேற்குவங்க மாவட்ட புருலியாவில் உள்ள காஷிப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கமலாகாந்த ஹன்ஸ்டா, தேர்தல் பரப்புரையின் போதே “இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்கவேண்டாம்” என்றும், “இஸ்லாமியர்களுக்கு அடிப்படை வசதிகளைக்கூட தடுத்துவிடுவேன்” என்றும், நேரடியாகவே தேர்தல் பரப்புரையின் போது பேசினார். மேலும் தேர்தலில் வென்ற பிறகு தன்னைச் சந்திக்க வந்த இஸ்லாமியர்களிடம் என்னைப் பார்க்க வரவேண்டாம். எனது தொகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு நான் எதுவும் செய்யப்போவதில்லை. அவர்கள் பங்களாதேஷிகள். ஆகவே அவர்கள் தாராளமாகப் பங்களாதேஷிற்குச் செல்லலாம்” என்று கூறியுள்ளார். அதைத் தான் இப்போது செய்து காட்டிக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு புறம், மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஷிப்ரா நதிக்கரையில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் சிம்ஹஸ்த மேளா என்ற இந்து மதத் திருவிழா, வரும் 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ளதாம். இதையொட்டி, சாலை விரிவாக்கப் பணிகளைச் செய்கிறோம் என்ற பெயரில், உஜ்ஜைனியில் உள்ள 360 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்கத் திட்டமிட்டது பா.ஜ.க. அரசு. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்துார் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர். எனினும், அந்த மனுக்களை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துவிட்டது. அங்கு துணை ராணுவப் படையும், கலவரத் தடுப்பு காவல் பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது சர்ச்சையாக மாறியுள்ள சூழலில், தனது பூர்வீக வீடு அரசு நிலத்தில் உள்ளது என்று கூறி அதன் வாசல் பகுதிகளை இடிக்கும் பணியை நானே செய்கிறேன் என்று பத்திரிகையாளர்களை அழைத்து, இடித்துக் காட்டியிருக்கிறார் அம் மாநில முதலமைச்சர். விரிவாக்கப் பணிகளுக்கு, முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதை அகற்ற அரசுக்கு உரிமை உண்டுதான்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரின் வேலைகள் என்னவென்று தெரியாதவர்கள், இவர்களின் உள்நோக்கத்தைப் புரியாமல் இருக்கலாம். மதப் பிரச்சினையைத் தூண்டி, கலவரத்தை உருவாக்கி, அதில் லாபம் தேடுவதுதான் அவர்களின் செயல்முறை! மேற்கு வங்கத்தில் மனிதத் தன்மையற்ற முறையில் குடிநீரைக் கூட நிறுத்தும் குரூரத்தை மதவெறிதானே கற்றுக் கொடுக்கிறது.
இந்நாட்டு மக்களையே இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதும், அடிப்படை உரிமைகளை மறுப்பதும், வழிபாட்டு உரிமையை மறுப்பதும் தொடர்வதை எப்படி நாகரிக சமுதாயம் ஏற்கும்?
