மேனாள் தி.மு.க. அமைச்சர் அன்பில் மகேஸ், தி.மு.க. செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவர் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துகொண்டு வருகிறது.
மனுதாரர் அன்பில் மகேஸ் சார்பில் வாதாடிய வழக்குரைஞர், அமைச்சராக இருந்தவர் மீது வழக்குப் பதிய வேண்டுமானால், ஆளுநரின் அனுமதி தேவை என்பது சட்டத்தின் நிலைப்பாடு. என்ற அடிப்படையில், மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பினால், நீதிபதியாக இருக்கக் கூடியவர், சட்ட ரீதியாகச் சிந்திக்கக் கடமைப்பட்டவர்.
அதைவிட்டுவிட்டு, ஆளுநர் தேவையில்லை என்பதுதானே தி.மு.க.வின் கொள்கை. ‘‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு’’ என்று தி.மு.க. நிறுவனர் அண்ணா சொன்னதை எடுத்துக்காட்டி, ‘‘தி.மு.க.வின் கொள்கை இதுதானே – அப்படி இருக்கும்போது, ஆளுநரின் அனுமதிபற்றி தி.மு.க. தரப்பில் கேள்வி எழுப்பலாமா?’’ என்ற அர்த்தத்தில் கனம் நீதிபதி அவர்கள் கேட்டிருக்கிறார்.
தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாட்டை ஒரு நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி எழுப்பலாமா?
ஆளுநர் பதவித் தேவையில்லை என்று சொல்லும் தி.மு.க. சட்டப் பிரிவு 176(1)–இன்படி, ஒவ்வொரு ஆண்டும், முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் உரையாற்ற, ஆளுநரை ஏன் அழைக்கவேண்டும்?
சட்டமன்றத் தேர்தல் முடிந்து, புதிதாக சட்ட மன்றம் கூடும்போது, ஆளுநரை அழைத்து, ஏன் பேச வைக்கவேண்டும்?
சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புகைக்காக ஏன் கோப்புகளை அனுப்ப வேண்டும் என்றெல்லாம் கூட நீதிபதி கேட்கலாமே!
சட்டமன்ற நடவடிக்கைகளை, நீதிமன்ற நடவடிக்கைகளைப்பற்றி வீதிமன்றங்கள் வேடிக்கையாகப் பேசும் நிலை ஏற்படலாமா?
