ஆங்கில நாளேடு ‘பிசினஸ்லைன்’ எழுப்பும் கேள்விகள்! விடை எங்கே?
கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது, அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கும், த.வெ.க.வின் வெற்றிகளுக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதை ‘பிசினஸ்லைன்’ நாளேடு சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், தேசிய அளவிலும் மாநில அளவிலும் போராட்டங்களைத் தூண்டியுள்ளன. தமிழ்நாட்டில், பல லட்சம் வாக்கா ளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தங்களின் கட்சி தோல்வியடைந்ததற்கான காரணங்களில் ஒன்று என்று திமுக தலைவரும் மேனாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் கூறியிருந்தார். வாக்காளர் நீக்க நடவடிக்கைகள் த.வெ.க.வின் வெற்றிக்கு எவ்வாறு உதவியிருக்கலாம் என்பது குறித்து சமூக ஊடகங்களில் பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
எஸ்.அய்.ஆரின் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்த விரிவான தரவுகளையும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் பகுப்பாய்வு செய்ததில் சில குறிப்பிடத்தக்க தொடர்புகள் தெரிய வந்துள்ளதாக அந் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. வாக்காளர் நீக்கம் குறைவாக இருந்த தொகுதிகளில் வெற்றிபெற த.வெ.க. சிரமப்பட்ட நிலையில், வாக்காளர் நீக்கம் அதிகமாக இருந்த தொகுதிகளில் அக்கட்சி அதிக வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த எண்களை வைத்துக்கொண்டு மிகைப்படுத்தப்பட்ட முடிவுகளுக்கு வரக்கூடாது என்று அரசியல் ஆய்வா ளர்களும், நிபுணர்களும் எச்சரிப்பதாகவும் அந் நாளேடு தெரி வித்துள்ளது.
புள்ளிவிவரங்கள்
ஏப்ரல் 2026 வாக்கா ளர் பட்டியலின்படி ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவை, எஸ்.அய்.ஆர். நடவடிக்கைக்கு முந்தைய எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 19 தொகுதிகளில் வாக்காளர் நீக்கம் குறைவாக (10,000 வாக்காளர்கள் வரை) இருந்தது. இவற்றில் த.வெ.க. 2 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், மற்ற கட்சி கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
80 தொகுதிகளில் 10,000 முதல் 20,000 வரையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இத்தொகுதிகளில் த.வெ.க. 22 இடங்களிலும், திமுக 20 இடங்களிலும், அதிமுக 24 இடங்களிலும், மற்ற கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
66 தொகுதிகளில் 20,000 முதல் 30,000 வரையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இவற்றில் தவெக 32 இடங்களிலும், திமுக 21 இடங்க ளிலும், அதிமுக 11 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
த.வெ.க.வுக்குச் சாதகமாக அமைந்துள்ளது!
வாக்காளர் நீக்கம் அதிகரிக்கும்போது, வெற்றி வாய்ப்பு த.வெ.க.வுக்குச் சாதகமாக அமைவதை இந்தப் போக்கு காட்டுகிறது. 30,000 முதல் 50,000 வரையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்ட 37 தொகுதி களில், த.வெ.க. 24 இடங்களிலும், தி.மு.க. 8 இடங்களிலும், அ.இ.அ.தி.மு.க. 5 இடங்களிலும் வெற்றி பெற்றன.
50,000 முதல் 80,000 வரையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகள் 22 இருந்தன. அவற்றில் த.வெ.க. 18 இடங்களிலும், தி.மு.க. 3 இடங்களிலும், அ.இ.அ.தி.மு.க. ஓர் இடத்திலும் வெற்றி பெற்றன.
80,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்ட பத்து தொகுதிகளிலும் த.வெ.க.வே வெற்றி பெற்று உள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதிகளில் சராசரியாக சுமார் 27,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 2021 இல் தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதிகளில், சராசரியாக சுமார் 31,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின்
ஒரு முழுமையான சதி!
தி.மு.க. வாக்காளர்கள் குறிவைத்து நீக்கப்பட்டுள்ள தாகக் கூறிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன், ‘‘அவர்கள் தி.மு.க.வை அரசியலிலிருந்து முற்றிலுமாக அகற்ற விரும்பினர். இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒரு முழுமையான சதி,’’ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.விலிருந்து விலகி, த.வெ.க.வில் இணைந்த இரு சட்டமன்ற உறுப்பி னர்கள், பதவி விலகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது. இந்தியா முழுவதும் எஸ்.அய்.ஆர். முறைகேடுகள் குறித்து தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றுவரும் சூழலில், இத் தரவுகள் எழுப்பும் கேள்வி தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
