
திருவையாறு, ஜூன் 17- 14.6.2026 மாலை 6 மணி அளவில் திருவையாறு ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் திருவையாறு எண்: 9 மேலவட்டம் ஒன்றிய கழகச் செயலாளர் துரை.ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது.
திருவையாறு நகர தலைவர் ஆ.கவு தமன் வந்திருந்தோர் அனைவரையும் வரவேற்றார்.
தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் நோக்க உரையாக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 14.06.2026ஆம் தேதி அறிக்கையை முழுவதுமாக படித்துக் காட்டி தீரர்மிகு இளைஞர்களாக இளைஞரணியை மென்மேலும் வளர்க்க வேண்டும் அதற்கு ஆயிரம் இளைஞர்களை தயார் செய்ய வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரு விருப்பத்தினையும் விடுதலை சந்தா சேர்த்தல், தமிழர் தலைவர் அவர்களின் இடையறாப் பணிகள், அதன் தாக்கம். தோல்விகண்டு துவளாமல் மீண்டும் மீண்டும் சமூகப் பணியில் தொய்வில்லாமல் உழைத்து வரும் தமிழர் தலைவர் அவர்கள் பணியாற்றும் வியத்தகு திறன், குற்றாலத் தில் ஜூன் 25, 26, 27, 28 தேதிகளில் நடைபெறும் பயிற்சிப் பட்டறையில் இளைய தோழர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என்றும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் கருத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, ஒன்றிய தலைவர் ச. கண்ணன், ஒன்றிய செயலாளர் துரை. ஸ்டாலின்,திருவையாறு நகர தலைவர் ஆ. கௌதமன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் க. அன்பழகன், கண்டியூர் பெரியார் அலி, ஒன்றிய ப.க அமைப்பாளர் இர.தமிழரசன், பெரியார் பெருந்தொண்டர் வளப்பக்குடி கோ. தங்கவேல், மகளிரணி தோழர் துரை. அல்பேனியா ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தில் தங்களது பங்களிப்பு குறித்தும், கழக ஆக்கப் பணிகளின் தேவை குறித்தும் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.
இறுதியாக மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் விடுதலை சந்தா சேர்த்திட ஒவ்வொரு ஊராகச்செல்ல பயணத் திட்டமும், 1000 இளைஞர்கள் பட்டியலில் படையில் நம் மாவட்டத்தின் பங்கு அதில் இந்த ஒன்றியத்தில் எந்தெந்த ஊர்களில் நம் கழகக் குடும்பத்தில் இளைஞர்கள் உள்ளனர், அவர்களை அணுகி பட்டியல் தயார் செய்ய அறிவுறுத்தினார்.
மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் தோழர்கள் பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த ஒன்றியத்தில் தந்தை பெரியார் அறிவித்த போராட்டம், ஊர்வலம், மாநாடு போன்றவைகளில் பெருமளவில் தோழர் கலந்து கொண்டதையும் சிறைக்குச்சென்றதையும் எடுத்துக் காட்டி , ஆசிரியர் அவர்கள் தேர்தல் காலங்களில் மிதிவண்டியின் பின்னாள் அமர்ந்து ஒவ்வொரு ஊராக பிரச்சாரம் செய்ததை ஆசிரியர் அவர்கள் நினைவு கூர்ந்தார் எனவும் எடுத்துக் காட்டி உரையாற்றினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் ஒன்றிய ப.க செயலாளர் துரை, இளம் பிடுகு, முதுபெரும் தோழர் அன்னபூரணி அம்மாள் தில்லைஸ்தானம் பி.கார்த்திக், அஞ்சுகம் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
புதிதாக 25 விடுதலைச் சந்தாக்களை சேர்த்தும் இந்த மாதத்தில் முடிவடையும் விடுதலை சந்தாதாரர்களை புதுப்பித்தும் தருவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் அவர்களின் ஆணைக்கேற்ப தீரமிக்க திராவிடர் கழக இளைஞர்களின் ஆயிரம் பேரை திரட்டும் பணியில் திருவையாறு ஒன்றியத்தின் சார்பாக 10 இளைஞர்களின் பட்டியலை தமிழர் தலைவர் அவர்களிடம் ஒப்படைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
