சென்னையில் டெங்கு:  4,592 பேர் பாதிப்பு! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 5– சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இதுவரை 4,592 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் தாரேஸ் அகமது தெரிவித்தார். தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 109-க்கு உட்பட்ட கிழக்கு நமசிவாயபுரம் 3ஆம் தெருவில் நேற்று நடந்த காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவ துறைச் செயலாளர் தாரேஸ் அகமது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்புப் பணிகளையும் பார்வையிட்டார். வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு சிறு தகவல்அறிவிப்புகளும் வழங்கப்பட்டன. கூவம் ஆற்றில் டிரோன் மூலம் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியையும் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தாரேஸ் அகமது கூறியதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதியில் இந்த ஆண்டு இதுவரை 4,592 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 16,254 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1,293 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை டெங்கு உயிரிழப்பு எதுவும் இல்லை. சென்னை மாநகராட்சியில் 3,703 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் 100க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்கும் 1,250 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து வகையான காய்ச்சல் பாதிப்புகளையும் பரிசோதனை செய்து, நோயைத் துல்லியமாக கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் குறையும் நேரத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களை கவனத்தில் கொண்டு, திரவப் பராமரிப்பு உள்ளிட்ட சிகிச்சை முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பருவகால மாற்றம் காரணமாக டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், தற்போது பாதிப்பு சீராகி குறைந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெற்றோர்களே எச்சரிக்கை!

குரோம்பேட்டையில் விளையாடச் சென்ற
நான்கு குழந்தைகள் ஏரியில் பிணமாக மீட்பு!

சென்னை, அக்.5– வீட்டின் அருகே விளையாடச் சென்ற 4 பள்ளி மாணவர்கள் திருநீர்மலை ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிகர்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (4.10.2026) காலை லட்சுமிபுரம் பகுதியில் உள்ள திருநீர்மலை ஏரியில் 4 சிறார்கள் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்வு இடத்துக்கு சென்ற காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு, மீட்புப் படையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டனர்.

விசாரணையில், பள்ளி விடுமுறை என்பதால் 4 பேரும் அருகிலுள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றிருக்கலாம் என்றும், அப்போது ஏரியில் இருந்த சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் முதற்கட்டமாகத் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட உடல்கள் உடற்கூராய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குழந்தைகளின் உடல்களைப் பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரிகளில் பாதுகாப்பு

ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை:

அக்.13 வரை நீட்டிப்பு!

சென்னை, அக். 5-  தமிழ்நாடு அரசு பல்கலைக் கழகமான தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி திட்டத்தின்கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளில் 15 இளங்கலை பட்டப்படிப்புகள், 154 முதுகலைப் படிப்புகள் மற்றும் 48 டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் 2026-2027ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணைப்பு வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி செப்.15ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு அக்.13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே பாடத்திட்ட விவரங்கள், கட்டணம், சேர்க்கைநடைமுறைகள் தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) விரிவாக அறிந்து கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி.ஆர். செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *