சென்னை, ஏப்.24 சென்னை புறநகர் ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நகரின் இரண்டாவது குளிரூட்டப்பட்ட (AC) மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னை அய்.சி.எப் (ICF) தொழிற்சாலையில் 12 பெட்டிகளுடன் இந்த புதிய ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4,914 பேர் (அமர்ந்து கொண்டு 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும்) பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில் பெட்டிகள் அண்ணனூர் ரயில்வே யார்டில் நிறுத்தப்பட்டு, பல்வேறு தொழில்நுட்ப சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் ஏற்கனவே ஒரு ஏசி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாவது ரயிலை எங்கு இயக்குவது என்பது குறித்து இரண்டு முக்கிய ஆலோசனைகள் உள்ளன: சென்ட்ரல் – அரக்கோணம்: இந்த மார்க்கத்தில் தினமும் 4 லட்சம் பேர் பயணிப்பதால், இங்கு ஏசி ரயிலை இயக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இப்பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
கடற்கரை – செங்கல்பட்டு: பயணிகள் கூட்டத்தைக் குறைக்க இதே மார்க்கத்தில் கூடுதல் ரயிலாக இயக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. “பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, எந்த வழித்தடத்தில் இயக்கினால் அதிக பலன் கிடைக்கும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்,” என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் கடந்த ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது ரயில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீன் பிடி படகில் ஆபத்தான பயணம்
பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து வாக்களித்த வாக்காளர்கள்

பொன்னேரி, ஏப்.24 பொன்னேரி (தனி) தொகுதிக்கு உட்பட்ட பழவேற்காடு அருகே உள்ளது தாங்கல்பெரும்புலம் ஊராட்சி.
தாங்கல்பெரும்புலம், எடையன்குளம், கருங்காலி, கோரைக்குப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான இரு வாக்கு சாவடிகள், வங்காளவிரிகுடா கடற்கரையையொட்டியுள்ள கோரைக்குப்பம், சத்தான்குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் பல ஆண்டுகளாக இருந்து வந்தன.
இதனால், தாங்கல்பெரும்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், மீன் படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து சென்று, பல ஆண்டுகளாக வாக்களித்து வந்தனர்.
இந்நிலையில், சுனாமி காரணமாக சாத்தான்குளம் மீனவ மக்கள், பக்கிங்ஹாம் கால்வாய் அருகே அமைக்கப்பட்ட சுனாமி குடியிருப்புக்கு இடம் மாறினர். இதனால், அப்பகுதியில் ஒரு வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
அதில், சாத்தான்குளம் மீனவ மக்கள் வாக்களித்து வருகின்றனர். அதே நேரத்தில், தாங்கல்பெரும்புலம், எடையன்குளம் கிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள் பட்டியல், கோரைக்குப்பம் வாக்குச் சாவடியில் இணைக்கப்பட்டது.
இதனால், இவ்விரு கிராம மக்கள் 10 கிமீ தூரம் சுற்றி கோரைக்குப்பம் வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் நிலை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது.
ஆகவே, சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தாங்கல்பெரும்புலம், எடையன்குளம் மக்களுக்காக வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என, தொடர்ந்த கோரிக்கை வைத்தும் பலனில்லை.
இந்நிலையில், நீண்ட தூரம் சுற்றி கோரைக்குப்பம் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பதை தவிர்க்கும் விதமாக தாங்கல்பெரும்புலம் கிராம மக்கள் மீன்பிடி படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வாக்களித்து வருவதும், எடையன்குளம் கிராம மக்கள் சுமார் 7 கிமீ தூரம் டிராக்டர் மூலம் பயணித்து வாக்களித்து வருவதும் தொடர் கதையாக உள்ளது.
தாங்கல்பெரும்புலம் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நேற்று (23.4.2026) மீன்பிடி படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து சென்று, கோரைக்குப்பம் வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

