இந்நாள் – அந்நாள் வடலூர் வள்ளலார் பிறந்த நாள் (5.10.1823)

6 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

வள்ளலாரைப் பற்றிப் படிக்கத் தொடங்கிய போது முதலில் நம்மை ஈர்த்த செய்தி, 1935-ஆம் ஆண்டு, அருட்பா-ஆறாம் திருமுறையிலிருந்து நூறு பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருகின்றன. அதைத் தொகுத்தவர் சாமி. சிதம்பரனார்; வெளியிட்டது ‘குடி அரசு’ பதிப்பகம். ‘இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு’ என்னும் பெயரில் தனது குடிஅரசுப் பதிப்பகத்தின் மூன்றாவது வெளியீடாகப் பெரியார் இதனை வெளியிடுகிறார். இக்கருத்துகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கில் குடிஅரசு பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கு முக்கால் விலைக்கு வழங்கினார் பெரியார். இது குறித்துக் குடிஅரசு பத்திரிகையில் அவ்வப்போது விளம்பரமும் செய்துள்ளார் பெரியார்.

வள்ளலார் கடவுள் மறுப்பாளர் அல்ல. ஆனால் கடவுள் மறுப்பாளரான பெரியாரே அங்கீகரித்து பதிப்பித்துப் பரப்பக் கூடிய அளவுக்கு வள்ளலாரின் ஆறாம் திரு முறையில் என்னதான் இருந்தது என்ற கேள்வி எழுந்தது. அதைப் புரிந்து கொள்வ தற்கு முன் நாம் வள்ளலார் வாழ்ந்த காலத் தின் சமயச் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வள்ளலார் 1874-இல் மறைந்து போகிறார். அதாவது ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பே அவர் மறைந்து விட்டார் என்றால், அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமூக நிலை என்பது முற்றிலும் மதத்தின் பிடியில் சிக்கியிருந்தது.

ஏன் வள்ளலாரே தீவிர சைவ சமயப் பற்றாளராகவே இருந்தார். அவரது முதல் 5 திருமுறைகளும் சிவனைத் துதிப்பவை யாகவே இருந்தன.

அவரது முதல் நான்கு திருமுறைகள் தொகுக்கப்பட்டு, வெளியிடப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவும் வள்ளலார் மறைந்த பிறகுதான் அவரது அய்ந்தாம் திருமுறையே வெளியிடப்படு கிறது. அதற்கும் 5 ஆண்டுகளுக்குப் பின்தான் அவரது ஆறாம் திருமுறை வெளியிடப்படுகிறது. வள்ளலாரின் முதல் 5 திருமுறைகளை ஆர்வமுடன் வெளியிட்டவர்கள் அவரது ஆறாம் திருமுறையை வெளியிட முன் வரவில்லை. அதிலும், முதல் முதலாக அவரது பாக்கள் தொகுக்கப்பட வேண்டும் என்று வள்ளலாரிடம் போராடி அனுமதி வாங்கிய இறுக்கம் இரத்தினம் முதலியார், தொழுவூரார் போன்றவர்கள் – இறுக்கம் இரத்தினம் முதலியார் “ஒரு வேளை மட்டுமே உண்பேன்’ என்ற அளவுக்கு போராடியே வள்ளலாரிடம் அனுமதி பெற்றார், அவரைப் போன்றவர்கள் வள்ளலாரின் மனப் போக்கு மாறியதை உணர்ந்தவுடன் அவரை விட்டு விலகி நிற்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தீவிர சைவ சமயப் பற்றாளர்களாக இருந்தனர். அதனால்தான் வள்ளலாரின் புரட்சிக் கருத்துகள் நிரம்பிய ஆறாம் திருமுறையை அவர்கள் வெளியிட முன் வரவில்லை. அது வேறு சிலரால் வெளியிடப்படுகிறது. அந்த அளவுக்கு ஆறாம் திருமுறை முதல் அய்ந்து திருமுறைகளிலிருந்தும் பெரிதும் வேறுபட்டிருந்தது.

அவரது முதல் அய்ந்து திருமுறைகள் அவரது சைவ சமயப் பற்றைக் காட்டு கின்றன. ஆனால் 1860-களுக்குப் பின் வள்ளலாரின் சிந்தனைப் போக்கில் பெரிதும் மாற்றம் ஏற்படுகிறது. அதற்கு பின் அவர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் சமயம் கடந்தனவாக, சமூகம் சார்ந்தனவாக, மாந்த நேய, உயிர் நேயக் கருத்துகளை அறிவுறுத்துவதாக இருந்தன.

சமயங்களை கடுமையாக கேள்விக்கு உட்படுத்துகிறார். குறிப்பாக வேதங்களை யும் அவை வலியுறுத்தும் சடங்குகள், ஜாதி என அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்.

22.10.1873ஆம் ஆண்டில் சித்தி வளாகத்தில் சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்து வள்ளலார் பேசும்போது பின் வருமாறு குறிப்பிட்டார்.

“நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அந்த லட்சியம் எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா! அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் பாடியிருக்கிற திருவருட்பாவில் அடங்கி யிருந்த பாடலையும், மற்றவர்கள் பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.”

அதாவது தான் அற்ப அறிவுடன் இருந்த காலத்தில் சைவ சமயப் பற்றோடு இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அறிவுத் தெளிவு பெற்ற பிறகு சமயம் கடந்த சன்மார்க்க நெறிக்கு மாறியதாக குறிப்பிடுகிறார்.

தனது சமயம் ‘அருள் நெறி’ என்கிறார். உலகில் மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய துன்பங்கள் ஒழிய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் ஜாதி சமய காழ்ப்புகளைத் துறந்து ‘எல்லா உயிர் களையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுதலே’ தலையாய அறம் என்றும் போதிக்கிறார்.

இரக்கம் செயலில் தோன்ற வேண்டு மென உபதேசித்தார்! இதனையே “சுத்த சமரச சன்மார்க்க நெறி’யெனப் பெயரிட்ட ழைத்தார். இதற்கென ஒரு நிறுவனமும் அமைத்தார். அதற்குச் ‘சுத்த சமரச சன் மார்க்க சங்கம்’ என்று பெயரிட்டார்.

மொழிக்காக சங்கம் அமைத்த தமிழர் களிடையே சமயத்திற்காக முதன் முதலாக சங்கம் அமைத்தவர் வள்ளலாரே. புத்தரின் பவுத்த சங்கத்திற்கு பின் சமயத்திற்காக சங்கம் அமைத்தவர் வள்ளலார்தான்.

சன்மார்க்கம் – அதாவது சத்திய மார்க்கம் அல்லது உண்மை மார்க்கம் – வள்ளலாரின் காலத்திற்கு முன் சன்மார்க்கம் என்பது சைவ சமய சன்மார்க்கமாகவே இருந்தது. அவரது வருகைக்கு பின்தான் சுத்த சன்மார்க்கமாக மாறியது. சமயத் தளத்தில் ஒரு புரட்சிக்காரராகவே இதை முன் மொழிந்தார் வள்ளலார். உருவ வழிபாட்டை விட்டு விலகினார். காவிக்கு மாறாக வெள்ளாடை அணிந்தார். கோயிலை சபை என்றார். ‘ஒளியே வழிபாட்டிற்குரியது’ என்றார். அதுவும் தீபத்திற்கு அல்ல. ஒவ் வொருவர் உள்ளத்திலும் ஒளிர வேண்டியது என்றார்.

எல்லோருக்கும் பொதுவான கோயிலாக சத்திய ஞான சபையை நிறுவிய வள்ளலார் அதில் உருவ வழிபாட்டிற்கு மாறாக ஒளி வழிபாட்டை புகுத்தினார்.

சமரசம் என்பது நாடு, மொழி, சமயம், ஜாதி அனைத்தையும் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு நிற்பது என்று கூறிய வள்ளலார், இந்த சமரச உணர்வை இழப்பதை அறி யாமை என்கிறார்.

இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையி லேயே சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை அவர் நிறுவினார்.

அவரது இந்த கருத்துகளும் செயல் முறைகளும் அக்காலக்கட்டத்தில் பெரும் புரட்சிகரமாக பார்க்கப்பட்டன. சமயப் பற்றாளர்களை, குறிப்பாக சைவ மடாதிபதி களை இவரது கருத்துகள் பெரும் பதட்டத் திற்குள்ளாக்கின.

அவர்கள் ஆறுமுக நாவலர் போன்ற அறிஞர்களை அவருக்கு எதிராக ஏவி விட்டனர். வள்ளலாரின் கருத்துகளுக்கு ஆறுமுக நாவலர் காட்டிய எதிர்ப்பு என்பது ஆழமாக நோக்க வேண்டிய ஒன்று.

ஆறுமுக நாவலர் வேதத்தையும் வர்ணாசிரமத்தையும் ஏற்றுக் கொண்டவர். வள்ளலார் வர்ணாசிரம தருமத்திற்கு எதிரானவர். மிகக் கடுமையாக அதைச் சாடியவர்.

ஜாதிப் பிரிவினைகளை கடுமையாக எதிர்த்துப் போராடினார்.

“ஜாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே”

– என்றும்

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளை விளை யாட்டே.”

எனப் பாடினார்.

“நான்கு வருணங்களும், நால்வகை ஆசிரமங்களும் (பிரமச்சரியம், கிரு கத்தம், வானப் பிரகத்தம், சந்நியாசம்) ஆசாரங்களும் (ஜாதி, மத, குல, ஒழுக்கங்கள்) சொன்ன சாத்திர சரிதங்கள் எல்லாமே பிள்ளை விளையாட்டு என்றும், மேல் வருணம், தோல் வருணம் கண்டு அறிவார் இல்லை என்றும் 1870களின் தொடக்கத்தில் துணிந்து எழுதியவர் இராமலிங்கர். இதோடு அவர் விடவில்லை. இதுவரை வந்த நூல்களில் “இந்திரசாலம்’ என்ற நூலை மட்டும் ஜாலம் என்று கூறுவார்கள். ஆனால், வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலான அனைத்து நூல்களுமே ஜாலம்தான் என்று மறுத்தார். இவை எல்லாம் பொய் என்றார்.’

வேதநெறி ஆகமத்தின் நெறி புராணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுவதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே

என்பது வள்ளலாரின் கூற்று. வேதம், ஆகமம், புராணங்கள், இதிகாசம் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் சூது என்றும் அவர் கூறுகிறார்.

– வழக்குரைஞர் துரை.அருண்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *