தமிழறிஞர் மறைமலை அடிகளார் நினைவு நாள் இன்று (15.09.1950)
தனித் தமிழ் இயக்கம் தொடங்கி தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றிய தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் ‘தனித்தமிழ்’ எனும் சொல்லுக்கு வித்திட்ட காரணத்தால் ‘தனித் தமிழ்த் தந்தை’ என அழைக்கப் பட்டவர்.
நாகப்பட்டினம் அருகே கடம்பாடி எனும் சிற்றூரில் 1876 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாளில் அன்று பிறந்தார் மறைமலை யடிகளின் தந்தை பெயர் சொக்கநாதப் பிள்ளை, தாயார் சின்னம்மை. மறைமலையடிகளின் இயற்பெயர் வேதாசலம்.
தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாகத் தன் பெயரை வேதம் = மறை, சலம் = மலை எனும் அடிப் படையில் மறைமலை என்பதாக அவர் மாற்றிக் கொண்டார். நாளடைவில் இதுவே ‘மறைமலையடிகள்’ என அழைக்கும்படி ஆனது.
நாகப்பட்டினத்தில் வெ.நாராயணசாமிப் பிள்ளை எனும் புலவரால் சிறுவயதிலேயே தமிழ் மேல் ஆர்வம் தூண்டப் பெற்றவர். வறுமையான சூழ்நிலையிலும் அன்றாடம் புத்தகங்கள் வாங்கிப் படிப்பதைக் கொள்கையாகக் கொண்டு அதனைக் கடைப்பிடித்து இன்று புகழ்பெற்று விளங்கும் மறைமலையடிகள் நூலகத்துக்கு அடித்தளமிட்டவர்.
அது நாள் வரை வடமொழி, ஆங்கிலம், உருது ஆகியவற்றின் கலப்பினால் மூச்சடைத்துக் கிடந்த தமிழ், தன்னுணர்வு பெற்று விழிப்பு நிலை பெற்றது இவரால். தொடர்ந்து தனித்தமிழ் எனும் இயக்கத்தையும் வழி நடத்தியவர் என்பது இவரது வாழ்நாள் சிறப்பு.
1898 முதல் 1911 வரை பதின் மூன்று ஆண்டுகள் சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரிய ராகப் பணிபுரிந்தவர். கல்லூரி நிருவாகம் தமிழ் வளர்க்க தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்காததைக் கண்டித்து தன் பணியைத் துறந்தார்.
எழுத்துப் பணி
இவர் எழுதிய “அறிவுக்கொத்து” என்னும் நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப் பட்டபோது, அதில் அமைந்திருந்த ‘மேல்நாட்டவரும் தமிழ் நாட்டவரும்’ கட்டுரைக்கு பார்ப்பனர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் இந்த எதிர்ப்புகளுக்கு பதிலடி தந்து “குடிஅரசு” ஏட்டில் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு “மறுப்புக்கு மறுப்பு” எனும் தலைப்பில் புத்தகமாக வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், ஆங்கிலம், வடமொழி மூன்றிலும் புலமை பெற்ற அடிகள் வாழ்நாளில் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 50 க்கும் மேல். 1937 இல் நடந்த ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு தன் தமிழைக் காப்பாற்றப் போராடியவர்.
தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றினார். நாகப்பட்டினம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சிறந்த மாணவராக விளங்கினார். அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த தந்தையின் மறைவால், கல்வி தடைபட்டது. தாயின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்றார்.
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் நாராயணசாமி பிள்ளையிடம் இலக்கியங் களையும், சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தமும் கற்றார். மாதந்தோறும் புதிய நூல்கள் வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வார இதழ்களில் ‘முருகவேள்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். 16 வயதில் இந்து மத அபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1905 இல் சைவ சித்தாந்த மகா சமாஜத்தை ஆரம்பித்தார். 1911 இல் துறவு மேற்கொண்டார்.
மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், திருக் குறளாராய்ச்சி, தமிழர்மதம், வேதாந்த மதவிசாரம் என பல நூல்களைப் படைத்தார். இலக்கியம், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், தத்துவம், வரலாறு என பல பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இவரது பேச்சு பேச்சாளர்களை உருவாக்கியது; எழுத்துப் படைப்பாளிகளை ஈன்றது. ‘அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்’ என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. புகழாரம் சூட்டியுள்ளார். நான்காயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே ஒரு நூலகம் அமைத்தார்.
தனித்தமிழிலேயே பேச, எழுத வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்ட பிறகு, தான் ஏற்கெனவே எழுதி வெளியிட்ட நூல்களில் இருந்த பிறமொழிச் சொற்களுக்கு பதிலாக தமிழ்ச் சொற்களை மாற்றி புதிய பதிப்புகளை வெளியிட்டார். உரையாடலில், மேடைப்பேச்சில், எழுத்தில் தூய தமிழ் நடையைக் கடைபிடித்தார்.
கோயில்கள், பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு சம உரிமை வழங்க வேண்டும் என குரல் கொடுத்தார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.
வடமொழியை எதிர்க்காமல் வடமொழிக் கலப்பை மட்டுமே எதிர்த்து, கடவுளை எதிர்க்காமல் மூடத்தனமான சடங்குகளை மட்டுமே எதிர்த்து நடுநிலை தவறாமல் வாழ்ந்த பண்பாளர். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட மறைமலை அடிகளார் தமது 74 ஆவது வயதில் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாளில் மறைவுற்றார்.
lll
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட நாள் இன்று (15.09.1981)
தஞ்சாவூரில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது.
தமிழ்ப் பண்பாட்டின், நாகரிகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் தொன்று தொட்டு இன்று வரை நமது நாட்டின் கலை, இலக்கியம், சமயம், தத்துவம், ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புக்கு உரிமையுடையதாகவும் விளங்குவது தமிழ் மொழி. தமிழ் மொழியின் அடிப்படையில் அமைந்த வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றை சார்ந்த துறைகளுக்கு பொலிவும் வலிவும் ஊட்ட ஒரு பல்கலைக்கழகம்.
தகவல் : பாணாவரம் பெ. வீரமணி.
