மதத் தலைவர்களை ஏமாற்றிய ஆர்.எஸ்.எஸ்.

இணையவழி கையெழுத்து இயக்கம்

உண்மை- நேர்மைக்கும் ஆர்.எஸ்.எஸ். வகையறாவுக்கும் துளியும் தொடர்பில்லை என்பதை அமெரிக்காவிலும் போய் நிரூபித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நியூயார்க் நகருக்குப் பயணம் மேற்கொண்டு, கடந்த மாதம், ஆகஸ்ட் 29 அன்று மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். திடீரென அங்கே சைவத்துக்கு மாறிய பூனை போல, ‘இஸ்லாமியர்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்துக்களே அல்ல’ என்று வேடம் தரித்தார். அவருடைய பயணமும், பேச்சும் சர்ச்சையானது மட்டுமல்ல. அதில் ஆர்.எஸ்.எஸ். மறைமுகமாக நடந்துகொண்ட விதமும் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

“யுனிவர்சல் ஒன்னஸ் செலப்ரேசன்” (Universal Oneness Celebration) என்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 5,000 பேர் பங்கேற்பதாகவும், பல்வேறு மதங்கள், சமூகங்கள் மற்றும் பண்பாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையையும் உரையாடலையும் வலியுறுத்தும் நிகழ்ச்சியாக நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், “வசுதைவ குடும்பகம்”, அதாவது “உலகமே ஒரு குடும்பம்” என்பதே நிகழ்ச்சியின் நோக்கம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், இதற்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருப்பதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் அதற்குள்ள தொடர்புகளும், “உலக ஒருமைப்பாடு” என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற சில மதத் தலைவர்களுக்கு முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு கடுமையாக எழுந்துள்ளது. சில முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பிற மதத் தலைவர்கள், “மத நல்லிணக்கம்”, “ஒற்றுமை” குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறோம் என்ற எண்ணத்திலேயே சென்றதாகவும், தாங்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அல்லது மோகன் பகவத்துடன் தொடர்பு இருப்பது தங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்தனர். இதுபற்றி இமாம் ஷம்சி அலி உள்ளிட்ட சிலர் தாங்கள் “ஏமாற்றப்பட்டதாக” உணர்ந்ததாகக் கூறினர். சிலர் பின்னர் பொதுவாக மன்னிப்பும் கேட்டனர்.

‘‘இந்தியாவில் இந்துத்துவ அரசியலைச் செய்து, வன்முறை களுக்கும், கலவரங்களுக்கும் காரணமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரை, பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் “உலக ஒருமைப்பாட்டு” நிகழ்ச்சியின் மய்யத்தில் நிறுத்துவது, அந்த அமைப்புக்குப் பன்னாட்டு அளவில் ஒரு முற்போக்கான, மதநல்லிணக்க முகத்தை உருவாக்கும் முயற்சி’’ என்று ஏமாற்றப்பட்டோர் பொங்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வருகையைக் கண்டித்து, நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வெளியில், முஸ்லிம்கள், சீக்கியர்கள், ஒடுக்கப்பட்டோர் சமூகப் பிரதிநிதிகளும், அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் போராட்டம் நடத்தினர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் சிறுபான்மையினரை ஒதுக்கும், ஒடுக்கும் இந்துத்துவக் கொள்கையை முன்னெடுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் மதங்களிடையே பாகுபாடு காட்டி, மனிதர்களைப் பேதம் பார்க்கக் கூடிய அமைப்பு என்று விமர்சித்தார். அதே நேரத்தில், தனியார் ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியை நகர நிர்வாகத்தால் எளிதில் ரத்து செய்ய முடியாது என்பதால் அந்நிகழ்ச்சியில் அவர்கள் தலையிடவில்லை.

நிகழ்ச்சியை அமெரிக்க ஹிந்துக்களின் உரையாடல் அமைப்பு ‘American Hindus for Engagement and Dialogue (AHEAD) Forum’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவே முதலில் சொல்லப்பட்டது. இந்த அமைப்பும், தன்னை மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் உரையாடலையும் வளர்க்கும் அமைப்பாக முன்வைத்தது. ஆனால் பின்னர், அந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கும் ‘ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம்’ (HSS) அமைப்புக்கும் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ‘ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கம்’ என்பது வெளிநாடுகளில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய அமைப்பாகும்.

அது மட்டுமல்ல, சிலருக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்களில் ஆர்.எஸ்.எஸ். அல்லது மோகன் பகவத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. ‘யார் சிறப்பு விருந்தினர்’ என்ற பகுதி நிரப்பப் படாமலே அழைப்பிதழ்கள் சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனிடையே, அமெரிக்க பன்னாட்டு மதச் சுதந்திர ஆணையம் (USCIRF) மோகன் பகவத்தின் விசாவை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரியது.

‘ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு ஆக்டோபஸ் அமைப்பு; பல அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு, தேவைக்கேற்ப முகமூடிகளை அணிந்துகொண்டு, தங்கள் அடிப்படைவாதக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அமைப்பு’ என்பதை இந்தியா நன்கு அறியும். அதை இப்போது அமெரிக்காவில் சென்று உறுதிப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.

உண்மையில், ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம், அமெரிக்காவில் சிதைந்து போயுள்ள தனது முகத்தை, அம்பலப்பட்டுள்ள தன் உண்மை முகத்தை மாற்றிக் காட்டவேண்டும், தங்களுக்கு அமெரிக்காவில் எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்பதுதான். அதன் வன்முறை, மதவெறி முகம் மட்டுமல்ல; அது அடிப்படை நேர்மையற்ற, சட்ட வரைமுறைகளற்ற ஓர் அமைப்பு என்பதையும் தானாகச் சென்று அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *