“பகுத்தறிவு” வார இதழ் வெளிவந்த நாள் இன்று (26-08-1934)
பகுத்தறிவு என்ற சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நாளிதழ் மார்ச் 15, 1934 முதல், ஈரோட்டிலிருந்து வெளிவந்தது.
ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமி இவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையால் 1934 ஆம் ஆண்டு மே மாத இறுதியுடன் இந்நாளிதழ் நின்றுபோனது. பின்னர் ஆகஸ்ட் 26, 1934 முதல் ஜனவரி 6, 1935 வரை வார இதழாக வெளிவந்தது. மே 1935 முதல் மாத இதழாக வெளியானது.
பகுத்தறிவு இதழ், தொடக்க காலத்தில் நாளிதழாக வெளி வந்தபோது, முதல் இதழின் தலையங்கத்தில் ஈ.வெ.ராமசாமிப் பெரியார், “பகுத்தறிவு’’ (இதழ்) வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சரித்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, வழக்கத்திற்கோ, பழமைக்கோ, புதுமைக்கோ அடிமையாகாமல் கொள்வன கொண்டு தள்வனத் தள்ளி, தானே சுதந்திரமாய் தன்னையே நம்பி, தனது அறிவையும் ஆற்றலையும் துணையாகக் கொண்டு தன்னாலான தொண்டாற்றிவரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சுயமரியாதை இயக்கச் சிந்தனைகளையும், பகுத்தறிவுக் கொள்கைகளையும் தாங்கி வெளி வந்த இவ்விதழ், தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளைப் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது.
“பகுத்தறிவு” வார இதழ்
ஆகஸ்ட் 26, 1934 முதல், வார இதழாக வெளிவந்தது. இதழின் முகப்புப் பக்கத்தில் “பகுத்தறிவு” என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதழின் ஆண்டினைக் குறிக்க ‘மாலை’ என்பதையும், வாரத்தைக் குறிக்க ‘மலர்’ என்பதையும் பயன்படுத்தியது. ஞாயிறு தோறும், 20 பக்கங்களூடன் வெளிவந்த பகுத்தறிவு இதழின் விலை ஓர் அணா. ஆண்டுச் சந்தா-உள் நாடு : மூன்று ரூபாய்; வெளிநாடு : அய்ந்து ரூபாய்.
இதழில் பகுத்தறிவு சார்ந்த கட்டுரைகள், வெளிநாட்டு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள், ஈ.வெ. ராமசாமி அவர்களின் சுற்றுப்பிரயாண விவரங்கள், சுயமரியாதைத் திருமணங்கள் பற்றிய செய்திகள், சுயமரியாதை மணம் செய்து கொண்டோரின் படங்கள், ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் உரைகள், பொதுக் கூட்டங்கள், சுயமரியாதை மாநாட்டுச் செய்திகள் போன்றவை இடம் பெற்றன. இதழ் தோறும் தலையங்கம் இடம் பெற்றது. விளம்பரங்களும் இவ்விதழில் இடம் பெற்றன. இதழின் முகப்புப் பக்கத்தில் திருக்குறள்கள் இடம் பெற்றன.
ம. சிங்காரவேலு, சித்திரபுத்திரன் (ஈ.வெ.ரா.), சி. நடராஜன், உடுமலை கனகராஜன், ப. ஜீவானந்தம், ப. நாராயணன், ஆர். ராமநாதன், அ. ராகவன், கைவல்யம், உள்ளிட்ட பலர் பகுத்தறிவு இதழில் எழுதினர். புத்தக அறிமுகங்கள், புத்தக வெளியீட்டு விளம்பரங்கள், இதழ் அறிமுகம் என்ற பகுதியில் பல்வேறு இதழ்கள் பற்றிய செய்திகள், அந்த இதழ்கள் பற்றிய விமர்சனக் குறிப்புகள், நூல் விமர்சனம் போன்றவை அதிக அளவில் இடம் பெற்றன. பகுத்தறிவு இதழில் தான் (ஜனவரி 1935) முதன் முதலில் எழுத்துச் சீர்த்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஈரோடு உண்மை விளக்கம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு ‘பகுத்தறிவு’ வார இதழ் வெளி யானது. ‘பகுத்தறிவு’ வார இதழுக்கும், அதன் உண்மை விளக்கம் அச்சகத்துக்கும் இரண்டாயிரம் ரூபாய் பிணையத் தொகை கட்டவேண்டும் என்று ஜனவரி 1935 இல் பிரிட்டிஷ் அரசு ஆணை பிறப்பித்தது. அதனால் ஜனவரி 1935 இதழோடு ‘பகுத்தறிவு’ வார இதழ் நின்றுபோனது.
அதன்பின் பகுத்தறிவு இதழ், மீண்டும் மே 1, 1935 இலிருந்து பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில், மாத இதழாக வெளிவந்தது.
