அமைச்சரவை மாற்றத்தால் ஆகப் போவது என்ன?

3 Min Read

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ஒன்றிய அமைச்சரவையில் எப்போது வேண்டுமானாலும் அதிரடி மாற்றங்கள் செய்யப் படலாம் என்ற பலத்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வாரங்களாகவே ஒன்றிய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரங் களில் பேசப்பட்டு வந்தது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக, சில ஒன்றிய இணை அமைச்சர்களுக்குப் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) முக்கிய நிர்வாகப் பொறுப்புகள் அண்மையில் வழங்கப்பட்டன. மேலும், பதவிக்காலம் முடிந்த சில மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் மறுக்கப்பட்டதும் இந்த மாற்றத்திற்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டது.

வழக்கமாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கும். எனவே, பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய பணிச்சூழல் மற்றும் அட்டவணைகளைக் கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த அமைச்சரவை மாற்றம் இறுதி செய்யப்படலாம் எனச் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்தோடு சேர்த்து, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தலைமையிலான புதிய நிர்வாகக் குழுவும் முறைப்படி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்தின் போது தற்போது பதவியிலுள்ள சில மூத்த அமைச்சர்களின்  துறைகள் மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் (NEET) மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு முறைகேடுகள் காரணமாக, தற்போதைய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்றும் டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் மாற்றம் என்பதாலேயே ஒன்றிய அரசின் மதவாதக் கொள்கை வழித் திட்டங்களும், செயல்பாடுகளும் மாறப்போவதில்லை. ஒரு தர்மேந்திரன் போனால் இன்னொரு பீமனைக் கொண்டு வந்து இறக்குவார்கள்.

மாநில உரிமைகள் பறிப்பு, தேசிய கல்விக் கொள்கை வழி ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, பாடத் திட்டங்களில் – மதச் சார்பின்மைக்கு விரோதமான கருத்துகள் திணிப்பு, பிஜேபி ஆட்சியில்லாத மாநிலங்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய நிதியைத் தர மறுப்பு, இயற்கைப் பேரிடர் நிதி வழங்குவதில்கூட ஓர வஞ்சனை, சிறுபான்மை மக்களின் உரிமைகள்மீது குறி வைத்துத் தாக்குதல்… இன்னோரன்ன – ஜனநாயக விரோத, சமத்துவ விரோத நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு மேனாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் நியமிக்கப்படலாம் என்றும் வடநாட்டு ஊடகங்கள் எழுதி வருகின்றன. நாட்டின் நிதி நிலைமை அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. இவையெல்லாம் நிதியமைச்சர் என்ற ஒருவரின் முடிவால் மாறுபவையல்ல. அதிகாரிகள், ஆலோசகர்களின் கருத்து, அரசின் நிதிக் கொள்கை என்ன என்பதே நிதி நிலைமையைத் தீர்மானிக்கிறது. இன்றைய உலகமயச் சூழலில் வெளியுறவுக் கொள்கையும் பெரும் பங்கு வகிக்கிறது. கொஞ்ச காலத்திற்கு நிதி நிலைமையைப் பற்றி ஊடகங்களோ, மற்றவர்களோ பேசாமல், அதிரடி அறிவிப்புகள், காட்சி மாற்றங்கள் மூலம் நாட்களைத் தள்ளுவதற்கு வேண்டுமானால் இந்த அமைச்சரவை மாற்றங்கள் பயன்படலாமே ஒழிய, நிதி நிலைமையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை – அடிப்படைக் கொள்கைகளிலும், மாநிலங்களைச் சுரண்டும் மன நிலையிலும் மாற்றம் இல்லாவிட்டால்!

இன்றைய இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினைகள் என்பவை சமூகநீதிக்கும், மாநில உரிமைகளுக்குமான ஆபத்துகள், மதச் சார்பு, மதவெறி நடவடிக்கைகள், நிதி நிலைமை போன்றவைதான். இவையனைத்துக்கும் பா.ஜ.க.வின் தத்துவக் கர்த்தாவான ஆர்.எஸ்.எஸ்.ேஸ காரணம். ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஒழிப்பே இந்தியா காக்கப்பட ஒரே வழி!

இந்தியாவில் உள்ள மதச் சார்பற்ற சக்திகள், தங்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைத் தூர ஒதுக்கி, மதவாத பிஜேபி ஆட்சியை ஒழிப்பது ஒன்றே ஒரே நோக்கு –இலக்கு என்ற முடிவில் திடமாக இருந்து செயல்படுவதே சரியான தீர்வாக இருக்க முடியும். அதை மறந்து, எதிர்க்கட்சிகள் கோணல் கழிகளை வெட்டுவது – இன்னொரு வகையில் மதவாத  பிஜேபிக்குத் துணை போவதே ஆகும். இதனை வரலாறு மன்னிக்காது! மன்னிக்கவே மன்னிக்காது!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *