வழக்கு முடிந்துவிட்டது; கேள்விகள் தொக்கி நிற்கின்றன!

பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தத்தை (எஸ்.அய்.ஆர்) மேற்கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) முடிவு சரியானதே என்று கடந்த செவ்வாயன்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான  அமர்வில் இந்த நடவடிக்கையை வழக்கமான வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு மாறுபட்டதாக இருக்கிறது என்ற காரணத்திற்காக, இதனை இந்திய அரசியலமைப்புக்கு முரண்பட்டதாகக் கருதி நிராகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகளை எதிர்த்து தொடரப்பட்ட பல மனுக்களைக் குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலித்து வந்தது. 16 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பிரதேசங்களில் எஸ்.அய்.ஆரின் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டம் தொடங்கும் முன் சில நாட்களுக்கு முன், இத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற எஸ்.அய்.ஆர் நடவடிக்கை, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை இருமுறை கணக்கிடுதல், வாக்காளர் இடமாற்றங்கள், மரணங்கள் மற்றும் உண்மையான புதிய வாக்காளர்களைப் பட்டியலில் சேர்த்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியல்களில் உள்ள தவறுகளை தவிர்க்க நடத்தப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்த தகவலை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் எஸ்.அய்.ஆரைச் சட்டப்பூர்வமான நடவடிக்கையாக வகைப்படுத்தியுள்ள உச்சநீதிமன்றம், நேரடியான, சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த எஸ்.அய்.ஆர் உதவும் என்றும் குறிப்பிட்டு, தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி வாக்காளர் பட்டியல்களை திருத்தும் அதிகாரம் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 324-ஆம் பிரிவையும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 21-ஆம் பிரிவையும் இது வலுப்படுத்துவதாகக் கூறியுள்ளார் இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.

சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் வெறும் வாக்குப்பதிவுச் செயல்முறைகளினால் மட்டுமல்லாது, அவற்றின் மீதான அடிப்படையான நம்பகத்தன்மை, துல்லியம் மற்றும் வாக்காளர் பட்டியல்களின் நம்பகத் தன்மையையும் சார்ந்துள்ளது, இந்த பட்டியல்கள் ஜனநாயக செயல்முறையின் அடிப்படையாக உள்ளன என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது – சரியானது தான், ஆனால் இங்கு பிரச்சினையே அது தானே! தேர்தல் ஆணையத்தின் மீதும், அதன் செயல்பாடுகள் மீதும் நம்பகத் தன்மை ஏற்படும் வகையில் தேர்தல் ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக நடந்துகொள்ளவில்லையே!

தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவிலிருந்து இந்தியத் தலைமை நீதிபதிக்கான இடம் மறுக்கப்பட்டுள்ளதே! தேர்தல் ஆணையர்கள் பணிக்காலத்தில் செய்த தவறுக்காக, எடுத்த முடிவுகளுக்காகப் பின்னாளில் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடியாது என்று 2023-ஆம் ஆண்டு தனியாகச் சட்டம் திருத்தப்பட்டது எதற்காக என்ற கேள்விக்குப் பதில் இல்லையே!

வாக்காளர் பட்டியலில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன, வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து கிடைக்க வில்லையே! தேர்தல் தேதி அறிவிப்பு முதல், தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வரை ஒன்றிய அரசின் தலையீடும், பா.ஜ.க.வின் அரசியல் நலனுக்கான நடவடிக்கைகளும் அதிகம் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு வழக்கத்தைவிட கடந்த 10 ஆண்டுகளாகத் தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கப்படுகிறதே! மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகத்துடன் தானே மக்கள் வாக்களிக்கச் செல்கிறார்கள்; விவிஎம் பேட் சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றனவே! வாக்களித்தவர்கள்  எண்ணிக்கைக்கும், தேர்தல் முடிவுகளில் வரும் எண்ணிக்கைக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதாக வரும் குற்றச்சாட்டுகள், வாக்குப் பதிவு இயந்திரங்கள் இரு சக்கர வாகனத்திலும், மூன்று சக்கர வாகனங்களிலும் முறையான பாதுகாப்புகள் இன்றி கொண்டு செல்லப்படுவதும், கையாளப்படுவதும் வட மாநிலங்களில் சர்வசாதாரணமாக நடக்கிறதே! ஊடகங்களில் காணொலிகளுடன் செய்திகள் வருகின்றன – பின் மறைக்கப்படுகின்றனவே! இவையெல்லாம் நியாயமான, சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்படுவதாகவும், தேர்தல் ஆணையம் சுத்த சுயம்பிரகாசம் என்றும் நம்பிக்கையைத் தருகின்றனவா?

வாக்காளர் பட்டியலில் மாட்டுக் கொட்டகையில் 67 பேருக்கு வாக்கு இருப்பதாக வந்த பட்டியலும், சுழியம் (ஜீரோ) என்று எண்ணிடப்பட்ட வீட்டில் பலருக்கு வாக்குகள் இருப்பதாக வந்த செய்தியும் ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டப்பட்ட போதும் தேர்தல் ஆணையமும், நீதிமன்றங்களும் எடுத்த நடவடிக்கைகள் என்ன? வாக்களிக்க வேண்டியவர்கள் பலர் பெயர் பட்டியலில் இல்லை என்ற முறையீட்டுக்கு விடை காணப்பட்டுவிட்டதா?

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கும், குடியுரிமைக்கும் தொடர்பில்லை. இரண்டின் செயல்பாடுகள் வேறு என்கிறது உச்சநீதிமன்றம். ஒரு புறம் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி என்றும், இன்னொரு புறம் எஸ்.அய்.ஆர் என்றும் சொல்லப்படுவன எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்று நம்பச் சொல்கிறது உச்சநீதிமன்றம். குடிமக்களுக்கு வாக்குரிமை மறுப்பது எந்த வகையிலான பிரச்சினை, அதற்கென்ன தீர்வு என்று விளக்கம் உண்டா? நாளை இதையே காரணமாகக் காட்டி குடியுரிமை மறுக்கப்படாது என்பதற்கு உத்தரவாதம் உண்டா?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்  சொல்லும் வழக்கமான மறு ஆய்வு என்பதும், தீவிர மறு ஆய்வு என்பதும், சட்டத்தில் இல்லாத சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பதும் ஒன்றுதான் என்கிறது உச்சநீதிமன்றம். அதற்கு சட்டத்தின் எந்தப் பிரிவு வகை செய்கிறது?

பீகார் எஸ்.அய்.ஆரையொட்டி, தொடுக்கப்பட்ட வழக்குகளில் பிற மாநில வழக்குகளும் சேர்க்கப்பட்டன. அனைத்தும் என்.ஜி.ஓ.க்களும், அரசியல் கட்சிகளும் தொடுத்த வழக்குகளே என்று உச்சநீதிமன்றம் புறங்கையால் ஒதுக்கப் பார்க்கிறது. வேறு யார் குடிமை உரிமைகளுக்காக வழக்கு தொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது? இடைக்காலத் தடை விதிக்காமல் பீகார் முதல் தமிழ்நாடு வரை தேர்தல்களை நடத்த உத்தரவிட்டபோதே தீர்ப்பு எப்படியிருக்கும் என்பது தெரிந்துவிட்டதாக வழக்குத் தொடுத்தோர் தெரிவிக்கின்றனர்.

வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டது; கேள்விகள் மட்டும் தொக்கி நிற்கின்றன?!

அந்தோ ஜனநாயகமே! உன் நிலை இவ்வளவு பரிதாபமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *