திருப்புவனம், ஜூன் 29– சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடந்து வரும் 11-ஆம் கட்ட அகழாய்வுப் பணியில், பழங்காலத்துச் சுடுமண் உறைகிணறு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது தொல்லி யலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
கீழடி அகழாய்வுப் பணி
கீழடியில் கடந்த மார்ச் 18-ஆம் தேதி முதல் 11-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மொத்தம் 9 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில், தோண்டப்பட்ட 9ஆவது குழியில் இந்தச் சுடுமண் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த உறைகிணற்றின் அமைப்பைக் கொண்டு, பண்டைய காலத்தில் இப்பகுதியில் பெரிய அளவிலான தொழிற்சாலை அல்லது தொழிற்கூடம் இயங்கியிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து வெளியாகும் வரலாற் றுச் சான்றுகள் ஏற்கெனவே நிறை வடைந்த 10-ஆம் கட்ட அகழாய்வில் சுமார் 13,000 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. அவை தற்போது கீழடி அருங்காட்சியகத்திலும், அங்கு கண்டறியப்பட்ட சுடுமண் செங்கல் கட்டுமானங்கள் திறந்தவெளி அருங்காட்சியகமாகவும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தற்போது நடக்கும் 11-ஆம் கட்ட ஆய்விலும் அடுத்தடுத்து வியப்பூட்டும் பொருட்கள் கிடைத்து வருகின்றன:
மட்கலங்கள் (மண்பாண்டங்கள்) கெண்டி மூக்கு மட்கலங்கள் மூடியுடன் கூடிய மட்கலங்கள் சிறிய வாய்ப்பகுதி கொண்ட மண்பானைகள் போன்றவை கிடைத்துள்ளன.
கீழடியில் தொடர்ந்து நடத்தப்படும் அகழாய்வுப் பணிகள் மூலம், தமிழர்களின் நாகரிகத்தைப் பறைசாற்றும் 2,600 ஆண்டுகள் பழைமையான இன்னும் எண்ணற்ற தொல்பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகத் தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
