சங் பரிவாரின் பாராட்டு ஆபத்தானது!

4 Min Read

சங் பரிவாரின் பாராட்டு ஆபத்தானது!

‘வாழ்த்தும், வசவும் யாரிடமிருந்து, எதற்காகப் பெறுகிறோம்’ என்பதில் தான் அதன் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் புதிய அரசு மாண்புமிகு ச.ஜோசப் விஜய் தலைமையில் பதவியேற்றது முதல் எல்லாத் தரப்பிலிருந்தும் அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டுவருகின்றன.

‘‘பள்ளிகளில் ஜாதி அடையாளங்களுடன் கைகளில் கயிறு அணிந்து யாரும் வரக் கூடாது’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். கடந்த ஆட்சியிலேயே இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பினும், புதிய அரசும் அதே நடவடிக்கையைத் தொடர்ந்ததற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டு தெரிவித்தார். ஆனால், ஜாதிப் பிரச்சினைகளுக்குக் காரணமான கயிறுகளை அணியக் கூடாது என்ற அறிவிப்பை ‘இந்துக்களுக்கு எதிரான செயல்பாடு’ என்று கூறி கண்டனம் வெளியிட்டார் தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்  ஒருவர். ‘‘இப்படிச் செய்தால் தி.மு.க.வுக்கு ஏற்பட்ட கதியே த.வெ.க.வுக்கும் ஏற்படும்’’ என்று அவர் சபித்துள்ளார்(!). தி.மு.க.வுக்கு என்ன கதி ஆனது என்பது இருக்கட்டும்! தி.மு.க. ஆட்சியில் இதே போன்ற அறிவிப்பு வெளியிட்டபோது, அதைக் கண்டித்த பா.ஜ.க. கம்பெனிக்கு என்ன கதி ஆனது என்பதைப் பற்றிப் பேச வேண்டாமா? அது ஒருபுறம் இருக்க  ‘பா.ஜ.க.வைத் தனது கொள்கை எதிரி’ என்று அறிவித்துள்ள த.வெ.க. அரசுக்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவரின் கண்டனம் என்பது பாராட்டுப் பத்திரம் அல்லவா?

அதே வேளையில், இந்து சமய அறநிலையத் துறை குறித்த செய்திகளும், அறிவிப்புகளும் என்ன வகையில் உள்ளன?

இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த தி.மு.க. ஆட்சி யில் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படாமல் இருந்த 29 திருமண மண்டபங்கள், 17 வணிக வளாகங்கள் என மொத்தம் ரூ.245 கோடி மதிப்புள்ள 46 கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட நிர்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஓர் அரசில் கொண்டுவரப்படும் திட்டங்கள், அடுத்த ஆட்சியில் நிறுத்தப்படுவதும், கைவிடப்படுவதும் வரவேற்கத்தக்கவை அல்ல, எனினும் இத்தகைய நடவடிக்கைகள் பல்வேறு அரசுகளிலும் நடந்து வருகின்றன என்று சலிப்புடன் சமாதானம் ஆகலாம். ஆனால், அதைவிட முக்கியம் அது எந்த நோக்கத்தில், என்ன கொள்கையின் அடிப்படையில் கைவிடப்படுகிறது என்பதுதான்!

‘இனிவரும் காலங்களில் கோயில் நிதி ‘புனித’மான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். அறநிலையத் துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற நிர்வாக குளறுபடிகள் சரிசெய்யப்படும்’ என்ற ஆளுநர் உரை மூலமாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்து சமய அறநிலையத் துறைக்கு வரும் வருமானங்கள் என்பவை பெரிதும் பக்தர்கள் தந்த நன்கொடைகளின் அடிப்படையில் கிடைத்தவை. அவற்றைக் கொண்டு பெருகியவை. அவற்றின் பலனை இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பெறுவதில் என்ன பிரச்சினை இவர்களுக்கு? ‘கோயில் சொத்துகள் எல்லாம் தங்களின் சொத்துக்களே’ என்ற நினைப்பில் இருந்த பார்ப்பனர்களின் எண்ணத்தைப் பொய்ப்பித்து  நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத் துறை! அதுமுதலே, அதனை ஒழிக்கப் பல முயற்சிகளைச் செய்து வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் அனைவரும் ஹிந்துக்களாகவே இருக்க வேண்டும் என்று அச் சட்டம் சொல்லுகிறது என்று சொல்லித் தான், கோவில்களில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்லூரிகளில் கூட வேறு மதத்தைச் சார்ந்தவர்களைப் பணியமர்த்தக் கூடாது என்று ஆக்கியுள்ளனர். பிறகு வேறு யாருக்கு அது பயனளிக்கப் போகிறது? ஆனால் பார்ப்பனர்களும், இந்துத்துவவாதிகளும் கல்லூரிகள் கட்டுவதை எதிர்க்கின்றனர். கடந்த ஆட்சியில் கொளத்தூரில் கட்டப்பட்ட கல்லூரியை எதிர்த்தார்கள்.

கல்லூரிகள் கட்டுவதால்  யார் பயனடையப் போகிறார்கள்?

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

பின்னருள்ள தருமங்கள் யாவும்,

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்று பாரதியார் பாட்டை எடுத்துக் காட்டுவதெல்லாம் மேடையில் கைதட்டு வாங்கத்தானா? வெறும் பம்மாத்துப் பேச்சுத் தானா?

இந்து சமய அறநிலையத் துறையின் கல்லூரியில் படிக்கவிருப்பவர்கள் யார்? ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள்தானே! அவர்களுக்குக் கல்வி  கொடுத்தல் புண்ணியமில்லையா? கல்வி அவர்கள் நம்பிக்கைப்படி ‘புனித’மானது இல்லையா?

ஒருவேளை, வேத பாட சாலைகள் அமைத்தல்தான் ‘புனித’மோ? பார்ப்பனர்கள் மட்டும் கல்வி பயில வகை செய்திருந்தால்தான் ‘புண்ணிய’மோ? என்று திராவிடர் கழகத் தலைவர் அப்போதே கேள்வி எழுப்பியிருந்தார். பழைய வரலாறுகளை எடுத்துக் காட்டியிருந்தார்.

இந்நிலையில் கல்வி நிலையங்கள், மருத்துவ வசதிகளை எவ்விதத்திலும் கைவிட்டு விட மாட்டோம் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் தெரிவித்திருக்கும் நிலைப்பாட்டில் இந்த அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னால் “அறநிலையத் துறையில் நேர்ந்த கடந்தகால துன்பங்கள் இனி இருக்காது. இந்துக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்” என்று  ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான ‘மயிலாப்பூர்’காரர் என்பவர் பேட்டி கொடுத்திருக்கிறார்.

‘அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டம்’ உள்பட கோவில்களில் சமத்துவத்துக்கான பணிகள் செய்யப்படும்போதெல்லாம் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்ட பல்வேறு வழக்குகளைத் தொடுத்து இடையூறு செய்யும் இந்த நபரின் பாராட்டை இந்த அரசு உவப்பானதாகக் கருதக் கூடாது.

பார்ப்பனியத்திடம் தொடர்ந்து எதிர்ப்பைச் சம்பாதிப்பதன் மூலம் என்னுடைய பாதை சரியாக இருப்பதை நான் உறுதி செய்து கொள்கிறேன் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொல்வதுண்டு.

தன்னால் ‘கொள்கை எதிரிகள்’ என்று சொல்லப்பட்ட பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவாரிடம் பாராட்டுப் பெறுவதை இந்த அரசு எப்படிப் பார்க்கிறது? ‘அந்தப் பாதை சரியானதா’ என்று யோசித்துத் தொடக்கத்திலேயே சுதாரித்துக் கொள்வதற்கான வாய்ப்பாக இதனை எடுத்துக் கொள்ளும் அளவுக்குப் புரிதல் இந்த அரசுக்கும், அதன் முதலமைச்சருக்கும் இருக்கிறதா என்பதுதான் வரலாறு இவர்களுக்கு வைக்கும் தேர்வு!

அணைத்து அழிக்கப் பார்க்கும் ஆரியத்திடம் எச்சரிக்கை அவசியம்! அவசியம்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *