மும்பை, ஜூன் 26– கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய திருத்தப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர் களின் பாதுகாப்பு மற்றும் வங்கிகளின் கடமைகள் குறித்து கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:
5 நாட்களுக்குள் தற்காலிக வரவு:
கடன் அட்டை மூலம் மோசடியான மின்னணு பரிவர்த்தனைகள் நடந்தால், வாடிக்கையாளர் புகார் அளித்த 5 நாட்களுக்குள் இழந்த தொகைக்கு இணையான பணத்தை வங்கி தற்காலிக வரவாக (Shadow Credit) வாடிக்கையாளர் கணக்கில் சேர்க்க வேண்டும். இதனால் வாடிக்கையாளருக்கு வட்டி அல்லது தாமதக் கட்டணம் விதிப்பது தடுக்கப்படும்.
500 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள அனைத்து மின்னணு பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி (SMS) மூலம் எச்சரிக்கை அனுப்ப வேண்டும். அதில் தேதி, நேரம் மற்றும் வாடிக்கையாளரின் பதில் நேரம் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும்.
வங்கியின் அலட்சியம் அல்லது குறைபாடு காரணமாக மோசடி நடந்தால், வாடிக்கையாளர் புகார் அளிக்காவிட்டாலும் கூட, முழு தொகையையும் திரும்பப் பெற அவருக்கு உரிமை உண்டு.
வங்கியோ அல்லது வாடிக்கையாளரோ அல்லாமல், மூன்றாம் தரப்பு (Third-party) மூலம் மோசடி நடந்தால், அது நடந்த 5 நாட்களுக்குள் வாடிக்கையாளர் வங்கிக்கு தகவல் தெரிவித்தால் முழு தொகையையும் திரும்பப் பெறலாம்.
மோசடி குறித்த புகார் வந்தவுடன், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கில் மேலும் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையும் நடக்காதவாறு வங்கி உடனடியாக கணக்கை முடக்கவோ அல்லது தகுந்த நடவடிக்கை எடுக்கவோ வேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர் களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் இந்த திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்றன.
