கொல்கத்தா, ஜூன் 6- வங்க தேசத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவர் தலைவர் உஸ்மான் பின் ஹாதி படுகொலை செய்யப்பட்டார். அந்நாட்டில் பெரும் அமைதியின்மையை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கின் முதன்மை குற்றவாளிகள் சிலர், வங்கதேசத்தில் இருந்து தப்பி, மேகாலயா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
மம்தா மீது வழக்குப்பதிவு
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி கொல்கத்தாவின் தர்மதலா பகுதியில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மம்தா, “வங்கதேசத்தில் நடந்த ஒரு முக்கிய கொலை வழக்கு குறித்த முழு விவரங்களும் எனக்கு தெரியும்; அதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதும் தெரியும்” என்று பேசினார்.
மம்தாவின் இந்த அதிரடிப் பேச்சு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிலிகுரியைச் சேர்ந்த வழக்குரைஞர் ரிங்கி சென் என்பவர், சிலிகுரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். “மம்தாவின் இந்த பேச்சு, வங்கதேச கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்புகளுக்கோ அல்லது ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கோ ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போன்ற தவறான பிம்பத்தை மக்களிடையே ஏற்படுத்தும்.” இவ்வாறு வழக்கறிஞர் ரிங்கி சென் சட்டர்ஜி புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், சைபர் க்ரைம் காவல்துறையினர் மம்தா மீது தொடர்புடைய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு (FIR) செய் துள்ளனர். இந்த எப்.அய்.ஆர் பதிவைத் தொடர்ந்து, மம்தாவிடம் நேரில் விசாரணை நடத்த சைபர் க்ரைம் காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்த நடவடிக்கை முற்றிலும் “அரசியல் பழிவாங்கல்” என்று அக்கட்சியினர் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கட்சிக்குள்ளும் வெளியிலும் இவ்வளவு நெருக்கடிகள் மற்றும் எப்.அய்.ஆர் வழக்குகள் பாய்ந்த போதிலும், மம்தா இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு ஊடக அறிக்கையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார்.
