சின்னாளப்பட்டி: திராவிட இயக்கத் தேகத்தில் பதிந்துள்ள விழுப்புண்

4 Min Read

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தடம் உண்டு. தந்தை பெரியாரின் கால் பாவாத ஊர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எல்லா இடங்களிலும் வரவேற்பு தான் என்றில்லை. எதிர்ப்புகளே ஏராளம். எதனாலும் அவரது பாதையைத் தடை செய்ய முடிந்ததில்லை. இந்த எதிர்ப்புகளை எல்லாம் எதிர்பார்த்தே அவர் களத்திற்கு வந்தார்.

பாழுங்காட்டைச் சீர்திருத்தி மக்கள் வாழத்தக்க நாடாக்க வேண்டும் என்று கிளம்பிவிட்டவர், முட்கள் உடலைக் கிழிக்கும் என்றோ, கற்கள் காலைப் பதம் பார்க்கும் என்றோ, விஷப் பூச்சிகளின் ஆபத்து இருக்கும் என்றோ கவலைப்பட்டால் ஆகுமா? பாம்புகள் படமெடுக்கலாம்; ஆட்கொல்லி விலங்குகள் அசந்த நேரத்திற்குக் காத்திருக்கலாம்! இவற்றுக்கு அஞ்சினால், காட்டின் எல்லையில் இருந்து வேடிக்கைதான் பார்க்க முடியும்; எதிர் நிற்கும் துணிவு இருந்தால் எந்த விலங்கும் கொஞ்சம் தயங்கி நிற்கும்!

தந்தை பெரியாரின் துணிவும் அத்தகையது தான்! எத்தனை எதிர்ப்புகள் திரண்டு வந்தாலும், எதிர் நிற்கும் துணிச்சல் அவருக்குண்டு! ஊர் எல்லையிலேயே தடுத்து நிறுத்தக் கூடியிருந்த மக்களிடம், என்னை எதிர்க்கக் காரணம் என்ன என்று கேள்வி கேட்டுப் பேசத் தொடங்கி, அந்த ஊர் மக்களாலேயே ஊர்வலமாகத் தூக்கிச் சென்று கொண்டாடப்பட்டவர்.

யாருக்காக அவர் உழைத்தாரோ, அவர்களே புரியாமல் எதிர்த்திருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்குக் கைக்கூலி வேலை பார்த்திருக்கிறார்கள். தந்தை பெரியாரின் குரலைத் தடுக்க ஆயுதங்களைத் தூக்கியிருக்கிறார்கள். கல் மழை பொழிந்திருக்கிறார்கள். பாம்புகளை வீசியிருக்கிறார்கள். செருப்புத் தோரணம் கட்டியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு, ”ஆகவே தோழர்களே…” என்று அடுத்த வரியைத் தொடங்கிவிடுவார் தந்தை பெரியார்.

அப்படி ஒரு வரலாறு 80 ஆண்டுகளுக்கு முன்னால் சின்னாளப்பட்டியில்! 1946 ஜனவரி 16 அன்று, நகருக்குள்  மகிழுந்திலேயே ஊர்வலமாக தந்தை பெரியாரை  அழைத்துவந்து மலர் மாலைகள் குவித்தார்கள். ஒலி பெருக்கிகள் ஏற்பாடு உண்டு என்று விளம்பரம் செய்யப்பட்ட காலம் அது! ஆயிரக்கணக்கான மக்கள் தந்தை பெரியாரின் உணர்ச்சிமிக்க பேருரை கேட்டுத் தெளிவுபெறுகிறார்கள். ” இவ்வுணர்ச்சியைக் கண்ட காங்கிரஸ்காலிகள் துரத்தில் நின்று கூச்சலிட்டுக் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். ஒலிபெருக்கி நன்றாக இருந்ததால் தந்தை பெரியாரவர்கள் கூச்சலை லட்சியம் செய்யாமல் மிக உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். தந்தை பெரியார் விடாமல் பேசுவதையும், மக்கள் கேட்டுக் கொண்டிருப்பதையும் கண்ட காலிகளுக்கு மிகவும் அவமானம் உண்டாகவே எப்படியேனும் காலித்தனம் செய்ய வேண்டுமென்று கருதி கற்களை வீசினர். உடனே தந்தை பெரியாரவர்கள் சால்வையை எடுத்துத் தலையில் கட்டிக்கொண்டு “எல்லோரும் தலையில் துண்டைக்கட்டிக் கொள்ளுங்கள் ஒருவரும் கலையவேண்டாம்” என்று கூறி மீண்டும் பேசிக்கொண்டே இருந்தார். இதைக் கண்ட காலிகள் மிகவும் அதிகமாகக் கூச்சலிட்டுக் கற்களை மாரிபோல் வீசினர். உடனே அங்கு வந்திருந்த காவல்துறையினர் தடியடிப் பிரயோகம் செய்தனர். உடனே கூட்டம் கலைய ஆரம்பித்தது. அவ்வூரில் காவல் நிலையமும், காவலர்களும் இல்லாததால் வெளியூரிலிருந்து இங்கு ஒன்றும் கலவரம் நடக்காதென்று கருதி இரண்டு காவலர்களும், ஒரு காவல் உதவி ஆய்வாளரும் வந்திருந்தனர். கலவரம் அதிகமாகவே… காவல் உதவி ஆய்வாளர் தந்தை பெரியாரிடம் ‘‘கூட்டத்தைக் கலையுங்கள்’’ என்று சொன்னார். உடனே தந்தை பெரியார் நீங்கள் “என்னால் சமாளிக்க முடியவில்லை கலைத்து விடுங்கள் என்று எழுதிக் கொடுங்கள்’’, என்று சொல்லிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். பின்பு காவல் உதவி ஆய்வாளர், ‘‘நாளையோ மறுநாளோ வேண்டுமானால் நான் பாதுகாப்போடு உங்கள் கூட்டத்தை நடத்தித் தருகிறேன்’’ என்று கூறிவிட்டு அவரே ஒலிபெருக்கி முன்னால் நின்று. ‘‘காலிகள் கலகம் செய்வதாலும், நான் போதிய பந்தோபஸ்துடன் வராததாலும் இக்கூட்டத்தைக் கலைக்கிறேன்’’ என்று கூறினார். பின்பு உள்ளூர்த் தோழர்களும்  வேண்டிக்கொள்ள தந்தை பெரியார் கூட்டத்தை முடித்தார். இவ்வளவு கலவரம் நடந்தும் தந்தை பெரியாரவர்கள் 1 மணி நேரம் பேசினார்.  முஸ்லிம் லீக்கின் சார்பிலும், சித்தையன்கோட்டை திராவிடர் கழகத்தின் சார்பிலும் வாழ்த்திதழ்களும், மலர் மாலைகளும் அணிவிக்கப்பட்டன.” என்று அன்று நடந்ததை விவரிக்கிறது குடிஅரசு ஏடு (19.01.1946).

அவர்தாம் தந்தை பெரியார்!

தந்தை பெரியார் மீது காலித்தனம் நடந்த ஊரிலிருந்து தான் ராமய்யா, சண்முகம் என்று இரு தோழர்கள் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் அடுத்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு கலந்து கொண்டு சிறை சென்றார்கள் என்பது வரலாறு!

எதிர்நீச்சலிட்டு தந்தை பெரியார் கண்ட வெற்றியின் 80-ஆம் ஆண்டு விழாவை, அதே சின்னாளப்பட்டியில் தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்துகிறார். திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தேகத்தில் பதிந்துள்ள விழுப்புண்களைத் தொட்டுக் காட்டி, இளைய தலைமுறைக்குப் பாடம் எடுக்கிறார். ‘வீரத் தொகைக் கணக்கெடுப்பு’ விழுப்புண்களின் எண்ணிக்கையில்தானே இருக்கிறது! திராவிடத்தின் கனியை மக்கள் ருசித்துப் பார்த்திடாத அந்தக் காலத்திலேயே, எதிர்ப்புகளை உரமாக்கி, மக்கள் துணைகொண்டு வளர்ந்த இயக்கம் – அதற்கு வகுத்த வழிமுறைகளை வருங்காலத் தலைமுறை கற்க வேண்டாமா? விதைவிதைத்தது யார் என்பதைச் சொல்லாவிட்டால், மரம் வளர்ந்த வரலாறு மறந்துபோய்விடுமே! அதைச் சொல்லுதற்குத் தகுதிபடைத்த தலைவர் இவரே அன்றோ! அதனால் தான் கடமை உணர்வுடன், உரிமை கொண்டு அழைக்கிறார்! சின்னாளப்பட்டியில் தொடங்கி மதுரை, கடலூர், புதுச்சேரி, சிவகங்கை, ராஜபாளையம், திருநாகேசுவரம் என அந்தப் பயணம் நீளட்டும்! ஊர்தோறும் அவர் அடிச்சுவட்டைத் தொடர்வோம்! அது அய்யாவின் அடிச்சுவட்டில் பயணிக்கும் – நம்மையும் பழக்கப்படுத்தும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *