‘‘யாகாவாராயினும் நாகாக்க!’’
முதலமைச்சரின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த உரை –
முதலமைச்சர் தகுதிக்கு உகந்ததல்ல!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை, முதலமைச்சர் பதவியில் உள்ள ஒருவரின் நிலைக்கு அழகானதல்ல – உகந்ததும் அல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கென்று தனிச் சிறப்பான – பெருமைப்படத்தக்க வரலாறு உண்டு! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தனிச் சிறப்பான – பெருமைப்படத்தக்க
வரலாறு உண்டு!
நமது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கென்று தனிச் சிறப்பான – பெருமைப்படத்தக்க வரலாறு உண்டு.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய நாடாளுமன்றவாதிகள் இந்தியாவில் நடக்கும் சட்ட மன்ற நடவடிக்கைகளை நேரில் பார்ப்பது என்றால், அவர்கள் முதலில் வரக்கூடிய இடம் நீதிக்கட்சி ஆட்சி புரிந்த சென்னை மாநில சட்டப்பேரவைக்குத்தான்!
அந்த அளவுக்குக் கண்ணியமும், ஜனநாயக மரபுகளும் பின்பற்றப்படக் கூடியதாக தமிழ்நாடு சட்ட மன்றம் நடந்திருக்கிறது.
அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த திரு.கே.விநாயகம் (காங்கிரஸ்) ‘‘Your Days are Numbered’ என்று பேசினார்; அதாவது, ‘‘உங்கள் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன’’ என்று ஆவேசமாகக் கூறினார்.
முதலமைச்சர் அண்ணாவின் நாகரிகமான பதில்!
அவையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் அண்ணா அவர்கள் பதற்றப்படவில்லை; பதிலாக கடுஞ்சொற்களை அள்ளி வீசவில்லை; மாறாக, என்ன பதில் சொன்னார் தெரியுமா?
‘‘My steps are Measured’’ – அதாவது ‘‘எனது அடிகள் அளந்துதான் எடுத்து வைக்கப்படுகின்றன’ என்றார்.
எவ்வளவு நாகரிகமான பதில்! விநாயகமே வெட்கப்பட்டார்!
1969 ஆம் ஆண்டில், கலைஞர் அவர்கள் முதல மைச்சராக இருந்தபோது, சுதந்திரா கட்சி உறுப்பினராக இருந்த எச்.வி.ஹண்டே, தி.மு.க. அரசை மூன்றாம் தர அரசு என்று சாடினார். முதலமைச்சர் கலைஞர் அவர்களோ, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கிளர்ந்து எழுந்தபோது, அவர்களை கையசைத்து அமைதி காக்கச் செய்து, அளித்த பதில் என்ன தெரியுமா?
‘‘இது மூன்றாம் தர அரசல்ல; எங்கள் ஆசான் தந்தை பெரியார் மொழியில், கொள்கை வழியில் நின்று கூறுகிறேன், ‘‘வர்ணாசிரமப்படி பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோருக்கு அடுத்து நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்கள்’’ மற்றும் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக நடத்தப்படும் அரசு என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன்’’ என்று கம்பீரமாக சொன்னதை இந்த இடத்தில் நினைவுப்படுத்துவது பொருத்தமாகும்.
வருத்தத்திற்குரியதே!
இவற்றையெல்லாம் எடுத்துக் காட்டுவதற்குக் காரணம், கடந்த 23 ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து, நிறைவாக ஆற்றிய உரையில் பயன்படுத்திய வார்த்தைகள், மெய்மொழிகள் (உடல் அசைவுகள், சைகைகள்) முதலமைச்சருக்குரிய பான்மையில் இல்லை என்பது வருத்தத்திற்குரியதே! அவையின் மாண்புக்கு மாறானதும்கூட!
பொதுக் கூட்ட மேடையில்கூட ஒழுங்குத் தப்பிதம் கூடாது என்பதே உயர்ந்த நிலை; ஆனால், சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் பயன்படுத்திய சொல்லாடல்களும், ஜாடைப் பேச்சுகளும், உடல் மொழியும் திருத்திக் கொள்ளப்பட வேண்டியவை! தி.மு.க. தலைவரைக் கொச்சைப்படுத்த எண்ணி, ஒரு முதலமைச்சர், அப்பதவியின் மதிப்பைக் குறைக்கலாமா?
கைசூப்பும் குழந்தைக்கும் தெரியும்!
குட்டிக்கதை ஒன்றை முதலமைச்சர் கூறியுள்ளார்.
‘‘ஒரு ஊர்ல ஒரு பெரியவர் வெயில் அதிகமாக இருக்கிறது என்பதற்காக கண்ணுக்கு மேல் கையை வைத்துக் கொண்டு, சுற்றித் தேடிக் கொண்டிருந்தாராம். அப்பொழுது, கூட இருந்த ஒரு சின்ன பையன், ‘என்ன தேடறீங்கன்னு’ கேட்டானாம். அதற்கு அந்தப் பெரியவர் சொன்னாராம், ‘அது ஒன்னும் இல்ல தம்பி, உங்க அப்பா இங்கேதான் இருப்பார்னு சொன்னாங்க, அதுதான் தேடிட்டு இருக்கேன்; எங்கே உங்க அப்பாவையே காணோம்!’’ என்றாராம்.
இந்தக் குட்டிக்கதையை சொன்னதைத் தொடர்ந்து, முதலமைச்சர் பேசும்போது, ‘எங்களுக்கும் நக்கலாக நையாண்டியாக சம்பந்தம் இல்லாமல் குட்டிக் கதையாகப் பேசத் தெரியும். அந்தக் கதையில் பெரியவர் அப்படி சொன்னாராம். தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம், டென்ஷனும் ஆகவேண்டாம்’ என்று பேசியுள்ளார்.
யாரைக் குறிப்பிட்டு முதலமைச்சர் இப்படிப் பேசியி ருக்கிறார் என்பது கைசூப்பும் குழந்தைக்கும் தெரியும்.
‘‘‘ஈவில்ஸ், ஈவில்ஸ்’ என்று ‘டெவில்ஸ்’ பேசக்கூடாது’’ என்ற ‘பஞ்ச்’ டயலாக் – ‘‘வாயில் நல்லாதான் வருகிறது’’ என்ற வகையைச் சார்ந்ததே! குழாயடிப் பேச்சைக் குவலயம் ஏற்காது!
தி.மு.க. தலைவர் தளபதி மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தோல்வியைக் குறிப்பிட்டு, குட்டிக்கதை சொல்வதெல்லாம் நல்ல ரசனையல்ல!
த.வெ.க. தலைவருக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
விருதுநகரில் காமராசர் தோல்வி குறித்து அண்ணாவிடம் மகிழ்ச்சியாகத் தெரிவித்தபோது, அண்ணா அதனை ரசிக்கவில்லை – ‘அவர் தோற்றிருக்கக் கூடாது’ என்று சொன்னார் என்பதெல்லாம் த.வெ.க. தலைவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கலைஞர் அவர்களைக் குறிப்பிடும்போது, ‘கருணாநிதி’, ‘கருணாநிதி’ என்று கூறிவிட்டு, ‘சாரி, சாரி, கலைஞர்’ என்று கூறுவது எல்லாம் சினிமா பாணி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
சினிமாவை விட்டுவிட்டு வந்தவர், சினிமா ஸ்டலையும் விட்டு, அரசியல் நெறிக்குத் தன்னை ஆளாக்கிக் கொள்ளுவது அவசியம், அவசரம்!
சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு அரசியலுக்கு வந்த பிறகு, அதற்கான கடமை உணர்ச்சியே அவரைத் உந்தித் தள்ளவேண்டும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்போது, எதிர்க்கட்சித் தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்திருக்கவேண்டும்; தம் அரசின் மக்கள் நலத் திட்டங்கள்பற்றி எல்லாம் பட்டியலிட்டிருக்க வேண்டும்.
அதற்கு மாறாக, எதிர்க்கட்சியினரைக் கிண்டல் அடிப்பதும், சிறுமைப்படுத்துவதும் – தொடக்கமே சரியில்லை என்று பொதுக் கருத்தைத்தான் உருவாக்கும்.
யார் தயவாலும் நாங்கள் ஆட்சிக்கு வர வில்லை என்பது ஆதரவு தந்த கட்சிகளை நெளியச் செய்யவில்லையா? மக்கள் முழு ஆதரவு தந்தி ருந்தாலும், 108 எண்ணோடு நிறுத்தினார்கள் என்பதை மறக்கலாமா?
சட்டமன்றத் தலைவர் அனுமதியோடு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைப் போல் கையை அசைத்து முதலமைச்சர் காட்டியது எல்லாம் முதிர்ச்சி யின்மையைத்தான் காட்டும்.
வரவேற்கவேண்டியதை வரவேற்கும். கண்டிக்க வேண்டியவற்றை தாட்சண்யமின்றிக் கண்டிக்கும்!
‘யாகாவாராயினும் நா காக்க!’ என்பது மிகவும் முக்கியம்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை வரவேற்க வேண்டியதை வரவேற்கும். கண்டிக்க வேண்டியவற்றை தாட்சண்யமின்றிக் கண்டிக்கவே செய்யும்!
பொது ஒழுக்கச் சிதைவுக்கு தமிழ்நாடு சென்றுவிடக் கூடாது!
தலைவர், கி.வீரமணி
25.6.2026 திராவிடர் கழகம்
