அயோத்தி, ஜூன் 22 அயோத்தி ராமன் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் 40% கமிஷன் கேட்டதாக கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் பொறியாளர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
முன்னாள் பொறியாளர் புகார்
கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டு வந்த மூத்த பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் (எஸ்அய்டி) அளித்துள்ள வாக்குமூலத்தில், “கோயில் தொடர்பான ஒவ்வொரு ஒப்பந்தப் பணிக்கும் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகி ஒருவர் 40 சதவீதம் வரை கமிஷன் கேட்டார். கமிஷன் தர மறுத்த ஒப்பந்ததாரர்களின் பில்களை நிறுத்தி வைத்தனர். தரமற்ற பொருட்களை பயன்படுத்தவும் நிர்பந்தித்தனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.
ஆவணங்கள் சமர்ப்பிப்பு
தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக கமிஷன் கேட்டது தொடர்பான வாட்ஸ்அப் உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சில ஆவணங்களை அந்த முன்னாள் பொறியாளர் எஸ்அய்டியிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
“பக்தர்கள் ‘புனித’மாகக் கருதி அளித்த காணிக்கைப் பணத்தில் இப்படி முறைகேடு நடப்பது வேதனை அளிக்கிறது. உண்மையை வெளிக்கொண்டு வரவே இந்த புகாரை அளித்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணை தீவிரம்
ஏற்ெகனவே காணிக்கை மாயமான விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் எஸ்அய்டி, இந்த புதிய புகாரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அறக்கட்டளை நிர்வாகியிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என எஸ்அய்டி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த குற்றச்சாட்டு குறித்து ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ மறுப்போ அல்லது விளக்கமோ வெளியிடப்படவில்லை.
