சென்னை, ஜூன் 11- மக்களைத்தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக பாதிப்புகள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகளையும், சிகிச்சைகளையும் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கடந்த 2021-இல் தொடங்கப்பட்டது.
அதன் கீழ் 2.75 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டத்துக்கு அய்.நா. சபை விருதும் முந்தைய ஆட்சியில் கிடைக்கப் பெற்றது.
இத்திட்டத்தின் கீழ் 13.225 பேர் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.5,500 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு இரு மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் அவர்கள் முறையிட்டனர். இதையடுத்து, ரூ.5.01 கோடியை அரசு விடுவித்தது.
