உலக அளவில் பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுதோறும் 86.6 கோடி பேர் பாதிப்பு – 15 லட்சம் பேர் உயிரிழப்பு

2 Min Read

ஜெனீவா, ஜூன் 6- உலக சுகாதார அமைப்பு 194 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள், மருத்துவ ஆய்வு இதழான தி லான்செட்-இல் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:-

உலக மக்கள் தொகையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வெறும் 9 சதவீதம் மட்டுமே இருந்தாலும், உணவால் பரவும் நோய்களில் மூன்றில் ஒரு பங்கு இவர்களிடமே பதிவாகியுள்ளது. பெரியவர்கள் மற்றும் வயதான குழந்தைகளை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சால்மோனெல்லா, நோரோ வைரஸ், காலரா, ரோட்டா வைரஸ், கிரிப்டோஸ்போரிடியம் போன்ற பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய்களே உணவால் பரவும் நோய்களின் முக்கிய காரணமாக உள்ளன. குறிப்பாக இளம் குழந்தைகளுக்கு நீரிழப்பு வேகமாக ஏற்படுவதால் இந்த நோய்கள் உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

ஒவ்வொரு ஆண்டும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்பட்ட உணவு மாசுபாடு காரணமாக சுமார் 86.6 கோடி பேர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர். 15 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உணவு மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளில் 73 சதவீதம் வேதியியல் மாசுபாடுகளால் ஏற்பட்டவை ஆகும். அதில் கனிம ஆர்சனிக் மட்டும் 42 சதவீத உயிரிழப்புகளுக்கும், ஈயம் 31 சதவீத உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்துள்ளது.

இந்த 2 உலோகங்களும் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளே இதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. மாசுபட்ட உணவுகளில் உள்ள ஈயம் மற்றும் மெத்தில் பாதரசம் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதித்து, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நரம்பியல் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

உலகளவில் பதிவாகும் உணவால் பரவும் நோய்களில் கிட்டத்தட்ட 75 சதவீதமும், உயிரிழப்புகளில் 60 சதவீதமும் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே பதிவாகியுள்ளன. கடந்த 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மொத்த பாதிப்பு குறைந்திருந்தாலும், உயர் வருமான நாடுகளுக்கும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி இன்னும் குறையவில்லை. காலநிலை மாற்றமானது உணவு மாசுபாட்டு அபாயத்தை மேலும் அதிகரித்து வருகிறது. மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதால் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக மாறியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *