தந்தை பெரியாரின் ‘மண்டைச் சுரப்பை’ உலகு தொழுகிறது!

5 Min Read

பெரியார் உலகமயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது!
பெரியார் பன்னாட்டமைப்பும், ஜப்பான் தோழர்களும் இணைந்து
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்,
2026, அக்டோபர் 11, 12 ஆகிய நாள்களில் இரு நாள் மாநாடு!

பெரியார் உலகமயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது! பெரியார் பன்னாட்டமைப்பும், ஜப்பான் தோழர்களும் இணைந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்,  2026, அக்டோபர் 11, 12 ஆகிய நாள்களில் இரு நாள் மாநாடு நடைபெறவிருக்கிறது. தந்தை பெரியாரின்மண்டைச் சுரப்பைஉலகு தொழுகிறது  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்

அவரது அறிக்கை வருமாறு:

திராவிடர் கழகம் – ஒரு கட்சி அல்ல; மாறாக அது ஓர் இயக்கம்.

‘கட்சி’ (Party) என்பதற்கும், இயக்கம் (Movement) என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

இலட்சியங்களை மய்யப்படுத்தி, அவற்றிற்காக – நிரந்தரமாக இயங்கிக் கொண்டே இருப்பது இயக்கம் (Movement).

ஆனால், கட்சி (Party) என்பது ஒரு நோக்கத்திற்காக செயல்பட்டு, அதன் நோக்கம் நிறைவேறியபோதோ அல்லது வேறு பல காரணங்களாலோ, அதன் ஆயுளும், தேவையும் முடிந்துவிடுவதன் காரணமாக, அது இயங்க முடியாத அல்லது தேவையற்ற ஒன்றாக ஆகிவிடும்.

காந்தியாரின் அறிவுரையைப்
புறக்கணித்த காங்கிரஸ்!

எடுத்துக்காட்டாக, காங்கிரஸ் கட்சி, ‘சுயராஜ்யம்’, ‘சுதந்திரம்’ பெற்றது 1947 ஆகஸ்ட் 15 இல் என்பதை யொட்டி, அண்ணல் காந்தியார் அவர்கள், ‘‘காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட வேண்டும்; அது மேலும் நீடித்தால் அதற்குப் பலவித விரும்பத்தகாத நிலைகள்தான் ஏற்படும்’’ என்று எச்சரித்தார்; அந்தக் காலகட்டத்தில், காந்தியாரின் அறிவுரை – அரசியல் லாபங்கள், பதவி களைச் சுவைக்கத் துடித்த காங்கிரஸ் கட்சி, அதற்கு மாறுபட்ட நிலையை எடுத்தது!

காங்கிரஸ் கட்சியில் கடுமையாக உழைத்து, சமூகநீதியைப் பறிக்கும் ஆரிய ஆதிக்கத்திலிருந்து அது வெளியே வர முடியாத யதார்த்த நிலையை அனுபவித்து உணர்ந்த தந்தை பெரியார், சமூகநீதி செயற்பாடுகள் (வகுப்புரிமை) பல தோற்றதின் கார ணமாக, காங்கிரசை எதிர்த்துத் தனி இயக்கம் கண்டார். (இன்று மீண்டும் ‘ஆரிய மாயை’யில் காங்கிரஸ் சிக்கியுள்ளது!)

உலகளாவிய இயக்கமாக மாறியிருக்கிறது!

1925 இல் அவர் ‘‘சுயமரியாதை இயக்கம்’’ கண்டார்! ‘கட்சி’ ஆரம்பிக்கவில்லை என்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.

ஆசிரியர் அறிக்கை

அவ்வியக்கத்திற்குத் தலைமை தாங்கி, தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து, ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’ போன்ற ஏடுகளைத் தொடங்கினார். பல நூற்றாண்டு ஜாதி, தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்ணடிமை இவற்றை ஒழித்து, வகுப்புரிமை – சமூகநீதிக் களங்களத்தில் முதல் போராளியாக நின்று, வென்று தனது 95 ஆம் ஆண்டு முடியும் வரையில் தொடர்ந்து, அவ்வியக்கத்திற்காக அடிக்கட்டுமானம், கொள்கைச் சொத்து, பிரச்சாரக் களம் முதலியவற்றை நாளும் கண்டு, எதிர்நீச்சல் அடித்து, வெற்றி என்னும் கரையை அடைந்து, அவரது வாழ்நாளுக்குப் பிறகும், அவ்வியக்கமும், அதன் ஒப்பற்ற துணிவும், தெளிவும் மிக்கக் கொள்கைகளும், உண்மையான சுயநலமற்ற தொண்டர்களும், அதனை இன்று உலகளாவிய இயக்கமாக மாற்றி, தொய்வின்றி தொடர்ந்து நடத்தி, வாகை சூடி வைர நெஞ்சினராக உலா வருகின்றனர்!

‘‘இன்று எனது இயக்கம் ஏதோ ஒரு சிறு கூட்டத்தினரை (பார்ப்பனர் ஆதிக்கம்) எதிர்த்து நடைபெறும் இயக்கமாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. வருங்காலத்தில், அது உலகளாவிய மானுட உரிமை இயக்கமாகும். அதன் கொள்கைகளும், லட்சியங்களும் உலகத்திற்குத் தேவைப்படும் ஓர் இயக்கமாக மாறும்’’ என்று முன்னோக்கோடு கணித்துக் கூறினார்.

அது முற்றான உண்மை என்பதை நிலை நாட்டும் வண்ணம், உலகின் பற்பல நாடுகளிலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு மனிதநேய இயக்கம் பரந்து பட்ட மானிடப் பரப்பையே தனது எல்லையாகக் கருதி, அலுப்பு சலிப்பின்றி வளர்ந்து வருகிறது – ஊடகங்களின் கட்டுப்பாடான இருட்டடிப்பு – திரிபுவாதங்களையும் தாண்டி!

திராவிடத்தை அழிக்க
ஆயிரமாயிரம் அலப்பறைகளைச் செய்தாலும் மூக்குடைபடும் ஆரியம்!

ஆரியம் எளிதில் எவரையும் விலைக்கு வாங்கி டவோ, திரிபுவாதத்தின்மூலம் திசை திருப்பி விடு வதோ, விபீடணர்கள் – அடிவருடிகள் தன்னை விற்றுக் கொண்டு, மானத்தை, உரிமையை மறந்து, அறிவைத் துறந்து, துரோகத்தின் உருவங்களாகியும்கூட, மூல பீடமான தமிழ்நாட்டை, அதன் தளரா கொள்கைப் பாட்டை, ‘‘திராவிடத்தை’’ அழிக்க – ஆயிரமாயிரம் அலப்பறைகளைச் செய்தாலும், முடியாத சூழ்நிலை –  அவ்வப்போது தங்களது படையெடுப்பு முறையை பல வித வியூகங்கள், உத்திகள் மூலம் மாற்றிக் கொண்டும், மூக்குடைபட்டுக் கொண்டும்தான் உள்ளன. மாற்று ‘அவதாரங்களுக்கு’ ஆயத்தமாகி வரும் நிலை!

35 ஆண்டுகளுக்கு முன்பு
‘‘பெரியார் பன்னாட்டு அமைப்பு!’’

வட அமெரிக்காவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு – சிகாகோ நகரில், ஒரு சில நண்பர்கள் குடும்பங்களை வைத்து, டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் சரோஜா இளங்கோவன் மற்றும் பல தோழர்களால் தொடங்கப்பட்ட ‘‘பெரியார் பன்னாட்டு அமைப்பு’’ என்ற மனிதநேய அமைப்பு ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, பற்பல நாடுகளில் அதன் வளர்ச்சியும், கொள்கை லட்சிய முழக்கமும், தேவையும் பரவியுள்ளன. (தண்ணீர் ஊற்றினாலும், ஊற்றாவிட்டாலும், வளர்ந்தோங்கி வரும் பனைமரம் போல, ஏழை, எளியவர்களை வாழ வைக்கும் ‘வாழ்வியல் வசந்த மரம்’ அது).

அவ்வமைப்பினால், கடந்த ஆண்டுகளில் ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற  உலகின் பல்வேறு திக்குகளில், வெற்றிகரமாக மாநாடுகள் நடத்தி, மனிதநேய சுயமரியாதைக் கதிரொளியைப் பாய்ச்சியது. அங்குள்ள மக்களை பரவசமடையச் செய்தது!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்,
2026, அக்டோபர் 11, 12 ஆகிய நாள்களில்
இரு நாள் மாநாடு!

அதன் வெற்றித் தொடர்ச்சியாக, 2026, அக்டோபர் 11, 12 ஆகிய நாள்களில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இரு நாள் கருத்தரங்க மாநாட்டு ஏற்பாடுகளை ஜப்பான் தோழர்களும், பெரியார் பன்னாட்டமைப்பும் இணைந்து நடத்திட உற்சாகமுடன் பணியாற்றி வருகின்றனர்!

வழமைபோல், நம் நாட்டுத் தமிழினப் பேராளர்கள் (Delegates) அந்த இரு நாள் கருத்தரங்க மாநாட்டில் கலந்துகொள்ளவும், சிறு சுற்றுலாப் பயணம் முடித்து திரும்பும் வகையில் ஜப்பான் பயணத்திற்குத் திட்டமிட்டு வருகிறார்கள்!

பெரியார் உலகமயமாகிறார்;
உலகம் பெரியார் மயமாகிறது!

குறிப்பிட்ட அளவே வெளிநாட்டுப் பிரதிநிதிகள் (Delegates) கலந்துகொள்ள வாய்ப்பு என்பதால், முந்திக் கொண்டு, கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், விரைந்து அடுத்த தகவலுக்காகக் காத்திருந்து, தந்தை பெரியாரின் ‘மண்டைச் சுரப்பை’ உலகு தொழும், சூரியன் நாட்டில் சுயமரியாதை முழக்கம் கேட்டு, மகிழ ஆயத்தமாவீர்களாக!

பெரியார் அனைவருக்கும் உரியார், மறவாதீர்!

பெரியார் உலகமயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது!

கி.வீரமணி

  தலைவர்,

   திராவிடர் கழகம்

சென்னை       

5.6.2026       

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *