ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தஞ்சையில் எனது (கி.வீரமணி) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

 நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைத்து அப்பகுதி மக்களை ஏமாற்றியது போதாதா?

இப்பொழுது டெல்டா மாவட்டங்களிலும் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது!

தமிழ்நாடு அரசை அலட்சியப்படுத்தி ஆணையா?

கட்சிகளைக் கடந்து பங்கேற்பீர் தோழர்களே!

அரசியல், ஆசிரியர் அறிக்கை

நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க வந்தபோது, அந்த நிறுவனம் அப்பகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை; இப்பொழுது அரியலூர், கடலூர், உரத்தநாடு பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் தோண்ட மாநில அரசின் கவனத்துக்குக்கூட கொண்டு வராமல் முனைவது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசின் போக்கினை எதிர்த்து வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு எனது தலைமையில் திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது; கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் பங்கேற்குமாறு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நெய்வேலியில் ஒன்றிய அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்கு அப்பகுதி விவசாய மக்கள் வரவேற்று,  தங்களது நிலத்தை – உரிய நட்ட ஈடு இல்லை என்பதை அறிந்தும் கூட மனமுவந்து தர முன்வந்ததற்கு முக்கிய காரணங்கள் இரண்டு.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு 

அப்பகுதி விவசாய மக்கள் மனமுவந்து 

ஆதரவு கொடுத்தது ஏன்?

1. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்; தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும்.

2. நிலம் கொடுத்த கிராம மக்களின் பிள்ளைகளின் வேலை வாய்ப்புக்கும் அப்போது உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

காலப் போக்கில், இந்த வாக்குறுதிகளும், இவர்கள் நாக்கில் தடவப்பட்ட தேனும், கற்பனைகளாயின!

‘‘அசாமில் உள்ளவற்றிற்கு, உரிமத் தொகை அளிப்பது போல் நரிமணம் பெட்ரோலுக்கும், நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதற்குமான ‘‘ராயல்டி” தொகையை தமிழ் நாடு அரசுக்குக் கொடுக்கவேண்டுமென்ற திராவிடர் கழகத்தின் இடையறாத போராட்டம், தமிழ்நாடு முழுவதும் பேரணி, சுவரெழுத்துகள் – மக்களின் பெருந் திரள் ஆர்ப்பாட்டம்” காரணமாக அதில் வெற்றி பெற்று, தமிழ்நாடு அரசு அதனை ஒன்றிய அரசிடமிருந்து, அந்த நிறுவனத்திடமிருந்து பெற்று வருகிறது.

அது ஒன்றைத் தவிர, மீண்டும் வளர்ச்சி, இரண்டாம் சுரங்கம், மூன்றாம் சுரங்கம் என்று கூறி, பல்லாயிரக் கணக்கில் நமது ஏழை விவசாயிகளின் நிலங்களை நிறுவனம் பெறத் துடிக்கிறது!

தமிழ்நாட்டிற்குப் பதில் வடமாநிலங்கள்தான் பயன் பெறுகின்றன. பல யூனிட்டுகள் அங்கே எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், மீண்டும் புதுப்புது சுரங்கம் என்பது ‘யார் தலையில் மிளகாய் அரைக்க’ என்பதே தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடற்ற உரிமைக் கேள்விக் குரலாகும்!

‘‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை” என்ற கிராமியப் பழமொழிபோல், காவிரி டெல்டா பகுதியையும் ஆக்கிரமித்து, இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க, ஒன்றிய பா.ஜ.க. அரசு, மாநில அர சினைக்கூட கலந்து ஆலோசிக்காமல் ‘தானடித்த மூப்பாகவே’ நிலக்கரி அமைச்சரகம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது – வேதனையானது மட்டுமல்ல, வன்மையான கண்டனத்திற்கும் உரியதாகும்!

 டெல்டா பகுதிகளில் 

நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதா?

இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த 3 பகுதிகள் இடம்பெற்றுள்ளன!

1. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி.

2. கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்குப் பகுதி.

3. தஞ்சை மாவட்டம் உரத்தநாடு பகுதியில் உள்ள வடசேரி – ஆகிய பகுதிகள்.

‘‘ஒட்டகம்” உள்ளே நுழைய தலைநீட்டுகிறது; இந்த நெய்வேலி நிறுவனத்தையே லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனம் என்ற நிலையை மாற்றி, அதை கார்ப்ப ரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் மறைமுகத் திட்டமும் இதில் பதுங்கியிருக்கும் நிலையில், இதன் விரிவாக்கம் எதை நோக்கிச் செல்லுகிறது?

யாருக்குப் பயன்பட, இந்த விவசாயிகளின் வயிற்றில் அடித்து,  வாரிசுதாரர்களின் பங்கீட்டில் ஒரு கொடுமை தீராத நிலையில், மேலும் காவிரி டெல்டா விவசயிகளை இப்படிக் கொடுமைப்படுத்திடுவது எவ்வகையில் நியாயம்?

இதுதான் குஜராத் மாடலா?

வளர்ச்சி மாடலா?

பயிர் விளைச்சல் நிலங்களை பாலைவனமாக்குவதா?

இது ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதி – அறிவிப்பு களுக்கு நேர் முரணானது என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துள்ளார்!

தஞ்சையில் ஏப்ரல் 8 ஆம் தேதி 

மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம்!

இத்திட்டம் ‘அறவே கைவிடப்படல்’ அவசரம், அவசியம்!

இதனை வலியுறுத்தி வருகிற 8.4.2023 மாலை 4 மணி யளவில் தஞ்சையில் எனது தலைமையில் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது!

இதில், திராவிடர் கழகம் மட்டுமல்லாமல், கட்சி வேறுபாடின்றி, அனைத்து டெல்டா பகுதி விவசாயி களும், கட்சிகளும், பொது அமைப்பாளர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அவர்களை வேண்டிக் கொள்கிறோம்.

இது முதல் கட்டமாக தஞ்சை டெல்டா பகுதியில் தொடங்கினாலும், தேவைப்பட்டால், தமிழ்நாடு முழுக்க அறவழியில் இது பரவிடும்.

கட்சிகளைக் கடந்து 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பீர்!

எனவே, தஞ்சை கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட் டணிக் கட்சித் தோழர்கள் மட்டுமல்லாமது, அனைத்து விவசாயப் பெருங்குடி மக்கள், விவசாயத் தொழி லாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள அன்பழைப்பை விடுக்கிறோம்.

உரிமைக்குக் குரல் கொடுப்பது முக்கியம் அல்லவா?

டெல்டா பாலைவனம் ஆக அனுமதிக்கலாமா?

ஒன்று சேர்வோம், உரிமையைக் காப்போம்!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

5.4.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *