புதுடில்லி, ஜூன் 1- நீட் நுழைவுத்தேர்வைத் தொடர்ந்து, கியூட் நுழைவுத்தேர்விலும் மாணவர்களின் பொறுமையை தேசிய தேர்வு முகமை சோதித்துள்ளது. நாடு முழுவதும் பல தேர்வு மய்யங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு தொடங்கியதில் பல மணி நேர தாமதம் ஏற்பட்டதால் ஏராளமான மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாயினர். 3,700 பேர் தேர்வு எழுதாமலேயே சென்று விட்டனர்.
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத்தேர்வு (கியூட்-யூஜி) கடந்த 2022இல் அறிமுகம் செய்யப்பட்டது. மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் கியூட் நுழைவுத்தேர்வை பின்பற்றலாம். இதனால், நாட்டின் 2ஆவது மிகப்பெரிய நுழைவுத்தேர்வாக கியூட் உள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான கியூட்-யூஜி தேர்வு கடந்த 11ஆம் தேதி தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பக்ரீத் விழா காரணமாக சில தேர்வுகள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு, மே 30 மற்றும் ஜூன் 6, 7ஆம் தேதிகளில் நடத்துவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்நிலையில், கியூட் யூஜி நுழைவுத்தேர்வு நேற்று முன்தினம் (30.5.2026) நாடு முழுவதும் பல தேர்வு மய்யங்களில் நடந்தது. காலை 9 மணிக்கு தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பல தேர்வு மய்யங்களில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
மாணவர்கள் தேர்வு மய்யங்களில் தயாராக அமர்ந்திருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு தொடங்காததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். 2 மணி நேரமாகியும் தேர்வு தொடங்காத நிலையில் சில தேர்வு மய்யங்களில் இருந்து மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் சில இடங்களில் தேர்வு மய்யத்திற்குள் அனுமதிக்காமல் மாணவர்கள் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டனர்.
இதனால் கடும் வெயிலில் நின்றபடி மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாமல் முழித்தனர். தேர்வு தொடங்குவதில் தாமதம் குறித்து தேர்வை மய்யம் தரப்பிலோ, தேசிய தேர்வு முகமை தரப்பிலோ எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் 3 மணி நேரத்திற்கும் மேல் தாமதத்திற்கு பிறகு தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு மத்தியில் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சிலர் தேர்வு தொடங்கும் முன்பாகவே கிளம்பிச் சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து, பிற்பகலில் நடக்க இருந்த தேர்வு நேரத்தில் மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டது. அதன் எக்ஸ் பதிவில், ‘‘தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில மய்யங்களில் கியூட் நுழைவுத்தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இக்கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது. எந்தவொரு மாணவரும் பாதிக்காத வகையில், முழுமையான கூடுதல் கால அவகாசத்துடன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தாமதம் காரணமாக, மதிய நேர தேர்வு அட்டவணை திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு தொடங்கும். மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறது. காலை நேர தேர்வில், தாமதத்திற்குப் பிறகு தேர்வு தொடங்கும் முன்பாகவே கிளம்பிச் சென்ற 3,765 மாணவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும்’’ என அறிவிக்கப்பட்டது.
தேர்வுக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளை மேற்கொண்ட டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான கே.கீர்த்திவாசன், ‘‘சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கியூட் யூஜி தேர்வின் காலை நேர அமர்வு தொடங்குவதில் சுமார் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இக்கோளாறு எங்கள் தொழில்நுட்பக் குழுக்களால் உடனடியாகக் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டது. தேர்வின் நம்பகத்தன்மைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், தேர்வு தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்’’ என்று கூறப்பட்டது. சமீபத்தில் வினாத்தாள் கசிந்ததாக நாடு முழுவதும் நடந்த நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு விரைவில் நடத்தப்பட இருக்கிறது. தற்போது கியூட் தேர்விலும் குளறுபடி ஏற்பட்டிருப்பது தேசிய தேர்வு முகமையின் திறனை கடும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
