புதுடில்லி, மே 29 நீட் மறுதேர்வு வினாத்தாள்களை இந்திய விமானப்படையின் விமானங்களில் கொண்டு செல்வது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஒன்றிய அரசு ஆராய்கிறது.
மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3ஆம் தேதி நடத்தப்பட்டது. சுமார் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த நிலையில், தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக கடந்த 7ஆம் தேதி குற்றச்சாட்டு எழுந்தது.
‘நீட்’ மறு தேர்வு
இதைத் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஅய் வழக்குப் பதிவு செய்து 13 பேரை கைது செய்துள்ளது. இந்நிலையில், நீட் மறுதேர்வினை எவ்வித குறைபாடுகளுமின்றி நடத்துவதை உறுதி செய்யும் வகையில், வினாத்தாள்களை கொண்டு செல்ல இந்திய விமானப்படை விமானங்களை பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஒன்றிய அரசு ஆராய்ந்து வருகிறது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று (28.5.2026) நடந்த உயர்மட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இக்கூட் டத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் மற்றும் கல்வி அமைச்சக மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நீட் தேர்வு வினாத்தாள்களை கொண்டு செல்ல விமானப்படை விமானங்களை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து அமைச்சர்களும் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, பிரதமர் மோடியின் இறுதி ஒப்புதலைப் பெறுவதற்காக இந்த யோசனை அவரிடம் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீட் மறுதேர்வுக்கான ஏற்பாடுகளை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், தேர்வு நடைமுறைகள் தொடர்பான ஒவ்வொரு விவரமும் அவருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேசிய தேர்வு முகமை தேர்வுகளை நடத்துவது தொடர்பான அரசின் உத்தரவாதங்கள் பற்றி விளக்கம் அளிக்க ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வி செயலர் வினீத் ஜோஷி, தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் மற்றும் சிபிஅய் இயக்குநர் பிரவீன் ஆகியோர் இன்று ஆஜராக நாடாளுமன்ற குழு சம்மன் அனுப்பி உள்ளது.
