‘‘தந்தை பெரியாரின் சிகிச்சை முறை என்பது மருந்து கொடுத்து குணப்படுத்துவது அல்ல; அறுவைச் சிகிச்சை முறைதான்!’’
சென்னை, மே 28 ‘‘தந்தை பெரியாரின் சிகிச்சை முறை என்பது மருந்து கொடுத்து குணப்படுத்துவது அல்ல; அறுவைச் சிகிச்சை முறைதான்!’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற 200 ஆவது கூட்டம்!
கடந்த 23.5.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற 200 ஆவது கூட்டத்தில், ‘‘தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை’’ என்னும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
தந்தை பெரியார் அவர்கள் ஒரு எதார்த்த மனிதர். உண்மையைப் பேசும்போது எப்படி பார்க்க வேண்டும் என்று அய்யாவின் முன்னுரைகளை எல்லாம் படிக்கும்போது, அவர் சொன்னது வியப்பாக இருக்கும். உண்மையை, அதன் முழு நிர்வாணத் தன்மையில் பார்க்க வேண்டும் என்றார்.
உடல் பரிசோதனை செய்வதற்கு, மருத்துவப் பரிசோதனைக்கு நாம் போகிறோம். அல்லது குறைந்த பட்சம் ஈசிஜி எடுக்கப் போகிறோம். இதயம் எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. நான் சட்டை அணிந்துகொண்டு, ஒப்பனைகள் செய்து கொண்டு, கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு சென்று, ஈசிஜி எடுங்கள் என்று சொன்னால், ஈசிஜி எடுக்க முடியாது. அப்படியே ஈசிஜி எடுத்தாலும் அது ஈசிஜியாக இருக்காது. அது வேற ஜியாக இருக்குமே தவிர, ஈசிஜியாக இருக்க முடியாது. ஆகவே, ஈசிஜி எடுக்கவேண்டும் என்றால், சட்டையைக் கழற்ற வேண்டும். உடலில் சில இடங்களில் ‘ஜெல்லி’ (ECG Gel) தடவுவார்கள். பழைய முறையில் பாத்தீர்கள் என்றால், ஈசிஜி எடுத்தவுடன் குளித்தாகவேண்டும். இப்பொழுது இருக்கின்ற அறிவியல் உலகில், அது போன்ற நிலை இல்லை.
‘‘என்னுடைய முறை என்பது மருந்து கொடுத்து குணப்படுத்துவது அல்ல’’ – தந்தை பெரியார்!
ஆகவே, நிர்வாண தன்மை என்றார் அய்யா. அதே மாதிரி அறுவை சிகிச்சையைப்பற்றி பெரியார் அவர்கள் சொன்னார், ‘‘என்னுடைய முறை என்பது மருந்து கொடுத்து குணப்படுத்துவது அல்ல’’ என்றார். ஏனென்றால், மருந்து கொடுத்து குணப்படுத்த முடியாது என்கிறபோதுதான் அறுவைச் சிகிச்சைக்குப் போகிறோம்.
அறுவைச் சிகிச்சை நிபுணர்களும், மருந்து கொடுக்கிற நிபுணர்களும் கொஞ்சமும் ஒத்துப் போக மாட்டார்கள். எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்று மருந்து கொடுக்கிற நிபுணர் சொல்வார்; ‘‘இல்லீங்க, இதைப் பார்த்துக்க முடியாதுங்க, உடனே அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும்; கத்தி வைக்க வேண்டியதுதான்’’ என்று அறுவைச் சிகிச்சை மருத்துவர் சொல்வார். அதுபோல, தந்தை பெரியார் தன்னை பற்றிச் சொன்ன அறிமுகங்களை எல்லாவற்றையும் பாருங்கள்; அந்தக் கூர்மையைப் பற்றிச் சிந்திக்கச் சொன்னார் அல்லவா! ‘‘என்னுடைய முறை இருக்கிறதே, அது கையை வெட்டினால் ஒழிய, மனிதன் பிழைக்க மாட்டான் என்று சொன்னால், அந்தக் கையை, உடலின் ஒரு பாகத்தை வெட்டி எறிந்துவிட்டு, மனிதனைப் பிழைக்க வைக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமே தவிர, எனக்கு கை முக்கியம் அல்ல. அது மாதிரிதான் என்னுடைய சிந்தனை’’ என்று தாராளமாகச் சிந்திக்கக் கூடியவர் தந்தை பெரியார் அவர்கள்.
எதிரிகளுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால்…
அதனாலேயே, ‘‘நான் ஒரு சுதந்திர மனிதன் மட்டு மல்ல, தாராள சிந்தனைக்காரன்’’ என்றார். என்னுடைய கருத்திலிருந்து, நான் யாருக்காகவும் பின்வாங்க மாட்டேன் என்று சொல்லுகிறார். அதற்கு ஒரு முன் உதாரணத்தைச் எடுத்துச் சொல்லவேண்டுமானால், அன்னை மணியம்மையாருடைய திருமணம் என்பது தான். இன்றைய வரையில் அதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால், ‘‘72 வயதுக்காரர் ஒரு சின்ன பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டாரு, அது நியாயமா?’’ என்பார்கள்.
ஆனால், புராணத்தில் இதுபோன்று எத்தனையோ வந்திருக்கிறது, அது வேறு விஷயம். அங்கே போக வேண்டிய அவசியம் இல்லை. கூட இருக்கிற தோழர்கள், அதை எப்படி், எதற்குப் பயன்படுத்துவார்கள் என்பதும் தந்தை பெரியாருக்குத் தெரியாதது இல்லை. வேறு காரணங்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள், அதற்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும்; தனக்கு எதிராகப் போகும் என்பதையும் தெரிந்துதான் வைத்திருந்தார். மற்றவர்களுக்கு அந்தத் துணிச்சல் வராது.
‘‘தேவையில்லாத ஒரு மாநாடு – இந்த மாநாட்டிற்கு என்னை அழைத்திருக்கிறீர்கள்!’’
நம்முடைய அனுபவமே என்னவென்றால், ஒரு கூட்டத்துக்குப் போனால், அதுவும் அது வேற ஆட்கள் கூட்டம் என்றால், நம்முடைய கருத்தை அதிகமாக அங்கே சொல்லக்கூடாது என்று நினைப்போம். ஆனால், அய்யாவிடம், அந்த விஷயமே கிடையாது. வெற்றிலைப் பாக்குக் கடைக்காரர்கள் மாநாடு நடத்தினார்கள். மதுரைக்குப் பக்கத்தில் நடைபெற்ற அந்த மாநாட்டிற்கு அய்யாவை அழைத்திருந்தார்கள். எல்லாருக்கும் ஆச்சரியம், வெற்றிலை, பாக்கு போடாதவர் தந்தை பெரியார். அவருக்குப் பல்லே கிடையாது. அப்படி இருக்கையில், வெற்றிலைப் பாக்கு மாநாட்டில் என்ன பேசப் போகிறார் அய்யா என்று நினைத்தார்கள்.
மாநாட்டில் அய்யா உரையைத் தொடங்கும்போது, ‘‘தேவையில்லாத ஒரு மாநாடு – இந்த மாநாட்டிற்கு என்னை அழைத்திருக்கிறீர்கள்’’ என்று பேசத் தொடங்கி னார்.
இந்தத் தைரியமும், இந்தத் தெளிவும் வேற எந்தத் தலைவருக்கும் வராது.
தந்தை பெரியார் அவர்களுக்குச் சென்னை மாநகராட்சி (கார்ப்பரேஷன்) சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டபோது, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவரும், சிறந்த கால்பந்து சாம்பியனுமான திரு.சம்பந்தம் அவர்கள் மேயராக இருந்தார். அந்த விழாவில் பெரியார் அவர்களுக்கு ஒரு பெரிய வெள்ளிப் பேழை (பெட்டி) வழங்கி, வரவேற்பு மடல் வாசித்துக் கவுரவிக்கப்பட்டது.
ஆனால், இந்த விழாவிற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ‘பீப்பிள்ஸ் பார்க்’ (People’s Park) அருகில் மைனர் மோசஸ் போன்றவர்களும், சில தொண்டர்களும் திரண்டு வந்து கடுமையான எதிர்ப்பைக் காட்டினர்.
ஒவ்வொரு ஆண்டும் மேயர் பதவியேற்கும் போது அல்லது இது போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது, மைனர் மோசஸ் உள்ளிட்ட எதிர்ப்பாளர்கள் கருப்புக் கொடி காட்டுவது வழக்கம். அன்றைய தினமும் அவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்துக் கலவரத்தில் ஈடுபட்டனர்; தாக்குதல்களும் நடத்தினார்கள்.
இருப்பினும், இந்த அச்சுறுத்தல்களையும் எதிர்ப்புகளையும் மீறி, பெரியாரின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகத் திரண்டு வந்திருந்தனர். கடுமையான போராட்டங்களுக்கு மத்தியிலும், மேயர் சம்பந்தம் அவர்கள் பெரியாரைப் புகழ்ந்து பேசி, அந்த வெள்ளிப் பேழையை அவரிடம் மிகச் சிறப்பாக ஒப்படைத்தார். நிறைவாக, தந்தை பெரியார் அவர்கள் அங்கே கூடி இருந்த மக்கள் மத்தியில் தனது நெடிய சிறப்புரையை ஆற்றினார்.
இத்தனை கவுன்சிலர்கள் இருப்பதால், லஞ்சத்தை இத்தனை பேருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது!
‘‘என்னுடைய தொண்டை நீங்கள் அங்கீகரித்ததற்கு ரொம்ப நன்றி. மிக முக்கியமாக, இந்த கார்ப்பரேஷனே (மாநகராட்சி) இல்லாமல் இருந்தால், இந்த ஊழலும், லஞ்சமும் ரொம்பக் குறைவாக இருக்கும். ஒரு தனி அதிகாரி மட்டும் இருந்தால், அவர் மட்டும்தான் லஞ்சம் வாங்குவார். ஆனால், இங்கு இத்தனை கவுன்சிலர்கள் இருப்பதால், லஞ்சத்தை இத்தனை பேருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது’’ என்று அவர் பேசத் தொடங்கினார்.
அவர் இப்படிப் பேசியதைக் கேட்டு அங்கே இருந்த அனைவரும் கைதட்டிச் சிரித்தார்களே தவிர, ‘‘அய்யா, எங்களை இப்படிப் பேசுகிறீர்களே!’’ என்று யாரும் எதிர்த்துப் பேசவில்லை. அதற்குக் காரணம், அவருடைய பழுத்த அனுபவம், வயது, தெளிந்த மற்றும் திறந்த மனம், யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்காத அவருடைய நேர்மையான குணம் ஆகியவையே ஆகும்.
அப்படி வரும்போது நண்பர்களே! அன்னை மணியம்மையார் அவர்களுடனான திருமணம் பற்றிப் பேசுகின்றபோது, பெரியாருக்கு இந்தச் சிந்தனைகள் வருகின்றன. பெரியாருடைய வீட்டில், அவருடைய தந்தையார் உயிரோடு இருக்கும்போதே பெரியாரே ஓர் அறக்கட்டளையை உருவாக்குகிறார். ஈ.வெ.கிருஷ்ண சாமி, ஈ.வெ.ராமசாமி ஆகிய இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர். ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள், ஈ.வி.கே. சம்பத் அவர்களின் தந்தையாவார். அவர் சற்று அதிகச் செலவு செய்யக்கூடியவராக இருந்தார்; ஆனால், பெரியாரோ மிகவும் சிக்கனமானவர். ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் நிறைய பணம் வாங்கிச் செலவு செய்வதைப் பெரியார் கவனித்தார்.
இராஜகோபாலாச்சாரியார்
பெரியாருக்கு நெருங்கிய நண்பர்!
உடனே பெரியார் அவராகவே முன்வந்து, அப்போது சேலத்தில் வழக்குரைஞராக இருந்த இராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) உட்படப் பலரைத் தொடர்புகொண்டார். 1901, 1911 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ‘வெங்கட நாயக்கர் அறக்கட்டளை’ என்ற ஒன்றை உருவாக்கலாம் என்று முடிவு செய்து, அதற்கான ஆவணங்களை எழுதினார். இராஜகோபாலாச்சாரியார் தமக்கு நெருங்கிய நண்பர் என்ற முறையில் அவரிடம் இது குறித்துப் பேசி ஆலோசனைகளையும் பெற்றார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அந்த அறக்கட்ட ளையில் ஒரு முக்கிய ஏற்பாட்டைச் செய்தார்கள். பெரியாருக்குக் குழந்தைகள் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அவருடைய சகோதரர் கிருஷ்ணசாமி அவர்களுக்குப் பிள்ளைகள் (ஈ.வி.கே. சம்பத் உள்ளிட்டோர்) இருந்தனர். எனவே, அறக்கட்டளையின் சொத்துகளை விற்கக் கூடாது என்றும், அதிலிருந்து வரும் வருமானத்தை மட்டும் அவர்கள் தங்களின் சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்த ஏற்பாட்டில் வகுக்கப்பட்டது.
அவர்களுடைய சொத்துகளை இரண்டு பாகமாகப் பிரித்தவுடனே, அவை தனித்தனிப் பாகங்களாக வர வேண்டும் என்ற ஏற்பாடு இருந்தது. அதை அவர்கள் கடைப்பிடித்தும் வந்தனர். அவ்வாறு கடைப்பிடித்து வரும்போது, அய்யாவினுடைய துணைவியார் நாகம்மையார் அவர்கள் 1933 மே 11 அன்று மறைந்து விடுகிறார். அவருக்கு (நாகம்மையாருக்கு) முன்னரே, அவர்களுக்குப் பிறந்த ஒரு பெண் குழந்தையும் பிறந்து சில நாட்களிலேயே இறந்து போனது அனைவருக்குமே தெரியும்.
ஒரு நிரந்தரமான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்று அய்யா நினைத்தார்!
எனவே, இந்தச் சொத்துக்கள் தனக்குப் பிறகு யாருக்குச் சென்று சேர வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அந்தப் பத்திரத்தின்படி, சொத்துக்களில் இருந்து மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையும், ஆண்டுதோறும் ஒரு பெரிய தொகையும் வரும். ஏனெனில், பழைய ஈரோட்டின் பெரும் பகுதிச் சொத்துகள் அனைத்தும் அவர்கள் கைவசமே இருந்தன. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்தச் சொத்துக்களுக்கு ஒரு நிரந்தரமான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்று அய்யா நினைத்தார்.
‘பெரியார் சுயமரியாதைப்
பிரச்சார நிறுவனம்’
இது ஏதோ திடீரென்று எடுத்த முடிவல்ல; இதற்கு முன்னரே, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் ஒரு பொது அமைப்பாக மாற வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்த அமைப்பைப் பற்றி அவர் 1937-லேயே சிந்திக்கத் தொடங்கிவிட்டார். சுயமரியாதை இயக்க மாநாடுகளிலேயே இதற்கான தீர்மானங்களையும் அவர் நிறைவேற்றியுள்ளார். அவ்வாறு, இந்தச் சொத்துக்களைப் பொது உடை மையாக்கிப் பராமரிப்பதற்காக ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’ என்று சொல்லக்கூடிய இந்த அமைப்பை உருவாக்கும் ஏற்பாட்டை அவர் 1937-லேயே செய்திருந்தார்
பெரியார் தனக்குப் பின் இந்த அமைப்பை வழி நடத்த யாரை நியமித்தால் சரியாக இருக்கும் என்று அவ்வப்போது சிந்தித்தார். ஆனால், அதை அமைப்பின் பதிவுகளை அவர் முறைப்படி பதிவு செய்யவில்லை. அதேநேரம், யாரும் எளிதில் அறிய முடியாத அள விற்குத் ரகசியக் குறிப்புகளாக அதைத் தன்வசம் வைத்திருந்தார். இந்த அமைப்பு 1952 இல் பதிவு செய்யப்பட்டது என்றாலும், இதன் உருவாக்கம் 1937-இலேயே தொடங்கிவிட்டது என்று அவர் கருதினார். இப்படி அவர் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, காலப்போக்கில் பல சூழ்நிலைகள் மாறின.
விடியும் வரை திண்ணையிலேயே படுத்துத் தூங்குவார்!
குறிப்பாக, அன்னை நாகம்மையார் அவர்கள் மறைந்த பிறகு பெரியார் முற்றிலும் தனித்துவிடப் பட்டார். அவருடைய அந்தத் தனிமை நிலையைப் பற்றிப் பல நேரங்களில் இரவில் கூட உருக்கமாகக் கூறுவதுண்டு. அவ்வளவு பெரிய வசதி படைத்தவராக இருந்தபோதிலும், நள்ளிரவு அல்லது அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு வரும்போது, உள்ளே இருப்பவர்கள் கதவைத் தாழ்ப்பாள் போட்டிருந்தால், அவர்களின் தூக்கத்தைக் கெடுக்கக் கூடாது என்று நினைப்பார். ‘அவர்களை ஏன் தட்டி எழுப்ப வேண்டும்? திண்ணை யிலேயே படுத்தால் நல்ல தூக்கம் வருமே’ என்று நினைத்து, விடியும் வரை அந்தத் திண்ணையிலேயே படுத்துத் தூங்கிவிடுவார்.
சில நேரங்களில் வெளியூரிலிருந்து வரும்போது அவருக்கு நல்ல பசியாக இருக்கும். ஆனால், வீட்டில் உணவளிக்க அவருடைய வாழ்க்கைத் துணையோ அல்லது மற்றவர்களோ இல்லாத சூழ்நிலை அப்போது இருந்தது. இதைப் பற்றியெல்லாம் பெரியார் சொல்லக் கேட்டிருக்கிறோம். அன்னை மணியம்மை யார் அவர்களும் பல தருணங்களில் இந்தத் துயர மான நாட்களைப் பற்றி மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
(தொடரும்)
